Published : 04,Jan 2021 05:54 PM

'கோவாக்சின்' சர்ச்சை: உலக அரங்கில் இந்தியாவின் நம்பகத்தன்மைக்கு பாதிப்பா? - ஒரு பார்வை

Why-the-controversy-over-Bharat-Biotech-s-covaxin--Extensive-analysis

உலகின் 60%-க்கும் மேற்பட்ட தடுப்பூசிகளை உருவாக்கும் இந்தியா, தற்போது 'கோவாக்சின்' தடுப்பூசிக்கு விரைவான ஒப்புதல் வழங்கியதால், அதன் வெளிப்படைத்தன்மையில் சந்தேகங்களை உருவாக்கலாம்.

இப்போதெல்லாம் இந்தியாவில் நடக்கும் பல விஷயங்களைப் போலவே, தடுப்பூசி ஒப்புதலிலும் அரசியல் நுழைந்துள்ளது. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், அஸ்ட்ராஜென்கா நிறுவனத்துடன் இணைந்து சீரம் இன்ஸ்ட்டியூட் ஆப் இந்தியா நிறுவனம் கோவிஷீல்ட் என்ற கொரோனா தடுப்பு மருந்தையும், ஐசிஎம்ஆர் மற்றும் புனேவில் உள்ள வைரலாஜி நிறுவனத்துடன் இணைந்து பாரத் பயோடெக் நிறுவனம் கோவாக்சின் எனும் தடுப்பு மருந்தையும் தயாரித்து வருகின்றன. இதில் கோவாக்சின் தடுப்பு மருந்தின் 3-வது கட்ட க்ளினிக்கல் பரிசோதனை இன்னமும் நிறைவுபெறவில்லை என்பதுதான் சர்ச்சைக்கு முக்கிய காரணம். 

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் தேசிய வைராலஜி இன்ஸ்டிடியூட் ஆகியவற்றுடன் இணைந்து உருவாக்கப்பட்ட பாரத் பயோடெக் இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனத்தின் கோவாக்சினுக்கான அவசர ஒப்புதல் என்பது, விஞ்ஞான மற்றும் சுகாதார சமூகங்களில் புருவங்களை உயர்த்தியுள்ளது. பரிசோதனை முழுமை பெறாத நிலையில், பொதுமக்களின் பயன்பாட்டுக்கு ஒப்புதல் தருவது துரதிர்ஷ்டவசமானது என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

1 கோடிக்கும் அதிகமான கொரோனா வைரஸ் தொற்று பாதிப்புகளுடன், அமெரிக்காவுக்கு அடுத்ததாக உலகின் இரண்டாவது மிக மோசமான பாதிப்புக்குள்ளான நாடாக இந்தியா இருக்கிறது.  உலகளாவிய தொற்றுநோயை ஒரு தீர்க்கமான முடிவுக்கு கொண்டு வருவதற்கு தடுப்பூசி பெரிதும் முக்கியம். நாட்டின் வைரஸ் பாதித்த பொருளாதாரம் மற்றும் அதன் நீடித்த சுகாதார அமைப்புகளும் மீட்கப்பட வேண்டும் என்பது அனைவரின் விருப்பமாக உள்ளது. ஆனால், இதில் அரசியல் சர்ச்சைகளை நுழைய அனுமதிப்பது ஆபத்தானது. மேலும், இதுபோன்ற சர்ச்சைகள் தடுப்பூசி பற்றிய மக்களின் நம்பிக்கையையும் அசைக்கிறது.

image

கோவாக்சினுக்கான அசாதாரண ஒப்புதலுடன் இது நடக்கிறது என்று தோன்றுகிறது. இதன் கள விளைவுகள் எப்படி இருக்கும் என்று யாருக்கும் தெரியவில்லை. கோவிஷீல்ட் யாருக்கு கிடைக்கும், யாருக்கு கோவாக்சின் வழங்கப்படும்? மிக முக்கியமாக, இதனை யார் முடிவு செய்வார்கள்? - வருமானம், செல்வம் மற்றும் சமூக அந்தஸ்தில் பெரிய ஏற்றத்தாழ்வுகள் நிறைந்த ஒரு நாட்டில், இவை சாதாரணமான கேள்விகள் அல்ல. தடுப்பூசி தேர்வு செயல்முறை குறித்து எதிர்க்கட்சித் தலைவர்கள் சந்தேகம் எழுப்பியபோது, பிரதமர் நரேந்திர மோடியின் அமைச்சரவையில் ஓர் அமைச்சர் இது "எங்கள் வீரர்களின் வீரம்" என்று பதிலளித்தார்.

தடுப்பூசி தயாரிப்பில் சீனாவும் ரஷ்யாவும் மேற்கு நாடுகளை வெல்ல அதிக ஆசைப்படுகின்றன. ஆனால், இரு நாடுகளின் தடுப்பூசி தயாரிப்பாளர்களிடமும் வெளிப்படைத்தன்மை இல்லாதது, அவர்களின் மீதான நம்பகத்தன்மையை உலக அளவில் கேள்விக்குறியாக்கும். உலகின் தடுப்பூசிகளில் 60% க்கும் அதிகமானவற்றை உற்பத்தி செய்யும் இந்தியா, இதுபோன்ற ஆபத்தினை தவிர்க்க வேண்டும்.

image

ஊடக அறிக்கையின்படி, பாரத் பயோடெக் 23,000 தன்னார்வலர்களை மூன்றாம் கட்ட மருத்துவ பரிசோதனைகளுக்கு சேர்த்துள்ளது. ஆனால், கடந்த மாதம் வெளியிடப்பட்ட மற்றொரு அறிக்கையில், புதுடெல்லியை தளமாகக் கொண்ட ஒரு பெரிய ஆராய்ச்சி மருத்துவமனை, ஆய்வுக்கு போதுமான தன்னார்வலர்களை கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறியது. மூன்றாம் கட்ட தரவு இல்லாத நிலையில் கூட கோவாக்சினுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது என்பது கோவிஷீல்ட் கொள்முதல் ஒப்பந்தங்களில் "சிறந்த தள்ளுபடி"யை பெற ஒரு வணிக தந்திரமாக இருக்கலாம் என்ற பார்வையும் எழுந்துள்ளது.

உலகின் 60%-க்கும் மேற்பட்ட தடுப்பூசிகளை உருவாக்கும் இந்தியா, தற்போது கோவாக்சின் தடுப்பூசிக்கு விரைவான ஒப்புதல் வழங்கியதால், அதன் வெளிப்படைத்தன்மையில் சந்தேகங்களை ஏற்படுத்தலாம் என்ற கருத்தும் உருவாகியிருக்கிறது.

தகவல் உறுதுணை: theprint.in

சற்று முன்எடிட்டர் சாய்ஸ்