Published : 09,Feb 2021 05:27 PM

'ராஜண்ணா ராஜ்யம்' வேண்டி அரசியல் என்ட்ரி... ஜெகனின் தங்கை இப்போது அதிரடி அரசியல்வாதி!

Jagan-Mohan-reddy-sister-Sharmila-and-Her-Political-entry

ஒருங்கிணைந்த ஆந்திராவின் முன்னாள் முதல்வரின் மகள் ஒய்.எஸ்.ராஜசேகர் ரெட்டியின் மகளும், தற்போதைய ஆந்திர முதல்வர் ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டியின் தங்கையுமான ஒய்.எஸ்ஷர்மிளா தற்போது ஒரு புதிய அரசியல் கட்சியை துவங்க தீர்மானித்துள்ளார். ஆனால், இவர் அரசியல் கட்சி துவங்க இருப்பது ஆந்திராவில் அல்ல, தெலங்கானாவில்.

கடந்த சில நாட்களாக ஷர்மிளா தனிக்கட்சி துவங்க உள்ளதாக பேச்சுக்கள் எழுந்த நிலையில் இன்று அதனை உறுதிப்படுத்தியிருக்கிறார். ஹைதராபாத்தின் ஆடம்பரமான ஜூபிலி ஹில்ஸில் உள்ள ஒய்.எஸ்.ஆர் குடும்ப இல்லமான லோட்டஸ் பாண்டில் உள்ள தனது இல்லத்தில் தனது தந்தையின் விசுவாசிகளை சந்தித்து ஆலோசித்தார்.

இந்தக் கூட்டத்தில் புதிய கட்சி குறித்து ஷர்மிளா ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ''தெலங்கானாவில் 'ராஜண்ணா ராஜ்யம்' (ஒய்.எஸ்.ஆரின் ஆட்சி) கொண்டுவருவேன். தெலங்கானாவில் தற்போது நல்ல அரசு அமையவில்லை. மறைந்த ஒய்.எஸ்.ராஜசேகர் ரெட்டி கனவு கண்ட நல்ல அரசான ராஜண்ணா ராஜ்யத்தை ஏன் கொண்டு வர முடியாது? ராஜண்ணா ராஜ்யத்தை தெலங்கானாவிலும் கொண்டுவர நாங்கள் பாடுபடுவோம்.

இறந்து பல ஆண்டுகள் கடந்துவிட்ட போதிலும் அவரது தந்தையின் புகழ் குறையவில்லை. அவரது ஆட்சி தங்கத்துக்கு சமமானது. அவரின் ஆட்சியில் ஒவ்வொரு விவசாயியும் ராஜாவைப் போலவே வாழ்ந்தனர். ஒவ்வொரு ஏழைகளுக்கும் அவர் வீடு கட்டினார். ஒவ்வொரு ஏழை மாணவருக்கும் நல்ல கல்வியும் வேலையும் கிடைப்பதை அவர் காண விரும்பினார். வறுமை ஒரு சாபம் என்று அவர் சொல்லிக்கொண்டிருந்தார். உடல்நலக் குறைவு ஏழைகளை கடன்களுக்குள் தள்ளுவதால், அவர் ஆரோக்கியஸ்ரியைக் கொண்டுவந்தார்.

ஆனால், இன்று இது நிலைமை அல்ல. எனக்கு ராஜண்ணா ராஜ்யம் திரும்ப வேண்டும். நாங்கள் மட்டுமே அதை கொண்டு வர முடியும் என்று நான் நம்புகிறேன். உங்களைப் போன்ற அடிப்படை யதார்த்தங்களும், அந்தந்த இடங்களில் நீங்கள் காணும் அனுபவங்களும் எனக்குத் தெரியாது. உங்கள் பரிந்துரைகளை எனக்குக் கொடுத்து அறிவுறுத்துங்கள். நான் உங்களைக் கேட்டு புரிந்துகொள்ள வந்திருக்கிறேன்,

image

நான் கள அளவில் நிலைமைகளைப் புரிந்துகொள்ள முயற்சிக்கிறேன். மற்ற எல்லா மாவட்டங்களின் தலைவர்களிடமும் பேசுவேன், மிக விரைவில் நான் ஒரு செயல் திட்டத்தை கொண்டு வருவேன்" என்று அவர் கூறினார். 2023 மாநில சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னர் தனது சொந்த அரசியல் கட்சியை உருவாக்கி, ஷர்மிளா தெலங்கானா அரசியலில் இறங்குவார் எனத் தெரிகிறது.

ஷர்மிளா யார்?

''நான் ராஜண்ணாவின் மகள், உங்கள் ஜெகன்னன்னாவின் சகோதரி. எனது பெயர் ஷர்மிளா''... இது 2012-ல் ஒரு கூட்டத்தில் உரையாற்றியபோது, ஷர்மிளா குறிப்பிட்ட வார்த்தைகள். ஆம், ஒய்.எஸ்.ராஜசேகர் மகள், ஜெகனின் தங்கை என்ற வாரிசு அடையாளத்துடன் அரசியல்வாதியாகவே ஷர்மிளா அரசியல் களத்தில் நுழைந்தவர் என்றாலும், அரசியலில் அவர் நுழைந்த சூழ்நிலை கொஞ்சம் வித்தியாசமானது. ஒய்.எஸ்.ராஜசேகர் இறந்த தருணத்தில் 2012-ல் ஜெகன் அரசியலில் தீவிரமாக இருந்த தருணம். அப்போது, சொத்து வழக்கில் ஜெகனை 2012-ல் மத்திய புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) கைது செய்தது.

ஜெகன் சிறைக்கு அனுப்பப்பட்ட மூன்று நாட்களுக்குப் பிறகு ஆந்திர மாவட்டத்தில் ஸ்ரீகாகுளத்தின் வடக்கு கடற்கரையில் நடந்த முதல் கூட்டத்தில்தான் ஷர்மிளாவின் அரசியல் என்ட்ரி. அண்ணன் ஜெகன் இல்லாத நிலையில் கட்சியை மேம்படுத்த தாயுடன் சேர்ந்து அரசியலில் முழுவதுமாக அடியெடுத்து வைத்தார் ஷர்மிளா. ஜெகன் சிறையில் இருந்தபோது அவருக்கு ஆதரவு திரட்டுவதற்காக ஒரு பாதயாத்திரையை நடத்தியிருந்தார். அன்று முதல் இப்போது வரை ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸின் முக்கிய நபராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

தொடர்ந்து ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸின் தேர்தல் பிரசாரங்களில் ஒரு பகுதியாக இருந்து வருகிறார். மேலும் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் தொண்டர்களிடையே இவருக்கு பெரும் ஆதரவு இருப்பதாக அறியப்படுகிறது. 2019 தேர்தல் பிரசாரத்தில் ஷர்மிளா ஒரு முக்கிய பங்கைக் கொண்டிருந்தார். அவரின் உதவியோடு ஜெகன் 2019 சட்டமன்றத் தேர்தலில் பெரும் வெற்றியைப் பெற்றார்.

image

அனில் குமார் என்பவரை ஷர்மிளா 1995-இல் திருமணம் செய்தார். இந்து பிராமண பெற்றோருக்குப் பிறந்த அனில் குமார் ஷர்மிளாவுடனான காதல் திருமணத்திற்குப் பிறகு கிறிஸ்தவ மதத்திற்கு மாறினார். தற்போது இந்த அனில் குமார் மதபோதகராக இருந்து வருகிறார். 1998 முதல் ஒரு மதபோதகராக இருந்து வருகிறார். இந்த தம்பதியினருக்கு ராஜா மற்றும் அஞ்சலி என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

ஏன் புதிய கட்சி?!

ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தெலங்கானாவில் ஒரு மாநில பிரிவு ஒன்றை வைத்திருந்தாலும், கட்சி முக்கியமாக ஆந்திராவில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. எனினும் தெலங்கானாவில் பெரும்பாலும் செயலற்ற நிலையில் உள்ளது. இதற்கிடையே, ஷர்மிளா தனது குடும்பத்தினரிடையே உள்ள வேறுபாடுகள் காரணமாக, ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸில் இருந்து பிரிந்து தனிக்கட்சி துவங்க இருக்கிறார் என்று ஆந்திர மாநில ஊடகங்கள் கூறுகின்றன. சமீபகாலமாக ஜெகனுடன் கருத்து வேறுபாடு அதிகரிக்கவே தற்போது ஷர்மிளா இந்த முடிவுக்கு வந்திருப்பதாக அந்த ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. எனினும் அண்ணனை எதிர்க்க வேண்டாம் என்றே தெலங்கானாவில் கவனம் செலுத்த ஷர்மிளா முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

அதற்கேற்பவே இன்றைய மீட்டிங்கில் ஷர்மிளாவை வரவேற்க தடபுடல் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. 3,000-க்கும் மேற்பட்ட தொண்டர்கள் அவரது இல்லத்தில் கூடி அவரை உற்சாகப்படுத்தினர். மேள, தாளம், வெடி என தடபுடலாக வரவேற்பு கொடுத்தனர். அதேபோல், ஷர்மிளாவை பிரமாண்ட பேனர்கள் வைக்கப்பட்டிருந்து. இந்த பேனர்களில் ஒய்.எஸ்.ஆர் ராஜசேகர், அவரின் மனைவி ஆகியோருடன் ஷர்மிளா எனக் குடும்ப புகைப்படங்கள் இடம்பெற்றிருந்தாலும் ஜெகன்மோகன் ரெட்டியின் புகைப்படம் மட்டும் அதில் இல்லை. இது ஊடகங்களின் சந்தேகங்களை மேலும் வலுப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.

- மலையரசு

சற்று முன்எடிட்டர் சாய்ஸ்