
பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள சசிகலாவுக்கு ரூ.2 கோடி வரை லஞ்சம் வாங்கிக்கொண்டு சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு இருப்பதாக சிறைத்துறை டி.ஐ.ஜி. ரூபா பரபரப்பு தகவலை வெளியிட்டார். இதற்கு டி.ஜி.பி. சத்திய நாராயணராவ் மறுப்பு தெரிவித்தார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக, சத்திய நாராயணராவ், ரூபா இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. சிறையில் நடக்கும் முறைகேடுகள் தொடர்பாக ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி வினய்குமார் தலைமையில் விசாரணை நடத்த முதலமைச்சர் சித்தராமையா உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில் டி.ஐ.ஜி. ரூபா, பரப்பன அக்ரஹாரா சிறைக்கு நேற்று மாலை வந்தார். அப்போது சிறை வளாகத்தில் இருந்த ராமமூர்த்தி என்ற கைதியின் மனைவி அனிதா என்பவர், சிறையிலுள்ள என் கணவர், முறைகேடுகள் பற்றி உங்களுக்கு தகவல் தெரிவித்ததாகக் கூறி, சிறை அதிகாரி கிருஷ்ணகுமாரால் தாக்கப்பட்டுள்ளார் என்றார்.
இதற்கு 'நான் பார்த்துக் கொள்கிறேன்' எனக் கூறிவிட்டு சிறைக்குள் சென்றார் ரூபா. இது தொடர்பாக, சிறை அதிகாரி கிருஷ்ணகுமாருக்கும், ரூபாவுக்கும் இடையே வாக்குவாதம் நடந்துள்ளது.