Published : 28,Jan 2021 07:16 PM

திரையும் தேர்தலும் 3 - அண்ணா எழுத்தில் 'வேலைக்காரி'... புதுப்பாதை தொடங்கிய புள்ளி!

Anna--Velaikkari-Movie-Impact-in-Tamil-Cinema-and-Politics

ஜஸ்டிஸ் கட்சியில் 1944-ஆம் ஆண்டு ஏற்பட்ட கடும் கருத்து வேறுபாடுகளின் காரணமாக திராவிடர் கழகம் உதயமானது. அது உருவானதன் ஆரம்பப் புள்ளி பெரியாராக இருந்தாலும், உருவாக மிக முக்கிய காரணமாக அண்ணா திகழ்ந்தார். இதற்கிடையில் 1947-ல் இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு "இந்த சுதந்திர நாளை நாம் துக்க தினமாக அனுசரிக்க வேண்டும்" என்று பெரியார் கருத்து தெரிவித்தார். ஆனால், அண்ணாவோ நாடு சுதந்திரம் பெற்றதைக் கொண்டாடினார். இதன் காரணமாக திராவிடர் கழகத்திற்குள் மனவருத்தங்கள் ஏற்பட்டன. அதே வருடத்தில் நடைபெற்ற திராவிட நாடு பிரிவினை மாநில மாநாட்டில் அண்ணா கலந்துகொள்ளவில்லை.

என்னதான் 'ராஜகுமாரி' படத்தில் வசனம் எழுதினாலும்கூட மு.கருணாநிதி பெயர் டைட்டிலில் இடம்பெறவில்லை. அடுத்ததாக ஜூபிடர் எடுத்த 'அபிமன்யூ' படத்திலும் இதே நிலைதான். ஏன் என் பெயர் போடவில்லை என்று காரணம் கேட்டபொழுது, "முதலில் உன் பெயர் பிரபலமாகட்டும். அதுவரை பொறு" என்கிற பதிலே ஜூபிடர் சோமுவிடமிருந்து கிடைத்தது.

ஆனால், கருணாநிதி 1942-லேயே திருக்குவளையில் 'முரசொலி' என்றொரு கையெழுத்துப் பத்திரிக்கை நடத்தினார். உலகப் போரினால் காகிதத் தட்டுப்பாடு ஏற்பட்டதால் இடையில் சிறிது காலம் 'முரசொலி' நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. பின் 1948-ல் இது வார இதழாக மாறியது. கருணாநிதியின் அரசியல் பிரவேசம் அவரது திரைப்பிரவேசத்திற்கு முன்பே நிகழ்ந்ததை நாம் இங்கே கருத்தில் கொள்ளவேண்டும்.

image

திராவிடர் கழகத்தின் கடவுள் மறுப்பு கொள்கைகளும், மூடநம்பிக்கை ஒழிப்பு பிரசாரங்களும் திரையுலகில் பெரும் அலையை உண்டாக்கிக் கொண்டிருந்ததை பல உதாரணங்கள் மூலம் உணரலாம்.

"உற்சாகம் மிகுந்த கதையும், ஹாஸ்யம் ததும்பும் சம்பவங்களும், மாயக்குதிரையின் அற்புதச் செயல்களும் உங்களைக் குதூகலிக்கச் செய்யும்" என்கிற விளம்பர வாசகங்களுடன் ஜூபிடரின் 'மோஹினி' திரைப்படம் வெளிவந்தது. ஆனால், 'மாயக்குதிரை' என்பது மூடநம்பிக்கையை விதைப்பதாக இருக்கும் என்றெண்ணிய ஜூபிடர் நிறுவனத்தார், பகுத்தறிவுக் கொள்கைகளுக்கு ஏற்றதாக இருக்கும் வகையில், மரத்தால் செய்து, எந்திரங்களைப் புகுத்தி உருவாக்கிய குதிரையாகச் செய்து, கேமரா நுணுக்கத்தால் பறக்கவிட்டு வித்தை காட்டியிருந்தனர். அதை விளம்பரமும் செய்தனர்.

இப்படி வேறொரு தளம் நோக்கி தமிழ் சினிமா நகர்ந்துகொண்டிருக்கையில், 1948-ல் புதிய சென்சார் கொள்கைகள் வெளியிடப்பட்டன. அதன் சாராம்சங்கள் எல்லாம் என்னவென்று படித்தால், தலைசுற்றி மயக்கம் வந்துவிடும். உதாரணத்திற்கு ஒன்றிரெண்டு கூறுகிறேன் கேளுங்கள்.

1. சட்டம், நீதி இவற்றுக்கு எதிரான பிரசாரத்தையோ, மற்றவர்கள் கற்றுக்கொள்ளக் கூடியபடி சட்டம், நீதி இவற்றை மீறி நடப்பதையோ காட்டக்கூடாது.

2. பிறர் கற்றுக்கொள்ளக்கூடிய வகையில் கொலை செய்யும் காட்சிகளை விஸ்தாரமாக காட்டக்கூடாது. பழிவாங்குதல் நியாயமானதாய் கருதப்படமாட்டாது.

3. பிக் பாக்கெட், இதர வகையான திருட்டு, கொள்ளையடிப்பது, பணப்பெட்டிகளை உடைப்பது, ரயில், பாலம், சுரங்கம், கட்டிடம் இவற்றிற்கு வெடிவைத்து தகர்ப்பது, தீ வைப்பது ஆகியவை எப்படிச் செய்யப்படுகிறது என்று திரையில் காட்டக்கூடாது.

4. சாராயம் முதலான மதுபானங்களைக் கள்ளத்தனமாக தயாரிப்பதைப் பற்றி பேசவே கூடாது.

5. மது அருந்தும் காட்சிகளுக்கு முற்றிலும் தடை. இதற்கு முன் சென்சார் செய்யப்பட படங்களிலிருந்தும் மது அருந்தும் காட்சிகள் நீக்கப்படவேண்டும். ஆனால், மதுவிலக்குப் பிரசாரப் படங்களில் மதுவின் தீமைகளை விளக்குவதற்காக காட்டப்படும் மதுபான காட்சிகளுக்கு அனுமதி உண்டு.

மேற்கண்டவை கூட கொஞ்சம் தடுமாறி ஏற்றுக்கொள்ளலாம் என்றே வைத்துக்கொள்ளுங்கள். கீழுள்ள விஷயங்களை கவனியுங்கள்.

1. திருமணம், குடும்பம் போன்றவை புனிதமாக கருதப்படும். கீழ்த்தரமான கள்ள நட்பு அனுமதிக்கப்படுவதாகவோ அல்லது அப்படி தொடர்புகள் வழக்கத்தில் இருப்பதாகவோ திரையில் சித்தரிக்கக் கூடாது.

2. கல்வி போதனைப் படங்களைத் தவிர மற்ற படங்களில் சிற்றின்பம், உடல்நலம், கர்ப்பத்தடை மற்றும் காம வியாதிகள் இவற்றைக் காட்டக் கூடாது.

3. எந்த ஒரு மதத்தையும் பழிப்பதான படமோ கட்சியோ அனுமதிக்கப்பட மாட்டாது. மதகுருக்களை நகைச்சுவை பாத்திரங்களாகவோ, வில்லன்களாகவோ அல்லது பரிகாசத்துக்குரிய வகையிலோ கட்டடவே கூடாது. எந்த மதத்தையாவது அல்லது புராணத்தையாவது பரிகசிப்பதாகவோ; பழிப்பதாகவோ; அவமதிப்பதாகவோ; பொதுமக்கள் அதன்மீது கொண்டுள்ள பக்தியையும், மதிப்பையும் குறைப்பதாகவோ உள்ள காட்சிகள், கதைகள், நடிப்பு இவை எதுவும் அனுமதிக்கப்படாது.

இவையெல்லாம் அந்த புதுக்கொள்கைகளின் ஒரு பகுதிதான். இப்படி மொத்த படைப்புச் சுதந்திரத்தின் கழுத்தையும் நெறிக்கும் வண்ணம் சென்சார் போர்டு நடந்துகொள்ள தொடங்கியது. எங்கெல்லாம் இப்படி அதிகார வர்க்கம் தனது கோர கைகளை நீட்டுகிறதோ அங்கிருந்தெல்லாம் புதுப் புரட்சி வெடிக்கும் என்பதே வரலாறு. அதேதான் இங்கும் நடந்தது. சென்சார் விதிமுறைகளுக்கு எதிராக வலுவான குரல்கள் எழுந்தன. இதனால், பல விதிமுறைகள் தளர்த்தப்பட்டன.

இந்த நேரத்தில்தான் 1948-ல் ஈரோடு நகரில் நடைபெற்ற திராவிடர் கழக தனி மாநில மாநாட்டில் மீண்டும் அண்ணா பங்கேற்றார். ஈரோடு நகரம் அதுவரை காணாத மக்கள் கூட்டத்தை கண்டது. "காங்கிரஸ் கட்சியை அடுத்த தேர்தலில் முறியடிப்போம்" என்கிற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பெரியாரின் சொற்பொழிவோடு மாநாடு நிறைவடைந்தது.

1949-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் அண்ணா கதை, வசனம் எழுதிய 'நல்லதம்பி' படம் வெளியானது. கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் நாயகன். அண்ணாவின் கதை, வசனமாகவே இருந்தாலும் கூட படம் என்னவோ கலைவாணரின் படமாகவே அறியப்பட்டது. அந்தளவிற்கு கலைவாணர் தனது சேஷ்டைகளால் திரையை நிறைத்தார். அடுத்ததாக 1949-ல் வந்தது 'வேலைக்காரி'. அறிஞர் அண்ணாவின் முத்திரையை அழுத்தமாக பதித்தது மட்டுமின்றி, மேற்கண்ட சென்சார் போர்டின் அத்தனை விதிகளையும் தூள் தூளாக உடைத்த படமென்றும் இதைக் கூறலாம். படத்தின் வசனங்களில் தீப்பொறி பறந்தது.

"ஆஸ்ரமத்தைக் கண்டோம். கடவுள் அருளுக்கு வழிகாட்டப்படும் இடம் என்று பாமரர் நம்பும் அந்த இடம் காம வேள் நடன சாலையாக இருக்கக் கண்டோம். இளித்த வாயர்களுக்கு பகலிலே உபதேசம்! இன்பவல்லிகளுக்கு இரவிலே சரஸமாம். குருடனுக்கு கோல் தேவையாக இருப்பதுபோல ஊரை ஏமாற்ற குடிகெடுப்பவனுக்கு வேஷம் தேவைப்படுகிறது. வேஷமணியாத வேதாந்தி! மோசடி செய்யாத மாது! ஜோடி இல்லாத மாடப்புறா! சேடி இல்லாத ராஜகுமாரி இருக்கமுடியதாம். ஹரிஹரதாஸ் இத்தகையதோர் வேஷதாரி" என அனல் பறக்கும் வசனங்களை அள்ளித் தெளிந்திருந்தார் படம் முழுக்க.

image

இவ்வாறாக திராவிடக் கட்சியின் கடவுள் மறுப்பு கொள்கைகளின் நேரடி கருத்துக்கள் எல்லாம் வெள்ளித்திரையில் மக்களின் பெரும் ஆரவாரத்திற்கிடையில் முழங்கப்பட்டது. வெறும் சி.என்.அண்ணாதுரை, அறிஞர் அண்ணாவாக மாறியதே 'வேலைக்காரி' நாடகம் மூலமாகத்தான். நாடகம் பார்த்து ரசித்த 'கல்கி' கிருஷ்ணமூர்த்தி, அண்ணாவுக்கு கொடுத்த பட்டமே 'அறிஞர்' என்பதாகும்.

1946-ல் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தபொழுது இந்தி கட்டாயப் பாடம் என்று ராஜாஜியால் அறிவிக்கப்பட்டு, அதை எதிர்த்து பல போராட்டங்கள் நடைபெற்றன. தமிழத்தில் உணவு நிலை பாதிக்கப்பட்டிருந்தது. ஆறு அவுன்ஸ் அரிசிக்காக மக்கள் நீண்ட வரிசையில் மணிக்கணக்கில் நிற்கவேண்டிய சூழ்நிலை. கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டிருந்தது. மொத்தத்தில் சுதந்திரம் பெற்ற நாளில் இருந்தே காங்கிரஸ் கட்சியின் மீது மக்களுக்கு ஒரு வெறுப்புணர்வு வளர்ந்துகொண்டே இருந்தது. காங்கிரஸ்காரர்களைக் கண்டாலே "அதோ பார் ஆரவுண்ஸ் கதர்ச்சட்டை" என்று பலரும் ஏளனம் செய்தார்கள்.

திரைக் கலைஞர்களுக்கும், காங்கிரஸுக்கும் பாலமாக விளங்கிவந்த சத்தியமூர்த்தி காலமான பிறகு அவரது பணியை மேற்கொள்ள, அவரது வெற்றிடத்தை நிரப்ப காங்கிரஸில் தலைவர்கள் இல்லாமலிருந்தார்கள். இதனால், 1943-க்கு பிறகு திரைப்படங்களில் தேசிய பிரசாரம் என்பது பெருமளவு குறைந்துவிட்டது. கே.சுப்பிரமணியம் போன்ற காங்கிரஸ் அபிமான திரைப்பட தயாரிப்பாளர்கள் மட்டுமே அங்கொன்றும் இங்கொன்றுமாக காங்கிரஸ் ஆதரவு படங்களை எடுத்துவந்தனர்.

இந்த வாய்ப்பைத்தான் திராவிட இயக்கத்தை சேர்ந்தவர்கள் பலமாக பற்றிக்கொண்டனர். என்னதான் கருணாநிதியின் 'ராஜகுமாரி'யும், அண்ணாவின் 'நல்லதம்பி'யும் திராவிட ஆதரவு கொண்ட வசனங்களை கொண்டிராவிட்டாலும் கூட, அந்த வசனங்களை எழுதியது திராவிட கட்சியை சேர்ந்தவர்கள்தான் என்று மக்கள் அறிந்தே இருந்தனர். அறிஞர் அண்ணாவின் 'வேலைக்காரி' முதன்முறையாக பகுத்தறிவுப் பிரசாரத்தை சுதந்திரத்திற்குப் பின் திரைப்படம் வாயிலாக பரப்பியது. பணக்கார எதிர்ப்பும், ஏழைகள் மீது இரக்கமும் திராவிடர் கழகத்தின் கொள்கைகள் என 'வேலைக்காரி' திரைப்படம் பிரகடனப்படுத்தியது. அந்தப் புள்ளியில் இருந்துதான் தமிழக அரசியல் மற்றும் சினிமா புதுப்பாதையில் பயணிக்கத் தொடங்கியது.

(திரை இன்னும் விரியும்...)

- பால கணேசன்

முந்தைய அத்தியாயம்: திரையும் தேர்தலும் 2 - ராஜாஜி Vs அண்ணா, எம்.ஜி.ஆர் + கருணாநிதி!

சற்று முன்எடிட்டர் சாய்ஸ்