[X] Close

'குடும்ப நிறுவனத்துக்கு அதிகமாக அரசு டெண்டர்கள்...' - சர்ச்சையில் ஆந்திர முதல்வர் ஜெகன்!

இந்தியா,வணிகம்,சிறப்புக் களம்

Cement-company-owned-by-Jagan-Mohan-Reddy-family--has-received-a-bulk-purchase-orders

ஆந்திர மாநில முதல்வர் ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டியின் குடும்பத்திற்கு சொந்தமான ஒரு சிமென்ட் நிறுவனம் குறித்து சர்ச்சைகள் எழுந்துள்ளன.

பிரபல சிமென்ட் நிறுவனமான பாரதி சிமென்ட் கார்ப்பரேஷன் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் 49 சதவீத பங்குகளை ஜெகன் மோகன் ரெட்டியின் குடும்பம் வைத்திருக்கிறது. ஒரு பிரெஞ்சு நிறுவனமான விகாட், 2010-ல் பாரதி சிமென்ட்டின் மீதமுள்ள 51 சதவீத பங்குகளை வாங்கியது. மேலும், ஜெகனின் மனைவி அந்த நிறுவனத்தில் ஒரு இயக்குனராகவும் இருக்கிறார்.

இந்தியா சிமென்ட்ஸ், பாரதி சிமென்ட்டில் 2010-ல் ரூ.95.32 கோடி முதலீடு செய்திருந்தது. ஆனால், அதே ஆண்டில் விகாட் 51 சதவீதத்தை வாங்கியது குறிப்பிடத்தக்கது. ஏற்கெனவே ஜெகன் மோகன் மீது எதிரான சிபிஐ (மத்திய புலனாய்வுப் பிரிவு) வழக்கில் பெயரிடப்பட்ட நபர்களில் ஒருவர், இந்தியா சிமென்ட்ஸ் நிர்வாக இயக்குனர் என்.சீனிவாசன் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

image

ஒய்.எஸ் ராஜசேகர ரெட்டி அரசு இருந்தபோது அவருடைய அரசு சில நிறுவனங்களுக்கு ஆதரவளித்ததாகவும், குறைந்த விலையில் நிலங்களை ஒதுக்கியதாகவும், சுரங்க குத்தகை வழங்குவதற்கான சட்டங்களை மீறியதாகவும் அல்லது விதிகளுக்கு எதிராக கூடுதல் நதி நீரை ஒதுக்கியதாகவும் சிபிஐ குற்றம்சாட்டியது. அதற்கு பதிலாக அவர்கள் ஜெகன் ரெட்டிக்கு சொந்தமான நிறுவனங்களில் முதலீடு செய்தனர் என்றும் சிபிஐ ஏற்கெனவே கூறியுள்ளது.

இந்த சர்ச்சைகளுக்கு மத்தியில்தான் கடந்த சில மாதங்களாக பாரதி சிமென்ட்ஸ் நிறுவனத்துக்கு அரசாங்க ஆர்டர்கள் கடந்த சில மாதங்களில் அதிகமாக கிடைத்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஜெகன் தனது அதிகாரத்தை பயன்படுத்தி இதை செய்து வருகிறாரா என்றும் சர்ச்சை எழுந்துள்ளன.


Advertisement

ஏப்ரல் 2020 முதல் 2021 ஜனவரி 18 வரை சிமென்ட் வாங்குவதற்கான அரசின் அனைத்து கொள்முதல் ஆர்டர்களில் 14 சதவீதம் அல்லது 2,28,370.14 மெட்ரிக் டன் அளவில் பாரதி சிமென்ட் கைப்பற்றியிருக்கிறது. இதற்கடுத்தபடியாக இந்தியா சிமென்ட்ஸ் லிமிடெட் 1,59,753.70 மெட்ரிக் டன் அளவில் இரண்டாவது அதிகபட்ச கொள்முதல் ஆர்டர்களைப் பெற்றது.

ஆந்திராவில் வீட்டுவசதி, சாலைகள், நீர்ப்பாசனத் திட்டங்கள் போன்ற அரசுப் பணிகளுக்கு சிமென்ட் வாங்குவதற்காக அனைத்து மாநிலத் துறைகளும் பயன்படுத்தும் நோக்கில் அரசு தொடங்கிய வெப்சைட் போர்ட்டல் ஒய்.எஸ்.ஆர். நிர்மன் மூலம் கொள்முதல் ஆணைகள் பெறப்படுகின்றன. சிமென்ட் உற்பத்தியாளர்கள் சங்கம், உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் அரசு துறைகள் உள்ளிட்ட பங்குதாரர்களை இந்த போர்டல் இணைக்கிறது. ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டி அரசாங்கம் 50 கிலோ சிமென்ட் பையின் விலையை ரூ.225 ஆக நிர்ணயித்துள்ளது.

அதன்படி கட்டுமான பணிகளை மேற்கொள்ளும் துறை நிர்வாகிகள் தங்களது தேவைகளை மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்புகின்றனர். பின்னர் ஒய்.எஸ்.ஆர் நிர்மன் போர்டல் மூலம் ஆட்சியர்கள் பிறப்பிக்கும் ஆணை சிமென்ட் உற்பத்தியாளர்கள் சங்கத்திற்கு (ஏபிசிஎம்ஏ) அனுப்பப்படுகின்றன. APCMA அதன் 23 உற்பத்தியாளர்களிடையே ஆர்டர்களை விநியோகிக்கிறது. இதுதான் அங்கு நடைமுறை. பாரதி சிமென்ட்டின் இயக்குநர் எம்.ரவீந்தர் ரெட்டி, ஏபிசிஎம்ஏ துணைத் தலைவராகவும் இருக்கிறார். இதனால் தங்கள் கம்பெனிக்கு இவர் அதிக ஆர்டர்களை எடுத்துக்கொள்கிறார் என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

image

இது தொடர்பாக பேசியுள்ள APCMA-ன் அதிகாரி ஒருவர், ``வர்த்தக அமைப்பு எந்தவொரு குறிப்பிட்ட நிறுவனத்திற்கும் ஆர்டர்களை வழங்குவதில் சாதகமாக இல்லை. இந்த ஒதுக்கீடு ஆந்திராவில் உற்பத்தியாளர்களின் சந்தை பங்கு மற்றும் அவற்றின் திறன்களை அடிப்படையாகக் கொண்டது. பாரதி சிமென்ட்ஸ் அல்லது இந்தியா சிமென்ட்ஸ் பெரிய ஆர்டர்களைப் பெற்றதற்கான காரணம் மற்ற நிறுவனங்கள் அரசுக்கு தேவையான அளவை வழங்க முடியவில்லை. சில நிறுவனங்கள் பெரிய ஆர்டர்களை எடுக்க விரும்பவில்லை, ஏனெனில் அரசாங்கத்தின் விலை மிகக் குறைவு" என்று கூறியுள்ளார்.

இவர்கள் இப்படி கூற, ``கடந்த சில மாதங்களில் பாரதி சிமென்ட் தலைமையிலான சிமென்ட் நிறுவனங்கள் ஒரு சிண்டிகேட் உருவாக்கி 50 கிலோ பைக்கு 220-250 ரூபாயிருந்து ஒரு பைக்கு ரூ.350-400 ஆக உயர்த்தியுள்ளது" என்று ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் போட்டியாளரான தெலுங்கு தேசம் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. மேலும், ``பாரதி சிமென்ட்ஸுக்கு பயனளிப்பதற்காக இது செய்யப்பட்டுள்ளது, அதில் முதல்வரின் குடும்பத்திற்கு இன்னும் 49 சதவீத பங்கு உள்ளது" என்று அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் கொமரெட்டி பட்டாபி குற்றம்சுமத்தியுள்ளார்.

ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளை எல்லாம் மறுத்துள்ள பாரதி சிமென்ட்ஸ் இயக்குனர் ரவீந்தர் ரெட்டி, ``ஒய் எஸ் பாரதி (ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டியின் மனைவி) ஓர் இயக்குநராக இருப்பதற்கும் அரசாங்க உத்தரவுகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை. அவர் ஆரம்பத்தில் இருந்தே இந்தப் பதவியில் இருக்கிறார். முந்தைய ஆட்சியின் போது நாங்கள் ஒரு பைக்கு ரூ.230-க்கு அரசாங்கத்திற்கு வழங்கியுள்ளோம்.

பல காரணிகளால் விலைகள் உயர்ந்துள்ளன. எங்களிடம் 5 மில்லியன் டன் கொள்ளளவு கொண்ட ஓர் ஆலை உள்ளது. எனவே நாங்கள் பல அரசாங்க உத்தரவுகளைப் பெறுகிறோம். சமூகப் பொறுப்பின் ஒரு பகுதியாக நாங்கள் இதைச் செய்கிறோம். ஏனெனில் பொருளாதாரத்திலோ பலவீனமான பிரிவினருக்கான வீடு கட்டும் திட்டத்துக்கு உதவும் வகையில் இதை செய்து வருகிறோம்" என விளக்கம் அளித்துள்ளார்.

இதேபோல் அரசு சார்பில் இதுதொடர்பாக பேசியுள்ள ஆந்திர மாநில கைத்தொழில் அமைச்சர் எம். கவுதம் ரெட்டி, ``பாரதி சிமென்ட் மற்றும் இந்தியா சிமென்ட்ஸ் ஆகியவை அரசாங்க அட்டவணைகளின்படி வழங்க முடிந்ததால் ஆர்டர்களில் பெரும்பகுதியைப் பெற்றன. சில உற்பத்தியாளர்கள் விநியோகச் சங்கிலி சிக்கல்களைக் கொண்டுள்ளனர், மேலும் பணிகளின் அட்டவணையைத் தொடர சிமென்ட் தொடர்ந்து வழங்குவதை உறுதி செய்வது அரசாங்கத்திற்கு சவாலானது. ஆர்டர்கள் தேவைக்கேற்ப வைக்கப்படுகின்றன. அரசாங்கத்தால் சிமென்ட் விலைக் கட்டுப்பாட்டை அமல்படுத்த முடியாது. விலைகள் உயர்ந்துள்ளன, ஆனால் அதில் அரசாங்கத்திற்கு எந்தப் பங்கும் இல்லை. எங்களால் விலைகளை நிர்ணயிக்க முடியாது" என்று அவர் 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' பத்திரிகைக்கு பேட்டியளித்துள்ளார். இந்த விவகாரம் தற்போது ஆந்திர அரசியல் களத்தில் புதிய சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறது.

- மலையரசு


Advertisement

Advertisement
[X] Close