
சிறையிலிருந்து வெளியேவந்த சசிசலா தனது காரில் அதிமுக கொடியை பயன்படுத்தியதற்கு எதிராக டிஜிபி அலுவலகத்தில் அமைச்சர்கள் புகார் கொடுத்திருக்கின்றனர்.
சொத்துக்குவிப்பு வழக்கில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு கைது செய்யப்பட்ட சசிகலாவுக்கு கடந்த 27ஆம் தேதி தண்டனை காலம் முடிந்ததால் விடுதலை செய்யப்பட்டார். இதற்கிடையே அவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதால் பெங்களூரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார்.
இந்நிலையில் சிகிச்சைமுடிந்து மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி ரெசார்ட்டுக்கு சென்றபோது சசிகலா தனது காரில் அதிமுக கொடியை பயன்படுத்தியதற்கு எதிராக அமைச்சர்கள் ஜெயக்குமார் உள்ளிட்டோர் டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்திருக்கின்றனர்.
பிப்ரவரி 8ஆம் தேதி பெங்களூருவிலிருந்து சசிகலா சென்னை திரும்பவுள்ள நிலையில் கட்சி நிர்வாகிகள் புகார் கொடுத்திருக்கின்றனர். இதுதொடர்பாக அமைச்சர்கள் ஜெயக்குமார், சி.வி சண்முகம், தங்கமணி, வேலுமணி, நிர்வாகிகள் மதுசூதனன், கே.பி முனுசாமி, நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் அதிமுக அலுவலகத்தில் ஆலோசித்த பிறகே புகார் செய்துள்ளனர். இனி சசிகலா தமிழகம் வரும்போது தனது காரில் அதிமுக கொடியை பயன்படுத்தாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.