விடைபெற்ற குலாம் நபி ஆசாத்... அடுத்த மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் யார்? - ஒரு பார்வை

விடைபெற்ற குலாம் நபி ஆசாத்... அடுத்த மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் யார்? - ஒரு பார்வை
விடைபெற்ற குலாம் நபி ஆசாத்... அடுத்த மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் யார்? - ஒரு பார்வை

மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத்தின் பதவிக் காலம் பிப்ரவரி 15 அன்று முடிவடைய இருக்கிறது. இந்த நிலையில்தான் நேற்று அவருக்கு பிரியாவிடை நிகழ்ச்சி நடந்தது. இதில் பிரதமர் மோடி கண்கலங்கினார். இதற்கிடையே, குலாம் நபி ஆசாத்தின் பதவிக் காலம் முடிவடைய இருக்கும் ஒரு வாரத்திற்குள், காங்கிரஸ் ஒரு குழப்பத்தை எதிர்கொள்கிறது.

'மாநிலங்களவையில் அடுத்த எதிர்க்கட்சித் தலைவர் யார்?' என்பதுதான் அந்த குழப்பம். குலாம் நபி ஆசாத் இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக மாநிலங்களவையில் காங்கிரஸின் முகமாக இருந்து வருகிறார். 2014 முதல் மாநிலங்களவையில் ஒரே எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத் மட்டுமே.

அடுத்து குலாம் நபி ஆசாத் மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்க குறைந்தது ஏப்ரல் வரை காத்திருக்க வேண்டியிருக்கும். இதனால், அவருக்குப் பதிலாக புதிய தலைவரைத் தேட வேண்டிய நிலையில் காங்கிரஸ் இருக்கிறது. குலாம் நபி ஆசாத் எம்.பி.யாக இருக்கும் ஜம்மு - காஷ்மீர் தற்போது தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டசபை இல்லை. எனவே, அவருக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு கேரளா மட்டுமே. கேரளாவிலிருந்து மூன்று மாநிலங்களவை இடங்கள் ஏப்ரல் மாதத்தில் காலியாகிவிடும். காங்கிரஸ் கட்சி அவற்றில் ஒன்றை வைத்திருக்கிறது. அதை தேர்தலில் தக்க வைத்துக்கொள்ளும் நிலையில் உள்ளது.

இருப்பினும், கேரள அரசியலில் வலுவான அரசியல் உணர்வுகளைப் பார்க்கும்போது, மாநிலங்களவை இடத்தை ஒரு வெளிமாநிலவத்தருக்கு பரிந்துரைக்க கேரள காங்கிரஸ் ஒப்புக் கொள்ளும் சாத்தியம் இல்லை. ப.சிதம்பரத்தை மாநிலங்களவைக்கு அனுப்ப கேரள காங்கிரஸ் முன்பு மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. சிதம்பரம் பின்னர் மகாராஷ்டிராவில் இருந்து மாநிலங்களவை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஏற்கெனவே, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு எதிராக செயல்பட்ட ஜி-23 குழுவின் ஒரு பகுதியாக கடிதம் எழுதிய காரணத்தினால் குலாம் நபி ஆசாத் தனக்கு இருந்து சிறிய ஆதரவையும் இழந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இதனால் அவர் கேரளாவில் இருந்து மாநிலங்களவை எம்பியாக தேர்ந்தெடுக்க வாய்ப்பு மிகவும் குறைவே. எனவேதான் புதிய எதிர்க்கட்சித் தலைவரை தேர்ந்தெடுக்கும் நோக்கில் காங்கிரஸ் இருக்கிறது. மாநிலங்களவையில் அடுத்த எதிர்க்கட்சித் தலைவர் வரிசையில் காங்கிரஸின் மூத்த தலைவர்களான ஆனந்த் சர்மா, மல்லிகார்ஜுன் கார்கே, ப.சிதம்பரம் மற்றும் திக்விஜய் சிங் ஆகியோர் இருக்கின்றனர்.

ஆனந்த் சர்மா மூத்த ராஜ்யசபா உறுப்பினர். அவர் முதன்முதலில் 1984 ஆம் ஆண்டில் மாநிலங்களவையில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் 2004 முதல் உறுப்பினராக இருந்து வருகிறார். இருப்பினும், குலாம் நபி ஆசாத்தைப் போலவே, ஆனந்த் ஷர்மா காங்கிரஸின் சோனியா காந்தியை தலைவர் பதவியில் இருந்து நீக்க விரும்பிய ஜி-23 குழுவில் உள்ளார். இது அவருக்கு எதிராக செயல்படக்கூடும்.

அதற்கடுத்து இருப்பது ப.சிதம்பரம் மற்றும் திக்விஜய் சிங். இருவரும் காங்கிரஸின் மூத்த தலைவர்கள்தான். ஆனால், ப.சிதம்பரம் இந்தி நன்றாக பேச இயலாமையின் காரணமாக காங்கிரஸ் கட்சி அவரை எதிர்க்கட்சித் தலைவராக தேர்ந்தெடுப்பதை நிறுத்தக்கூடும் என்று அக்கட்சியில் உள்ளவர்கள் கூறியதாக 'இந்தியா டுடே' செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால், காங்கிரஸ் கட்சியில் ஏற்கெனவே இந்தி அல்லாத பேச்சாளர் ஆதீர் ரஞ்சன் சவுத்ரி மக்களவையில் கட்சித் தலைவராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

திக்விஜய் சிங் தனது மகனை மத்தியப் பிரதேச அரசியலில் நிலைநாட்ட முயற்சித்து வருகிறார். மாநிலங்களவையில் அவர் எதிர்க்கட்சி தலைவராக நியமித்தால், அது மத்திய பிரதேச மாநிலத்தில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். ஏற்கெனவே அங்கு காங்கிரஸ் மோதல்களால் பாதிக்கப்பட்டுள்ளது. இதுபோதாதென்று கூடுதலாக, சிதம்பரம் மற்றும் திக்விஜய் சிங் இருவரும் கடந்த காலத்தில் ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தியின் தலைமைத்துவ பாணியை கேள்விக்குட்படுத்தியவர்கள். இதனால் இவர்கள் இருவருமே சற்று கேள்விக்குறிதான்.

அடுத்து மல்லிகார்ஜுன் கார்கே. இவர் எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு முன்னணியில் இருப்பவராகத் தெரிகிறார். இவர் சோனியா காந்தி குடும்பத்தின் ஒரு தீவிரமான விசுவாசியாக இருந்து வருகிறார் மற்றும் ராகுல் காந்தியுடன் ஒரு நல்ல உறவை பேணி வருகிறார். மேலும் மேலே சொன்னவர்களை போல ஜி-23 குழு உட்பட சோனியா காந்தி குடும்பத்தை எதிர்க்கும் எந்தக் குழுவிலும் கார்கே இல்லை. அதுபோக மூத்த தலைவரும் கூட. இதனால் அவருக்கே அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. 2019 மக்களவைத் தேர்தலில் தோல்வியடைந்த பின்னர் 2020-இல் மல்லிகார்ஜுன் கார்கே மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

- மலையரசு

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com