விவசாயிகள் மீதான தாக்குதலுக்கு கண்டனம்: பொன்னேரியில் தடையை மீறி டிராக்டர் போராட்டம்

விவசாயிகள் மீதான தாக்குதலுக்கு கண்டனம்: பொன்னேரியில் தடையை மீறி டிராக்டர் போராட்டம்
விவசாயிகள் மீதான தாக்குதலுக்கு கண்டனம்: பொன்னேரியில் தடையை மீறி டிராக்டர் போராட்டம்

டெல்லியில் வேளாண் சட்டத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து, பொன்னேரியில் தடையை மீறி நடைபெற்ற டிராக்டர் பேரணியை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம், தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

தலைநகர் டெல்லியில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் 62-வது நாளாக தொடர்ந்து போராடி வருகின்றனர். குடியரசு நாளான இன்று விவசாயிகள் டிராக்டர் பேரணி நடத்தினர். அப்போது விவசாயிகள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தினர். இதனை கண்டித்து திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் சண்முகம் தலைமையில், கிருஷ்ணாபுரம் பகுதியில் இருந்து டிராக்டர் பேரணி நடத்த முயன்றபோது, காவல் துறையினர் அவர்களுக்கு அனுமதி மறுத்தனர்.

அப்போது காவல்துறையினர் அவர்களை இரும்பு தடுப்புகள் அமைத்து தடுத்து நிறுத்தியதால் இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதமும், தள்ளுமுள்ளும் ஏற்பட்டது. இதனையடுத்து, தமிழ்நாடு விவசாயிகள் சங்க தலைவர் சண்முகத்துடன், பொன்னேரி டிஎஸ்பி கல்பனா தத் பேச்சுவார்த்தை நடத்தி, 500 மீட்டர் வரை டிராக்டர் பேரணி செல்ல அனுமதி அளித்தார். அதன்பிறகு, கிருஷ்ணாபுரம் தனியார் கல்லூரி அருகில் இருந்து புறப்பட்டு டிராக்டர் மற்றும் இரு சக்கர வாகனங்களில் விவசாயிகள் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பியவாறு பேரணியாகச் சென்றனர்.

500 மீட்டர் தூரத்தில் காவல்துறையினர் இரும்பு தடுப்புகள் அமைத்து அவர்களை தடுத்தனர். பின்னர், கோஷங்களை எழுப்பியபின் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனிடையே புதிய தலைமுறையிடம் பேசிய தமிழ்நாடு விவசாயிகள் சங்க பொது செயலாளர் சண்முகம், விவசாயிகள் போராட்டத்தில் தடியடி நடத்தப்பட்டதற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கண்டனம் தெரிவிப்பதாகவும், 62 நாட்களாக அமைதியாக நடந்துவந்த விவசாயிகள் போராட்டத்தில் காவல்துறை அனுமதியோடு டிராக்டர் பேரணி நடத்தப்பட்டது. ஆனால் மத்திய அரசு தன்னுடைய குண்டர்களை திட்டமிட்டு உள்ளே நுழைத்து சீர்குலைத்தது.

இதனால் தமிழகம் முழுவதும் அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து வெற்றிகரமாக டிராக்டர் பேரணி நடந்து வருகிறது எனவும், மத்திய அரசு 3 வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வேண்டும் எனவும், விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்க வேண்டும் எனவும் சண்முகம் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com