Published : 14,Jul 2017 03:31 PM

ஆர்.கே.நகர் பணப்பட்டுவாடா வழக்கு விசாரணையில் முன்னேற்றமில்லை: உயர்நீதிமன்றம் கருத்து

No-improvement-in-RK-Nagar-Money-scandal-case--Chennai-High-Court

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா வழக்கு விசாரணையில் முன்னேற்றமில்லை எனக் கூறியுள்ள உயர்நீதிமன்றம் விசாரணை குறித்து கண்காணித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி சென்னை கிழக்கு இணை ஆணையர் மனோகரனுக்கு உத்தரவிட்டுள்ளது. வழக்கறிஞர் வைரக்கண்ணன் தொடுத்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வைரகண்ணன் தனது மனுவில், தேர்தலில் பணப்பட்டுவாடா செய்தது தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, செங்கோட்டையன், விஜயபாஸ்கர் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் மீது வழக்கு பதிய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளதை குறிப்பிட்டிருந்தார். இதனால் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய போலீசாருக்கு உத்தரவிட கோரியும் அவர் முறையிட்டிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் சத்திய நாராயணன், சேஷசாயி முன் விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் முத்துகுமாரசாமி, வழக்கு தொடர்பாக தாக்கல் செய்த டைரியை ஆய்வு செய்த நீதிபதிகள், வருமான வரி ஆவணங்களில் மூன்று பேரின் பெயர்கள் பிரதானமாக இடம் பெற்றுள்ளதை சுட்டிக் காட்டினர். மேலும் இவர்களது பெயர்கள் முதல் தகவல் அறிக்கையில் இடம் பெறாதது ஏன் எனவும் கேள்வி எழுப்பினர். அதோடு வழக்கு விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை என குற்றம்சாட்டினர்.

இதனையடுத்து புலன் விசாரணையை சென்னை கிழக்கு இணை ஆணையர் மனோகரன் கண்காணித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். பின்னர் விசாரணை ஆகஸ்ட் 23-க்கு தள்ளி வைக்கப்பட்டது.