Published : 25,Jan 2017 02:27 AM
காவல்துறை அதிகாரிகள் மீது விசாரணை தேவை...ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை மெரினாவில் போராடிய மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து, விசாரணை கமிஷன் அமைக்க ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாணவர்கள் அமைதியாக போராட்டம் நடத்தி, தமிழர்களின் பண்பாட்டு உரிமையை வென்றெடுத்து விட்டார்கள் என்ற வரலாற்று உண்மையை மறைப்பதற்காக, போராட்டத்தில் சமூகவிரோதிகளும், தேசவிரோதிகளும் புகுந்துவிட்டதாக சென்னை மாநகர காவல்துறை ஆணையர் அபாண்டமாக பழி சுமத்தி இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
போராட்டத்தின் உன்னத நோக்கத்தை திசைதிருப்பும் செயலில் காவல்துறை ஈடுபட்டிருப்பதாகவும் ஸ்டாலின் விமர்சித்துள்ளார். ஜனவரி 23-ஆம் தேதி நடைபெற்ற வன்முறை குறித்து விசாரணைக் குழு அமைத்து விசாரிக்க ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். மாணவர்கள் போராட்டத்தை காவல்துறை முறையாக கையாள தவறிவிட்டதாகவும், திசைத்திருப்பும் செயலில் ஈடுபட்டதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபட்ட காவல்துறை உயர் அதிகாரிகள் அனைவரையும் உடனடியாக இடமாற்றம் செய்து, நியாயமான விசாரணை நடைபெற வழிவகை செய்ய வேண்டும் என்றும் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.