அசராத அதிரடி நாயகன் அஸ்வின்... இந்திய அணியின் மகத்தான 'ஆல் ரவுண்டர்' ஆன கதை!

அசராத அதிரடி நாயகன் அஸ்வின்... இந்திய அணியின் மகத்தான 'ஆல் ரவுண்டர்' ஆன கதை!
அசராத அதிரடி நாயகன் அஸ்வின்... இந்திய அணியின் மகத்தான 'ஆல் ரவுண்டர்' ஆன கதை!

ஆங்கிலேயர்கள் உருவாக்கிய கிரிக்கெட்டில் கோலோச்சி வரும் தமிழர். பேட்ஸ்ட்மேன்களுக்கு பஞ்சமில்லாத இந்திய கிரிக்கெட் அணியில் தனது அபாரமான பந்துவீச்சுத் திறன் மூலம் எதிரணி பேட்ஸ்மேன்களை திக்குமுக்காடச் செய்பவர். டெஸ்ட் போட்டிகளில் மிகக்குறைந்த போட்டிகளில் மின்னல் வேகத்தில் 350 விக்கெட்டுகளை வீழ்த்திய உலகின் தலைசிறந்த பவுலர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர். ஒரே டெஸ்ட் போட்டியில் ஐந்துக்கும் கூடுதலான விக்கெட்டுகள் மற்றும் சதத்தை விளாசிய அசத்தலான ஆல் ரவுண்டர் என்ற சாதனையை மூன்று முறை நிகழ்த்தியவர் என கிரிக்கெட் உலகின் பெரும்பாலான 'வின்'களை தன் பக்கம் வைத்துள்ள அஸ்வினின் சாதனைகளை அடுக்கு மொழியில் சொல்லிக்கொண்டே இருக்கலாம். 

தந்தையின் கிரிக்கெட் ஆசையை தனக்குள் வெறியாக மாற்றிக்கொண்டு, அதில் சாதித்தும் காட்டுபவர் அஸ்வின். தமிழகத்தின் தலைநகரான சென்னை மாநகரின் மேற்கு மாம்பலத்தில் கடந்த 1986-ல் பிறந்த அஸ்வின், கிரிக்கெட்டில் கில்லியாக ஜொலிக்க களமாக அமைந்தது சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம்.

இப்போது அதே மைதானத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது ஐந்தாவது சதத்தை பதிவு செய்துள்ளார். இங்கிலாந்து கேப்டன் ரூட், அஸ்வினின் சதத்தை தடுக்கும் நோக்கில் ஃபீல்டர்களை வைத்து சுத்து போட்ட போதும், அசராமல் தனது ஆட்டத்தில் அதிரடி காட்டினார் அஸ்வின். 

சென்னை ஆடுகளம் குறித்து இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் அதிருப்தி தெரிவித்திருந்த போதும், “பழைய ஃபேஷனில் கிரிக்கெட் விளையாடினால் இங்கு ரன் குவிக்கலாம்” என சொன்னதோடு, அதை செய்தும் காட்டினார் அஸ்வின். 

ஓப்பனிங் பேட்ஸ்மேனாகவும், மீடியம்-பேஸ் பவுலராகவும் தனது கிரிக்கெட் கெரியரை தொடங்கியவர் அஸ்வின் என சொல்கின்றனர் அவரது பால்ய கால நண்பர்கள். அஸ்வின் படித்த செயின்ட் பேட் ஸ்கூல்தான் அவரை ஸ்பின் பவுலராக மாற்றியுள்ளது. அங்கிருந்த கிரிக்கெட் பயிற்சியாளர்கள் கொடுத்த ஊக்கம்தான் அந்த மாற்றத்திற்கு காரணம். ஸ்பின் பவுலிங் வீசவேண்டுமென்றால் விரல்களுக்கு அதிக அழுத்தும் கொடுக்க வேண்டி இருக்கும். அதனால் வலியும் இருக்கும். ஆனால், அதையே ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு தன்னை மெருகேத்தியுள்ளார் அஸ்வின். 

இளையோர் கிரிக்கெட்டில் தமிழக அணிக்காகவும், இந்திய அணிக்காகவும் விளையாடினார். 2008-இல் ஐபிஎல் டி20 லீக் ஆரம்பிக்கப்பட்ட போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாட தேர்வாகியிருந்தார் அஸ்வின். அது அவருக்கென ஓர் அடையாளத்தையும், அங்கீகாரத்தையும் ஏற்படுத்தியது.

2009-இல் இரண்டு ஐபிஎல் போட்டிகளில் விளையாடி இரண்டு விக்கெட்டுகளை அஸ்வின் வீழ்த்தி இருந்தார். அதற்கடுத்த ஆண்டு 12 போட்டிகளில் விளையாடி 13 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். அதோடு அதே ஆண்டில் நடைபெற்ற சாம்பியன்ஸ் லீக் டி20 கிரிக்கெட் தொடரிலும் 13 விக்கெட்டுகளை வீழ்த்தி லீடிங் விக்கெட் டேக்கரானார் அஸ்வின். அதன் மூலம் அதே ஆண்டு இந்திய அணிக்காக ஒருநாள் போட்டியிலும் அறிமுகமானார் அஸ்வின். அந்தப் போட்டியில் 38 ரன்கள் சேர்த்ததோடு, 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தார்.

தொடர்ந்து அடுத்த சில நாட்களில் டி20 போட்டியிலும் அறிமுகமானார். அணியில் விளையாட வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் விக்கெட் வீழ்த்தி தனது திறனை நிரூபித்தார். ஷார்ட்டர் பார்மெட் கிரிக்கெட்  என்பதால் பவுலிங் திறனை நிரூபித்த அஸ்வினால் பேட்டிங் திறனை நிரூபிக்க முடியாமல் போனது. 

அந்தச் சூழலில்தான் 2011 வாக்கில் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியில் அறிமுக வீரராக களம் கண்டார் அஸ்வின். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தனது முதல் போட்டியில் 9 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அந்தத் தொடரில் மொத்தமாக 22 விக்கெட்டுகளை மூன்று போட்டிகளில் வீழ்த்தியிருந்தார். அதே தொடரில் தனது முதல் டெஸ்ட் சதத்தையும் பதிவு செய்து ‘நான்  பவுலர் மட்டும் கிடையாது பேட்ஸ்மேனும் கூட’ என சொல்வதை போல தனது திறனை நிரூபித்தார். அதன்பிறகு இந்திய அணியில் தவிர்க்க முடியாத வீரரானர் அஸ்வின். 

சுழற்பந்து வீச்சில் விரல் வித்தை காட்டுபவர். இவரது கேரம் பால் சர்வதேச கிரிக்கெட்டில் மிக பிரபலம். இந்திய அணிக்காக 111 ஒருநாள் போட்டிகளில் அஸ்வின் விளையாடி 150 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 46 டி20 போட்டிகளில் விளையாடி 52 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆக்டிவாக விளையாடி வரும் அஸ்வின் இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் 11 அரை சதமும், 5 சதமும் விளாசியுள்ளார். அதோடு 76 போட்டிகளில் 394 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். விரைவில் 400 விக்கெட்டுகளை வீழ்த்திய பவுலர்களின் பட்டியலிலும் அஸ்வின் இணைய உள்ளார். 

அண்மையில் முடிந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரில் மூன்று போட்டிகளில் விளையாடி 12 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். அதோடு சிட்னி மைதானத்தில்  நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் விஹாரியுடன் பேட்டிங் கூட்டணி அமைத்து அந்த போட்டியை டிரா செய்திருந்தார். தற்போது நடைபெற்று வரும் இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் கூட 17-க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 

பார்ப்பதற்கு சீரியஸாக எதையேனும் சிந்தித்துக் கொண்டிருக்கும் நபர் போல அஸ்வின் இருந்தாலும், அவருக்கு சென்ஸ் ஆப் ஹியூமர் அதிகம் என்கின்றனர் அவருடன் பழகியவர்கள். 

அஷ்வினின் சாதனைகள் கிரிக்கெட்டில் தொடரட்டும்…

- எல்லுச்சாமி கார்த்திக்

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com