
நான் சிறந்த சுழற்பந்து வீச்சாளர் என்று சொல்லும் அளவுக்கு என்னால் செயல்பட முடிந்ததில் திருப்தி என ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரை மேற்கோள் காட்டி கருத்து தெரிவித்துள்ளார் இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் ரவிச்சந்திரன் அஷ்வின். தமிழகத்தை சேர்ந்த அஷ்வின் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மூன்று போட்டிகளில் பந்து வீசி 12 விக்கெட்டுகளை அள்ளியுள்ளார். அதோடு சிட்னி மைதானத்தில் விஹாரியுடன் வலுவான கூட்டணி அமைத்து அந்த போட்டியை சமன் செய்தார்.
பத்திரிகையாளர்களுடனான சந்திப்பின் போது இதை சொல்லியுள்ளார் அஷ்வின்.
“இதற்கு முந்தைய ஆஸ்திரேலிய தொடருடன் ஒப்பிடும் போது எனக்கு இது நல்ல தொடராகவே அமைந்துள்ளது. நான் எப்போதும் இது தான் சிறந்த தொடர் என குறிப்பிட்டு சொல்ல மாட்டேன். ஆனால் இதை நான் சொல்ல காரணம் அடிலெய்ட் டெஸ்ட் வீழ்ச்சிக்கு பிறகு நாங்கள் கம்பேக் கொடுத்ததால் தான் சொல்கிறேன். அணியில் ஒரு ஆல்ரவுண்டர் பேட்ஸ்மேன் என்பதை காட்டிலும் ஒரு சுழற்பந்து வீச்சாளராக தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவில் நான் சிறப்பாக பந்து வீசி உள்ளேன். அதனால் தான் நான் அணியில் தொடர்ந்து இடம் பிடிக்கிறேன். பந்து வீசுவது தான் எனது பிரதான பணி. அதை வெற்றிகரமாக செய்வதில் எனக்கு திருப்தி.
ஆஸ்திரேலிய மண்ணில் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக ஸ்மித் விக்கெட்டை அதிகளவில் இழந்தது கிடையாது. அதை மாற்ற நினைத்தேன். அதை நிறைவேற்றியதிலும் எனக்கு மகிழ்ச்சி. அதே போல கேப்டன்சியை பொறுத்தவரை ரஹானேவும், கோலியும் ஒரே மாதிரியாக செயல்பட கூடியவர்கள்” என சொல்லியுள்ளார் அவர்.