Published : 18,Jul 2017 08:24 AM

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் எப்போது?

Local-body-polls-in-Tamil-Nadu-may-get-delayed-by-over-6-months

உள்ளாட்சித் தேர்தலை நடத்த காலக்கெடு விதிக்கக்கோரி திமுக தொடர்ந்த வழக்கில், மாநில தேர்தல் ஆணையம் பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணையை ரத்து செய்யப்பட்ட வழக்கும், இந்த ஆண்டு மே 16 ஆம் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்க பிறப்பிக்கப்பட்ட இடைக்கால உத்தரவு தொடர்பான வழக்கும் நிலுவையிலுள்ளன. இந்த நிலையில், திமுக சார்பில் கடந்த வெள்ளிக்கிழமை தொடரப்பட்ட புதிய வழக்கு நீதிபதி எம்.துரைசாமி முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. திமுக சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன், உள்ளாட்சித் தேர்தலை நடத்தக் கூடாது என்பதில், அரசும், மாநிலத் தேர்தல் ஆணையமும் கூட்டாக செயல்பட்டு வருவதாக குற்றம்சாட்டினார். மேலும், இதுதொடர்பாக பிறப்பிக்கப்பட்ட முந்தைய உத்தரவுகள் நிறைவேற்றப்படாததால், உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்க காலக்கெடு விதிக்க கோரினார்.

உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றங்களில் நிலுவையிலுள்ள வழக்குகளாலேயே உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. குறுக்கிட்ட நீதிபதி, உள்ளாட்சித் தேர்தலை நடத்த எவ்வித தடையும் இல்லை என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளதே என கேள்வி எழுப்பினார். விளக்கமளிக்க மாநில தேர்தல் ஆணையம் அவகாசம் கோரியது. அதனை ஏற்ற நீதிபதி துரைசாமி, தமிழக அரசின் தலைமைச் செயலாளர், நிர்வாகச் செயலாளர், ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் செயலாளர், மாநில தேர்தல் ஆணையர், தேர்தல் ஆணையத்தின் செயலாளர் ஆகியோர் 4 வாரங்களுக்குள் பதிலளிக்க உத்தரவிட்டார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்