Published : 22,Jan 2021 10:03 PM
கொரோனா தடுப்பூசி செலுத்திய ஆறு நாட்களுக்கு பிறகு சுகாதார பணியாளர் மரணம்

ஹரியானா மாநிலம் குருகிராமில் கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொண்ட ஆறு நாட்களுக்கு பிறகு சுகாதார பணியாளர் ஒருவர் மரணம் அடைந்துள்ளார். இதனிடையே தடுப்பூசியை தடைசெய்ய சொல்லி, அவரை இழந்து வாடும் குடும்பத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.
55 வயதான ராஜ்வந்தி அங்குள்ள பாங்ரவுலா பகுதியில் இயங்கி வரும் ஆரம்ப சுகாதார மையத்தில் சுகாதார பணியாளராக பணியாற்றி வந்துள்ளார். கடந்த 16 ஆம் தேதியன்று அவருக்கு முதல் டோஸுக்கான கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் அவர் தடுப்பூசி எடுத்துக் கொண்ட 130 மணி நேரத்தில் உயிரிழந்துள்ளார். பொழுது விடிந்ததும் படுக்கையிலிருந்து எழாமல் இருந்த ராஜ்வந்தியை அவரது குடும்பத்தினர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்து சில மணி நேரமாவதாக தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் அவரது மகன் கொரோனா தடுப்பூசியை தடை செய்யும்படி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்துள்ளார். இருப்பினும் ராஜ்வந்தியின் மரணத்திற்கும், தடுப்பூசிக்கும் எந்தவித தொடர்பும் இல்லை, எதுவாக இருந்தாலும் பிரேத பரிசோதனை முடிவு வரட்டும் என மாநில மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் இதுவரை பத்து லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பு மருந்து செலுத்தப்பட்டுள்ளது. கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு என இரண்டு மருந்துகள் இந்த பணிக்காக பயன்படுத்தப்பட்டு வருகின்றன.