'முடிவென்றும் பின் வாங்கியதில்லை': இந்திய அணியின் பாகுபலி புஜாரா பிறந்தநாள் இன்று!

'முடிவென்றும் பின் வாங்கியதில்லை': இந்திய அணியின் பாகுபலி புஜாரா பிறந்தநாள் இன்று!
'முடிவென்றும் பின் வாங்கியதில்லை': இந்திய அணியின் பாகுபலி புஜாரா பிறந்தநாள் இன்று!

“அம்பென்றும் குறி மாறியதில்லை
வாளென்றும் பசி ஆறியதில்லை
முடிவென்றும் பின் வாங்கியதில்லை
தானே... சேனை... ஆவான்” என்ற பாகுபலி படத்தில் வரும் பாடல்கள் கற்பனை கதாப்பாத்திரமான அமரேந்திர பாகுபலிக்காக எழுதப்பட்டிருந்தாலும் அந்த வரிகளுக்கு ஏற்ப நிஜ வாழ்க்கையில் வாழ்பவர் தான் இந்திய கிரிக்கெட் அணியின் மகத்தான பேட்ஸ்மேன்களில் ஒருவரான சட்டேஸ்வர் புஜாரா. அவருக்கு இன்று பிறந்த நாள். இதே நாளில் கடந்த 1988இல் குஜராத்தின் ராஜ்கோட்டில் பிறந்தவர் அவர்.


அண்மையில் முடிந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் குறி பார்த்து எறியப்படும் அம்புகளாக ஆஸ்திரேலிய அணியினர் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு பந்து வீசி இருந்தனர். அதை அசால்ட்டாக கையாண்ட இந்திய பேட்ஸ்மேன்களில் ஒருவர் தான் புஜாரா. அவரை இன்றைய இந்திய கிரிக்கெட்டின் டிராவிட் எனவும் சொல்வதுண்டு.


ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்கு போட்டிகளிலும் எட்டு இன்னிங்ஸ் ஆடிய புஜாரா மொத்தமாக 928 பந்துகளை சந்தித்திருந்தார். அதன் மூலம் 271 ரன்கள் எடுத்திருந்தார். இதில் மூன்று அரை சதங்களும் அடங்கும். புஜாரா பந்தை எதிர்கொண்டு விளையாடவே பயப்படுகிறார் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஆலன் பார்டர் விமர்சித்த போதும் அதை கண்டு கொள்ளாமல் ஆட்டத்தின் மீது கவனம் செலுத்தினார். இந்திய கிரிக்கெட் ரசிகர்களே அவரது ஆமை வேக ஆட்டத்தை விமர்சித்திருந்தனர். இருப்பினும் அதையும் கண்டுகொள்ளாமல் தனது இயல்பான ஆட்டத்தை விளையாடினார்.

ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர்கள் கடைசி டெஸ்ட் போட்டியின் போது தலை, கை, நெஞ்சு என ஒரு இடம் விடாமல் குறி பார்த்து பந்து வீசினர். ஆனால் புஜாராவோ கல்லின் மீது படும்போது உளி கொடுக்கும் வலியை தாங்கும் கல்லாகவே நின்று விளையாடினார். கடலில் மீன்பிடிக்க வலை விரிக்கும் போது நங்கூரம் போடுவது வழக்கம். இந்திய அணியின் இன்னிங்க்ஸை ஸ்டெடி செய்ய பேட்டால் நங்கூரம் பாய்ச்சும் பேட்ஸ்மேன் தான் புஜாரா. இளம் வீரர்கள் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் அசத்தியிருந்தாலும் புஜாராவின் அடக்குமுறை ஆட்டம் தான் இந்தியாவுக்கு ஆஸ்திரேலிய மண்ணில் வெற்றியை தேடி கொடுத்தது என்றும் சொல்லலாம்.


81 டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவுக்காக விளையாடியுள்ள புஜாரா 6111 ரன்களை குவித்துள்ளார். இதில் 18 சதங்களும் அடங்கும். பலமுறை தான் ஒரு அக்மார்க் டெஸ்ட் பிளேயர் என்பதை புஜாரா நிரூபித்துள்ளார். அவரின் அப்பா அரவிந்த் புஜாரா ரஞ்சி கோப்பையில் விளையாடிய அனுபவம் உள்ள கிரிக்கெட் வீரர். அப்பாவை போல பிள்ளை என்ற சொலவடைக்கு ஏற்ப புஜாராவும் கிரிக்கெட் வீரராக வளர்ந்தார். தன் தந்தையிடம் கிரிக்கெட் வித்தைகளை கற்று தேர்ந்தவர். அண்டர் 19 மற்றும் டொமெஸ்டிக் கிரிக்கெட்டில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் மூலம் இந்திய அணிக்குள் வந்தவர்.

2010இல் பெங்களுருவில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் அறிமுக வீரராக புஜாரா களம் இறங்கினார். அந்த போட்டியில் டிராவிட், சச்சின் என பலரும் விளையாடி இருந்தார்கள். முதல் இன்னிங்ஸில் 4 ரன்களில் வெளியேறினார். இரண்டாவது இன்னிங்ஸில் டிராவிட் இறங்கி விளையாட வேண்டிய ஒண்டவுன் பேட்ஸ்மேனுக்கான இடத்தில் புஜாராவை விளையாட செய்தார் அப்போதைய கேப்டன் தோனி. அந்த இன்னிங்ஸில் 89 பந்துகளுக்கு 72 ரன்களை குவித்திருந்தார். அதன்பிறகு இந்திய டெஸ்ட் அணியில் தவிர்க்க முடியாத வீரரானார் புஜாரா. இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, ஆஸ்திரேலிய மண்ணில் சுற்றுப்பயணம் என்றால் அந்த அணியில் புஜாரா இருப்பார்.


ஹேப்பி பர்த் டே புஜாரா!

படம் : நன்றி ஐசிசி 

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com