
இந்தியாவுக்கு எதிராக சிட்னியில் நடைபெற்று வரும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் ஸ்மித் சதம் அடித்துள்ளார்.
இந்தியா ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி சிட்னி நகரில் நேற்று தொடங்கியது. முதல் நாள் ஆட்டத்தில் மழையின் பாதிப்பு இருந்ததால் 55 ஓவர்கள் மட்டுமே வீச முடிந்தது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி முதல்நாள் முடிவில் இரண்டு விக்கெட் இழப்பிற்கு 166 ரன்கள் எடுத்துள்ளது.
ஸ்டீவ் ஸ்மித் 31, லபுஸ்சங்க்னே 67 ரன்களுடன் களத்தில் இருந்தனர். தன்னுடைய முதல் போட்டியில் களமிறங்கிய சைனியும், முகமது சிராஜும் தலா ஒரு விக்கெட் சாய்த்து இருந்தனர். மற்றபடி முதல் நாளில் ஆஸ்திரேலிய அணியின் பேட்டி சிறப்பாகவே இருந்தது.
இந்நிலையில், இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்கியது முதலே லபுசங்க்னே, ஸ்மித் ஜோடி நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தனர். சிறப்பாக விளையாடிய லபுசங்க்னே 91 ரன்களில் தன்னுடைய விக்கெட்டை பறிகொடுத்து சதத்தை நழுவவிட்டார். பின்னர் களமிறங்கிய மேத்யூ வாடே 13, கேமரூன் க்ரீன் 0, டிம் பெய்னே 1, பேட் கம்மின்ஸ் 0 என அடுத்தடுத்து விக்கெட் சரிந்தாலும் ஸ்மித் நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தார். 200 பந்துகளுக்கு மேல் சந்தித்து ஸ்மித் சதம் அடித்தார்.
ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட் இழப்பிற்கு 315 ரன்கள் எடுத்துள்ளது. ஸ்டார்க் அதிரடியாக விளையாடி 30 பந்துகளில் 24 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஜடேஜா மூன்று விக்கெட் வீழ்த்தினார். பும்ரா இரண்டு விக்கெட்டுகளை எடுத்தார். கடந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளில் சொதப்பி வந்த ஸ்மித் தற்போது மீண்டும் ஃபார்ம்க்கு திரும்பியுள்ளார்.