Published : 08,Feb 2021 10:55 PM

’’சசிகலாவால் தேர்தலில் நிச்சயம் போட்டியிட முடியும்’’ - பத்திரிகையாளர் லக்ஷ்மணன்

Journalist-Lakshmanan-opinion-about-Sasikala-in-Assembly-election

சசிகலா தேர்தலில் போட்டியிட முடியும் என்பது குறித்து பத்திரிகையாளர் லக்‌ஷ்மணன் தனது கருத்தை முன்வைத்திருக்கிறார்.

புதிய தலைமுறையின் நேர்படப் பேசு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய பத்திரிகையாளர் எஸ்.பி. லக்‌ஷ்மணன், ஒரு கட்சியின் பொதுக்குழு கூடி எடுத்த முடிவில் எந்த மாற்றத்தையும் கொண்டுவர முடியாது. சசிகலா அமமுக கட்சியின் தலைவராக இருந்து செயல்படலாம்; ஆனால் அதிமுகவிற்குள் வர வாய்ப்பில்லை என்ற கருத்துக்கு விளக்கம் கொடுத்திருக்கிறார்.

’’2017ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் கூடிய அதிமுக பொதுக்குழு, ஈபிஎஸ் - ஓபிஎஸ் அணிகளை இணைத்துவிட்டு இரண்டு முக்கியமான தீர்மானங்களை நிறைவேற்றியது. முதல் தீர்மானமாக சசிகலாவை பொதுசெயலாளர் பதவியிலிருந்து நீக்கி, இரண்டாவதாக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை உருவாக்கியது.

சில மாதங்களுக்குப்பிறகு சசிகலா அதிமுக உறுப்பினர்தானா? இல்லையா என்ற கேள்வி எழுந்தது. அப்போது பொதுக்குழுவை பொது செயலாளர் அல்லது அவைத்தலைவர்தான் கூட்டமுடியும்; எனவே இருவரும் இல்லாமல் கூடிய கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் செல்லாது என சசிகலா வழக்குத் தொடர்ந்தார்.

image

இந்த வழக்கில் அடிப்படை முகாந்திரம் இருப்பதை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், அதிமுக வங்கி கணக்கு விவரங்களை சசிகலா பார்வையிடலாம்; இரண்டாவதாக அதிமுக ஆவணங்களை அப்போது பொறுப்பிலிருந்த யாரும் திருத்தக்கூடாது; கட்சியின் தலைமை கழக நிர்வாகியான மகாலிங்கம் அவற்றை ஒரு கவரில் போட்டு சீல்வைத்து பாதுகாக்க வேண்டும்; மூன்றாவதாக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட அனைத்து தீர்மானங்களும் அந்த வழக்கில் தீர்ப்புக்கு கட்டுப்பட்டது என்ற மூன்று இடைக்கால தீர்ப்புகளை வாங்கிய சசிகலாவுக்கு சட்டப்பூர்வமாக இன்றைய தேதியில் அனைத்து உரிமைகளும் இருக்கிறது.

இதுதவிர, ஒருவர் தனது காரில் ஒரு கொடியை கட்டவேண்டும் என்றால் அந்தக் கொடியின்மீது அவருக்கு ஒரு அபிமானம் இருக்கவேண்டும்; அல்லது உறுப்பினர் என்ற அடிப்படையில் சட்டப்பூர்வமான அதிகாரம் இருக்கவேண்டும். ஆனால் சசிகலாவை பொருத்தவரை, அவர் தனது உறுப்பினர் அட்டையை புதுபிக்கவில்லை; எனவே அவர் உறுப்பினராக இருக்கமுடியாது என்று சொல்கிறார்கள். இரண்டாவது குற்றவழக்கில் சிறைக்கு சென்றுவிட்டாலே அதிமுக உறுப்பினர் பதவியை ஒருவர் இழந்துவிடுவார் என்றும் சொல்கிறார்கள்.

அப்படியென்றால் 2014இல் ஜெயலலிதா குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்ட போதே அவர் அதிமுகவின் உறுப்பினராக இருந்திருக்க முடியாது. அதற்குபிறகு 2016இல் அவரை எப்படி முதலமைச்சராக தேர்ந்தெடுத்திருக்க முடியும்? அதேபோல் சசிகலாவை முன்பு கட்சியிலிருந்து நீக்கியபிறகு, அவர் பொதுச்செயலாளராக இருக்கவேண்டும் என்று முடிவெடுத்து அவரை அழைத்தது இன்று அவரை பழிக்கிற ஜெயக்குமார் உட்பட அனைத்து எம்.எல்.ஏக்களும்தான்.

image

ஜெயலலிதா அமர்ந்துவந்த காரில் சசிகலா குற்ற உணர்ச்சியின்றி அமர்ந்துவந்தது குறித்து வெட்கப்படவேண்டியது முதல்வர் உட்பட அனைத்து கட்சிக்காரர்களும்தான். அதேபோல் ஜெயலலிதா காரில் இருந்து கொடியை கழற்றியது இந்த அரசுக்கு நேர்ந்த அவமானம் என்றுதான் சொல்லவேண்டும்.

கொடி விஷயத்தில் தலையிடும் உரிமை தேர்தல் ஆணையத்திற்கு கிடையாது. வருகிற 28ஆம் தேதிவரை தான் கட்சியில் முடிவெடுக்கும் அதிகாரம் ஈபிஎஸ்க்கு இருக்கிறது. அதன்பிறகு அதிமுகவில் என்ன நடக்கும் என்று பொருத்திருந்துதான் பார்க்கமுடியும்.

2017ஆம் ஆண்டு சசிகலாவைப் போன்றே சிக்கிம் முதல்வர் பிரேம்சிங் தபாங்கும் சிறைக்கு சென்றார். ஓராண்டு சிறைதண்டனை என்பதற்காக அவருக்கு தகுதி இழப்பு ரத்து செய்யப்படவில்லை. காரணம் அவர்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட ஆண்டில் மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் திருத்தப்படவில்லை. அதனால் பதவி இழப்பு செய்யப்படவேண்டும் என்று இயற்றப்பட்ட சட்டப்பிரிவு எனக்கு பொருந்தாது என்று அவர் கூறிய கூற்றை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டது. இது சசிகலாவுக்கும் பொருந்தும்’’ என்று லக்‌ஷ்மணன் தனது கருத்தை முன்வைத்துள்ளார்.

சற்று முன்எடிட்டர் சாய்ஸ்