‘டிஐஜி ரூபா பணியிடமாற்றத்தால் தடயங்கள் அழிக்கப்படும்’

‘டிஐஜி ரூபா பணியிடமாற்றத்தால் தடயங்கள் அழிக்கப்படும்’
‘டிஐஜி ரூபா பணியிடமாற்றத்தால் தடயங்கள் அழிக்கப்படும்’

சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு சலுகை அளிக்கப்பட்டதை வெளியே கொண்டுவந்த டிஐஜி ரூபா பணியிடமாற்றம் செய்யப்பட்டதால் தடயங்கள் அழிக்கப்படும் என்று முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி திலகவதி கூறியுள்ளார்.

இதுகுறித்து புதிய தலைமுறைக்கு பேட்டியளித்த அவர், “ரூபா இடமாற்றம் மிகப்பெரிய கேள்விகளை எழுப்புகிறது. நேர்மையாக பணியாற்றும் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்படுவது தொடர்கதையாக உள்ளது. அரசியல்வாதிகள் டிரான்ஃபரை பெரிய ஆயுதமாகப் பயன்படுத்துகிறார்கள். ரூபா மாற்றப்பட்டதன் மூலம் அவர் வைத்த குற்றச்சாட்டுக்கான தடயங்கள் அழிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. சிறைக்குள் ஒருவர், 5 அறைகளை எடுத்துக் கொள்வதும், தனி சமையலறை வைத்துக் கொள்வதும், தனி அலுவலகம் வைத்துக் கொள்வதும் சாத்தியமா? அது சசிகலாவால் முடிகிறது. அப்போது ஒருவரை தண்டனைக்கு அனுப்புவதற்கான காரணம் அடிபடுகிறது. அப்படி இடமாற்றம் செய்ய வேண்டும் என்றால் குற்றநிழல் படிந்துள்ள டிஜிபி சத்தியநாராயணா, ஜெயிலர், காவலர்கள் என அனைவரும் மாற்றப்பட்டிருக்க வேண்டும். இந்த குற்றச்சாட்டின் மீது உள்துறை செயலாளர் போன்ற உயர்மட்ட அதிகாரி தலைமையில் நேர்மையான விசாரணை நடைபெற வேண்டும். இந்த பணியிடமாற்ற உத்தரவை எதிர்த்து ரூபா நீதிமன்றத்தை அணுகலாம். ஆனால் ஏற்கனவே பென்டிரைவ்-ல் இருந்த வீடியோ ஆதாரங்கள் அழிக்கப்பட்டுவிட்டன என்று ரூபா கூறியுள்ளார். பணம் இருந்தால் எதையும் செய்யலாம் என்ற நிலைதான் தொடர்கிறது” என்று திலகவதி ஐபிஎஸ் கூறியுள்ளார்.

ரூபா போன்ற அதிகாரிகள் எங்கு மாற்றம் செய்யப்பட்டாலும், சிறப்பாகச் செயல்படுவார்கள் என்று புதுச்சேரி ஆளுநரும், நாட்டின் முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரியுமான கிரண் பேடி தெரிவித்துள்ளார். இதேபோல், நேர்மையான அதிகாரிகள், பணியிடமாற்றம் செய்யப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று சென்னை மாநகர காவல்துறை முன்னாள் ஆணையர் லத்திகா சரண் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com