[X] Close

"அரசியல்வாதியின் வாரிசுகளுக்கு மட்டும் ஏன் இந்த விமர்சனங்கள்?"-விஜய் வசந்த் சிறப்பு பேட்டி

சிறப்புக் களம்,தமிழ்நாடு,தேர்தல் களம்

tamilnadu-congress-general-secretary-vijay-vasanth-sepcial-interview


காங்கிரஸ் பொதுச் செயலாளராக பொறுப்பேற்ற புதிய உற்சாகத்தில் கன்னியாகுமரி முழுக்க களப்பணியாற்றி வருகிறார், மறைந்த வசந்தகுமார் எம்.பி-யின் மகன் விஜய் வசந்த். தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், பிப்ரவரிக்குள் கன்னியாகுமரி தொகுதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று சமீபத்தில் அறிவித்தது தேர்தல் ஆணையம். அங்கு விஜய் வசந்த் போட்டியிடுகிறார் என்று தகவல் வெளியாகிவரும் நிலையில், தன் அரசியல் பணி எப்போதோ தொடங்கிவிட்டது என்றும், அது இப்போதுதான் வெளிச்சத்துக்கு வந்துள்ளது என்றும் கூறும் அவருடனான ஒரு சிறப்புப் பேட்டி...

காங்கிரஸ் மூத்த தலைவர்களுடன் இளம் தலைவராக பயணிப்பது எப்படி இருக்கிறது?

"மூத்த தலைவர்களின் அனுபவமும் வழிகாட்டுதலும் மிகவும் உதவியாக இருக்கிறது. அதேபோல, இளைய தலைமுறையினரும் கட்சியின் வளர்ச்சிகாக புதிய புதிய யோசனைகளை பகிர்ந்துகொள்வதும் இன்னும் சிறந்த அனுபவமாக இருக்கிறது. மூத்த தலைவர்கள், இளைஞர்கள் இருவருடனும் பயணிப்பது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. இன்னும் இளைஞர்களை கட்சிக்குள் கொண்டுவரவேண்டும் என்பதுதான் எனது திட்டம். அதற்கான, களப்பணியிலும் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றேன்."

image

கன்னியாகுமரி இடைத்தேர்தலில் போட்டியிடுகிறீர்களா?

"மேலிடம் வாய்ப்புக் கொடுத்தால், கட்சி முடிவுக்கு கட்டுப்பட்டு கண்டிப்பாக போட்டியிடுவேன். தற்போது, அப்பா விட்டுச்சென்ற பணிகள் தொடரவேண்டும் என்று கன்னியாகுமரியில் மக்களை சந்தித்து பல்வேறு உதவிகளை செய்து வருகிறேன். அப்பா கன்னியாகுமரி மக்களுக்கு கட்சி பாகுபாடில்லாமல் திட்டங்களை நிறைவேற்றியுள்ளார். அதுவும், இந்த கொரோனா சூழலில் கட்சிப் பாகுபாடுக்கு அப்பாற்பட்டு அனைத்து மக்களுக்கும் தேவையான அரிசி, மளிகை உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்கள், வீட்டு உபயோகப் பொருள்கள், கபசுர குடிநீர் விநியோகம், கல்வி உதவித்தொகை, பள்ளிகள் சீரமிப்பிற்கான உதவித்தொகை, வேலை வாய்ப்பு அமைத்துக் கொடுத்தல் என்று நிறைய செய்துவந்தார். தொகுதி மக்கள் அப்பாவின் சேவைகள் குறித்து பெருமையாக பேசும்போது நெகிழ்ச்சியாக உள்ளது. நான் சென்னையில் இருந்து இங்கு வந்து பார்க்கும்போதுதான், மக்கள் எவ்வளவு அன்பு வைத்திருக்கிறார்கள் என்பதை கண்கூடாகப் பார்க்கமுடிகிறது."


Advertisement

image

கன்னியாகுமரியைச் சேர்ந்தவராக இருந்தாலும் நீங்கள் சென்னையில் இருந்துவிட்டு கன்னியாகுமரியில் திடீரென்று நிற்பதை மக்கள் ஏற்றுக்கொள்வார்களா?

"எங்கள் சொந்த ஊரே கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அகத்தீஸ்வரம்தான். அப்பா மறைவுக்குப் பிறகு, அவரது உடலும் கன்னியாகுமரியில்தான் இருக்கிறது. நாங்கள் இந்த மண்ணின் மைந்தர்கள் என்பது மக்கள் நன்கறிவார்கள். அதனால், கண்டிப்பாக என்னை ஏற்றுக்கொள்வார்கள். அப்பாவும் சென்னையில் இருந்துதான் கன்னியாகுமரிக்கு பாதிப் பாதி நாள்கள் வந்து செல்வார். வெளியில் இருந்து வந்து இங்கு போட்டியிடுகிறோம் என்று நாங்களும் நினைக்கவில்லை. மக்களும் நினைக்கவில்லை. அப்படி நினைத்திருந்தால் அப்பாவுக்கு இவ்வளவு பெரிய வெற்றியைக் கொடுத்திருக்க மாட்டார்கள். சென்னையில் இருந்தாலும் பாதி நாள்கள் நானும் சொந்த மண்ணில்தான் இருக்கிறேன்."  

image

பொன்,ராதாகிருஷ்ணன் பாஜகவின் மூத்த தலைவர். இம்முறை அவர்தான் கன்னியாகுமரியில் போட்டியிடுவார் என்று சொல்லப்படுகிறது. அவரை எதிர்த்து நிற்க நேரிட்டால்?

"காங்கிரஸ் கட்சியின் சார்பாக நான் மட்டுமல்ல, யார் கன்னியாகுமரியில் நின்றாலும் வெற்றி எங்களுக்குத்தான். ஏனென்றால், பாஜகவின் மீது மக்கள் அதிருப்தியில் இருகிறார்கள். அந்த அதிருப்தியும் காங்கிரஸ் மீதான மதிப்பும் வெற்றியைக் கொடுக்கும். அதோடு, கன்னியாகுமரி காங்கிரஸ் கோட்டை. அப்பா மறைவுக்குப் பிறகும் கட்சி வலுவாகத்தான் இருக்கிறது. அப்பா அரசியல் ரீதியாக மட்டுமல்லாமல், தனது சொந்த செலவிலும் நல்ல திட்டங்களை கொண்டு வந்திருகிறார். அவர்மீது மதிப்பும் மரியாதையும் இருப்பதை என்னிடம் வெளிப்படுத்துகிறார்கள். என்னை புதியவராகவும் கன்னியாகுமரி மக்கள் பார்க்கவில்லை. அதனால், நிச்சயம் வெற்றி எங்களுக்குத்தான்."

உங்கள் அப்பா மறைவுக்குப் பின்புதான் அரசியலில் வெளிச்சத்திற்கு வந்துள்ளீர்கள்? உங்களுக்கு இயல்பிலேயே அரசியல் ஆர்வம் இருந்திருக்கிறதா? இல்லை, நிர்பந்தத்தால் வந்துவிட்டீர்களா?  

"எனது இளம் வயதிலிருந்தே அரசியல் நடவடிக்கைகளிலும் சமூக சேவையிலும் பங்களிப்பை செய்துள்ளேன். வெளிச்சத்திற்கு வரவில்லையே தவிர, அப்பாவின் அனைத்து அரசியல் பணிகளிலும் பணியாற்றி இருக்கிறேன். அப்போது, வெளிச்சத்திற்கு வரவில்லை. இப்போது, அப்பா மறைவுக்குப் பிறகு வந்திருக்கிறேன். எனக்கு விருப்பம் இல்லை என்று சொல்லவே முடியாது. ஆர்வம் இருந்துகொண்டேதான் இருந்தது. ஆனால், அதற்கான, நேரம் இப்போதுதான் கிடைத்தது."


image
உங்கள் விருப்பம் சட்டமன்றமா? நாடாளுமன்றமா?

"அதுகுறித்து கருத்து சொல்ல விரும்பவில்லை. கட்சி என்ன முடிவெடுக்கிறதோ, அதன்படி செய்வேன். இப்போதைக்கு, தந்தைக்கு செய்யும் கடமையாக கன்னியாகுமரி மக்களுக்கு சேவை செய்துகொண்டு வருகிறேன்."

உங்கள் அப்பாவிடம் இருந்து பின்பற்ற நினைப்பது?

"எல்லோரிடமும் உண்மையாக இருக்கவேண்டும். மக்களுக்காக உண்மையாக உழைக்கவேண்டும். நம்மால் என்ன முடியுமோ, அதனை செய்யவேண்டும்."

இனி நடிப்பு?

"நடிப்புக்கு இடைவெளிதான். கட்சிப் பணிகளில் தொடர்ச்சியாக இருப்பதால் இனி நடிப்பதற்கு வாய்ப்புகள் இல்லை. நடிக்கவேண்டும் என்ற எண்ணமும் இல்லை. இப்போது, 'மை டியர் லிசா’ படத்தில் நடித்து முடித்துள்ளேன். வெளியீட்டுக்கு தயாராக உள்ளது. வேறு எந்தப் படத்திலும் நடிக்கவில்லை. இனி முழுநேர அரசியல்வாதிதான்."

image

உங்கள் அப்பா ஒரு மூத்த தலைவர் என்பதால்தான் பொதுச்செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறதா?

"அப்பா இத்தனை வருடங்கள் உண்மையான காங்கிரஸ் தொண்டராக வாழ்ந்து மறைந்தார். அதனால், கொடுத்திருப்பதில் தவறில்லையே? அதேநேரத்தில் நான் ஆரம்பகட்டத்தில் இருந்தே கட்சியின் மீது ஈடுபாட்டுடன் இருந்தேன். கடந்த மூன்று வருடங்களாக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியில் உறுப்பினராகவும் செயல்பட்டு வந்தேன். அதுவும், ஒரு காரணம்."

ஏற்கனவே, ராகுல் காந்தியை 'வாரிசு அரசியல்' என்று விமர்சிக்கிறது பாஜக. அப்படி இருக்கையில், தற்போது நீங்கள், ஈவிகேஎஸ் மகன்,  திருநாவுக்கரசு எம்.பி மகன் என்று வாரிசுகளுக்கு பொறுப்பு கொடுக்கப்பட்டிருக்கிறதே?  

"பாஜகவுக்கு விமர்சிக்க வேறு காரணங்கள் கிடைக்கவில்லை. அதனால், வாரிசு அரசியலையே விமர்சிக்கிறது. அந்தக் கட்சியிலும் வாரிசுகள் நிறைய இருக்கவே செய்கிறார்கள். ஒரு டாக்டர் மகன் டாக்டர் ஆவதை கண்டுகொள்வதில்லை. வழக்கறிஞர் மகன் வழக்கறிஞர் ஆவதையும் ஒன்றும் சொல்வதில்லை. ஆனால், அரசியல்வாதியின் வாரிசுகள் என்றால் மட்டும் ஏன் இந்த விமர்சனங்கள்? ஏன் குறையாகப் பார்க்கவேண்டும்? வாரிசுகளுக்கும் திறமையும் ஆர்வமும் இருந்தால் சாதிக்கப் போகிறார்கள். எதையும் திணிக்க முடியாது."

image

உங்கள் அப்பா அனைத்து கட்சியினராலும் மதிக்கக்கூடியவர். வேறு கட்சிகளில் இருந்து அழைப்புகள் வந்ததா?

"அப்பா தீவிர காங்கிரஸ்காரர். அதனால், காங்கிரஸ் என்ற முத்திரை குத்தியாச்சி. 'காங்கிரஸில் இருப்பதே பெருமை; அதை வளர்ப்பதே கடமை' என்பதை கொள்கையாகக் கொண்டு வாழ்ந்தவர் அப்பா. எனக்கும் காங்கிரஸ் முத்திரை விழுந்துள்ளதில் பெருமைதான். விஜய் வசந்த்தும் அப்பா மாதிரி காங்கிரஸ்காரர் என்று நினைக்கிறார்கள். அதனால், எந்தக் கட்சியிலிருந்து அழைக்கவுமில்லை. எனக்கும், அதுபோன்ற எண்ணங்கள் ஏற்படவுமில்லை."

ராகுல் காந்தியின் தமிழக வருகை எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும்?

"ராகுல் காந்தி ஜல்லிக்கட்டு பார்க்க வந்ததே தமிழ் மீதான பற்றால்தான். இன்னும் நிறையமுறை தமிழகம் வருவதற்கு திட்டமிட்டுள்ளார். ஒரே இடத்தில் அரசியல் கூட்டம் போடாமல் சின்ன சின்ன ஊர்களிலும் நின்று பேசிவிட்டுச் செல்கிறார். மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அவர் வந்தது பெரிய எழுச்சியை உண்டாக்கியிருக்கிறது. அது, தேர்தலில் வெளிப்படும்."

ஆனால், ராகுல் காந்தி திமுகவிடம் காங்கிரஸ் பலத்தை காட்டவே வந்துள்ளார் என்கிறார்களே அரசியல் விமர்சகர்கள்?

"திமுகவுடன் நாங்கள் இணைந்து இருக்கும்போது, பலத்தைக் காட்டி என்ன செய்யப்போகிறோம்? காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தவே இந்த பயணம். காங்கிரஸ் மத்தியிலும் மக்களிடம் எழுச்சியை உண்டாக்கவே ராகுல் காந்தி வந்துள்ளார்."

image

ஆனால், அவர் வருகை 'காங்கிரஸ் கட்சியினரிடம்தான் ஈர்ப்பை உண்டாக்கும். மக்களிடம் உண்டாக்காது' என்கிறார்களே?

"விமர்சனம் யார் வேண்டுமென்றாலும் வைக்கலாம். ராகுல் காந்தி செல்லும் இடங்களிலெல்லாம் கட்சிக்கு அப்பாற்பட்டு மக்கள் கூட்டம் அலை திரளாக கூடியதை கண்கூடாகப் பார்த்தேன். அவர், கட்சி ரீதியாகக்கூட பேசவில்லை. மக்களுக்காகத்தான் பேசினார். விவசாயிகள், சிறு, குறு தொழில் நிறுவனர்களை சந்தித்தார், அவர்களின் பிரச்னைகளுக்கு என்னப் பண்ணலாம் என்று கேட்டறிந்தார். அதேபோல, தமிழக மக்களுக்காக ஒரு ராணுவ வீரராக டெல்லியில் நான் இருப்பேன் என்று கூறியிருக்கிறார். இவை அனைத்தும் கட்சிக்கு அப்பாற்பட்டுத்தான்."

உங்கள் அப்பா மறைவுக்குப் பிறகு ராகுல் காந்தி உங்களிடம் அரசியல் குறித்து பேசினாரா?

"அப்பா இறந்த 20 நிமிடத்திலேயே எனக்கு போனில் வந்து ராகுல் காந்தியும், அன்னை சோனியா காந்தியும் ஆறுதல் கூறினார்கள். அதன்பிறகு, இடைப்பட்ட காலத்தில் அரசியல் குறித்து எதுவும் பேசவில்லை."

image

அப்பாவின் இழப்பு...

"இது எதிர்பாராதது. மக்களுக்கும் கட்சிக்கும் பெரிய இழப்புதான். கடந்த 2014 ஆம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் தனித்து நிற்கும்போது கன்னியாகுமரியில் நல்ல வாக்குகளைப் பெற்றது அப்பாதான். எம்.எல்.ஏவாக இருக்கும் ஒருவரை எம்.பி தேர்தலில் நிற்க வைப்பது மேலிடமும் உடனே செய்யாது. அது, சாதாரணமான விஷயமல்ல. ஆனாலும், காங்கிரஸ் மேலிடம் நிற்க வைத்தது அப்பா மீது இருக்கும் மதிப்பும் நம்பிக்கையும்தான். அந்த நேரத்தில் கூட்டணி பலம், நல்ல வாய்ப்பு, வெற்றிக்கான முகம் இதுபோன்ற காரணங்களால் வாய்ப்பு கொடுக்கப்பட்டது. அதேமாதிரி அப்பா வெற்றிபெற்றார். அப்பா எம்.பியாக இல்லாதபோதும் மக்களுக்கு நிறைய செய்துள்ளார். ஆனபிறகும் நாடாளுமன்றத்தில் கன்னியாகுமரிக்காக குரல் கொடுத்து நம்பர் 1 நாடாளுமன்றத் தொகுதி என்று மாற்றிக்காட்டினார். 5 ஆண்டுகள் நிறைவு செய்யமால் உயிரிழந்தது வேதனையும் அதிர்ச்சியையும் அளிக்கிறது."

- வினி சர்பனா

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close