Published : 29,Dec 2020 03:28 PM
இதுதான் தனது மறைந்த தந்தைக்கான அற்புதமான சமர்ப்பணம்! - காத்திருந்து சாதித்த முகமது சிராஜ்

வழக்கமாக கிரிக்கெட் வீரர்களின் கதை என்றால் ஒரே டெம்ப்லேட்டில் தான் இருக்கும். சிறு வயதில் கொண்ட ஆசையின் காரணமாக முறையான பயிற்சி பெற்று, உள்ளூர் கிரிக்கெட்டில் அசத்தி தேசிய அணியில் இடம்பிடிப்பது. ஆனால், இந்திய அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளாரான முகமது சிராஜுக்கு அப்படி இல்லை. ஹைதராபாத் நகர வீதிகளில் ஆட்டோ ரிக்ஷா ஓட்டி வாழ்வாதாரத்தை ஈட்டி வந்த ஆட்டோ தொழிலாளியான முகமது கவுசின் மகன் தான் சிராஜ். அவரது அம்மா ஷபானா பேகம் வீட்டு வேலை செய்யும் பணியை கவனித்து வந்துள்ளார்.
9⃣ down! Australia lose Nathan Lyon.
— BCCI (@BCCI) December 29, 2020
Mohammed Siraj strikes for #TeamIndia. ?? #AUSvIND
Follow the match ? https://t.co/lyjpjyeMX5pic.twitter.com/u9JD0meY8J
வறுமை தான் சிராஜின் பின்னணி. சொல்லமாளாத வறுமையை அவர் பால்யத்தில் எதிர்கொண்டுள்ளார். இருப்பினும் சிறு வயதில் அவருக்குள் கிரிக்கெட் ஆசை துளிர்விட்டுள்ளது. பேட்ஸ்மேனாக களம் இறங்கினார். ஒருகட்டத்தில் கிரிக்கெட் என்றால் சிக்ஸர் அடிக்கும் பேட்ஸ்மேன் மட்டும் தானா. நாம் ஏன் விக்கெட்டுகளை வேட்டையாடும் வேகப்பந்து வீச்சாளர் ஆகக்கூடாது என்ற கேள்வி எழுந்துள்ளது. அதன் விளைவாக சிராஜ் பந்து வீச்சாளராக உருமாறினார். அந்த முடிவிற்கு அவரது நண்பர்களும் காரணம். குடும்ப வறுமையினால் கல்லி கிரிக்கெட்டில் மட்டுமே விளையாடி வந்தார். அதனால் தொழில்முறை கிரிக்கெட் பயிற்சியை அவர் பெற்றதே இல்லை.
ஆனால் அதையெல்லாம் மாற்றியது 2015இல் நடந்த அந்த ஒரு சம்பவம் தான். நண்பனின் அழைப்பை ஏற்று சார்மினார் கிரிக்கெட் கிளப்பில் வலைப்பயிற்சியின் போது அந்த கிளப் வீரர்களுக்கு பந்து வீசியுள்ளார் சிராஜ். அதை பார்த்து மிரண்டு போன அந்த கிளப் அணி சிராஜை அடுத்த போட்டியில் விளையாட வைத்து அழகு பார்த்தது. அந்த போட்டியில் 5 விக்கெட்டுகளை சிராஜ் அள்ள, அவர் பட்ட கஷ்டங்களுக்கு எல்லாம் விடிவு காலம் பிறந்ததை போல 23 வயது உட்பட்ட மாநில அணியில் இடம் பிடித்தார். தொடர்ந்து சீனியர் அளவிலான மண்டல அணியிலும் சிராஜ் தனது இடத்தை உறுதி செய்தார்.
அதன் மூலம் 2015இல் ஹைதராபாத் அணிக்காக ரஞ்சி கோப்பையில் அறிமுக வீரராக களம் கண்டார். இருப்பினும் அந்த சீசனில் ஒரே ஒரு ஆட்டத்தில் மட்டுமே விளையாடினார். அடுத்த சீசனில் 9 ஆட்டங்களில் விளையாடி 41 விக்கெட்டுகளை அள்ளினார். அதன் மூலம் ஹைதராபாத் அணியின் லீடிங் விக்கெட் டேக்கரானார். அதாவது இரண்டு சீசனாக ஹைதராபாத் அணிக்காக விளையாடிய சிராஜ் அதில் கிடைத்த பணத்தில் அப்பா - அம்மாவுக்கு வீடு வாங்கி கொடுக்கவும் விரும்பியுள்ளார்.
ரஞ்சியில் அசத்தலாக விளையாடிய சிராஜை ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 2017 சீசனில் விளையாட 2.6 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது. அந்த சீசனில் ஹைதராபாத் அணிக்காக ஐபிஎல் விளையாடிய சிராஜ் 6 ஆட்டங்களில் பத்து விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். தொடர்ந்து உள்ளூர் கிரிக்கெட்டில் சிராஜ் அசத்திக் கொண்டிருந்தார். வறுமை எனும் விக்கெட்டை தனது பந்துவீச்சால் வீழ்த்தினார்.
உள்ளூர் கிரிக்கெட்டில் அசத்தியதால் இந்திய அணிக்காக டி20 விளையாடும் வாய்ப்பையும் பெற்றார். நியூசிலாந்துக்கு எதிராக 2017இல் களம் கண்டு முதல் போட்டியிலேயே கேன் வில்லியம்சன் விக்கெட்டை வீழ்த்தினார். அதையடுத்து இரண்டு சர்வதேச டி20 போட்டியிலும் சிராஜ் விளையாடியுள்ளார். 2018 ஐபிஎல் சீசனில் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் விளையாட ஏலத்தில் எடுக்கப்பட்டார். கடந்த 2020 சீசன் வரை அந்த அணிக்காகவே ஐபிஎல் விளையாடியுள்ளார் சிராஜ். 35 ஐபிஎல் ஆட்டங்களில் விளையாடியுள்ள சிராஜ் 39 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். இடையில் 2019இல் இந்திய ஒருநாள் அணியிலும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஒரு ஆட்டத்தில் சிராஜ் விளையாடினார்.
அண்மையில் அமீரகத்தில் முடிந்த ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்காக விளையாடிய சிராஜ் கொல்கத்தா அணிக்கு எதிராக 4 ஓவர்கள் வீசி வெறும் 8 ரன்களை மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். அந்த அபாரமான மேட்ச் வின்னிங் இன்னிங்ஸ் மூலம் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய டெஸ்ட் அணியில் இடம்பெற்றார்.
ஐபிஎல் முடிந்த கையோடு ஆஸ்திரேலியாவுக்கு பறந்து தீவிர பயிற்சியில் ஈடுப்பட்டுக் கொண்டிருந்த போது தான் அந்த இடி அவர் மீது வீழ்ந்தது. வறுமையை எல்லாம் வீழ்த்திய அதே சிராஜால் அந்த இடி கொடுத்த செய்தியை மட்டும் வீழ்த்த முடியவில்லை. அது அவரது அப்பாவின் மரண செய்தி. அதை கேட்ட சிராஜின் கண்களில் கண்ணீர் காட்டாற்று வெள்ளமாக பெருத்தெடுத்தது.
கேப்டன் கோலி சிராஜை தேற்றினார். பிசிசிஐ அவர் இந்தியா திரும்ப டிக்கெட் போட்டுத்தர தயாராக இருந்தது. ஆனால் அப்பாவின் ஆசையை நிறைவேற்றுவதற்காக ஆஸ்திரேலியாவிலேயே அணியுடன் தங்கிவிட்டார். ‘நான் கிரிக்கெட் விளையாடினால் தான் அப்பாவுக்கு பிடிக்கும். இந்த தொடரில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்தியாவை வெற்றி பெற செய்து, அந்த வெற்றியை அப்பாவுக்கு அஞ்சலியாக செலுத்துவேன் என உறுதி ஏற்றுள்ளார் சிராஜ்” என தெரிவித்து இருந்தார் அவரது மூத்த சகோதரர் முகமது இஸ்மாயில்.
ஆஸ்திரேலிய ஏ அணிக்காக இரண்டு பயிற்சி ஆட்டத்திலும் அட்டகாசமாக பந்து வீசினார். இருப்பினும் அணியில் அனுபவ வீரர்களின் இருப்பால் முதல் போட்டியில் விளையாடாமல் பெஞ்சில் உட்கார வைக்கப்பட்டார். வாய்ப்புக்காக காத்திருக்கும் போது பெற்ற வலியை வெறியாக மாற்றினார். ஷமி எலும்பு முறிவு காரணமாக தொடரிலிருந்து விலகியது, இஷாந்த் விளையாடாதது போன்ற காரணத்தால் ரஹானே தலைமையிலான இந்திய அணியில் மெல்பேர்ன் கிரிக்கெட் மைதானத்தில் பாக்சிங் டே டெஸ்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக களம் இறங்கினார். அவரது அறிமுகமே சிறப்பான சம்பவமாக அமைந்தது. அவருக்கு டெஸ்ட் போட்டிக்காக கேப்பை (தொப்பி) கொடுத்தது அஷ்வின்.
முதல் போட்டி என்ற எந்த பயமும் இல்லாமல் ஆஸ்திரேலிய மண்ணிலேயே அந்த அணியின் பேட்ஸ்மேன்களுக்கு தண்ணிகாட்டினார். அதுவும் இந்த ஆட்டத்தின் முதல் இன்னிங்ஸில் ஆட்டத்தில் செட்டாகி விளையாடிக் கொண்டிருந்த மார்னஸ் லபுஷேனை ரஹானேவின் ஸ்கெட்ச்சுக்கு ஏற்றபடி பந்துவீசி அவுட் செய்தார். அது டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரது முதல் விக்கெட். அதே இன்னிங்ஸில் கேமரூன் கிரீனையும் வீழ்த்தினார்.
Mohammed Siraj gets into the act now as he has Green caught beautifully at mid wicket by Jadeja. Australia 180-8 now and lead by 49 runs. #TeamIndia#AUSvIND
— BCCI (@BCCI) December 29, 2020
Details - https://t.co/bG5EiYj0Kvpic.twitter.com/RITWMj3yNK
“சிராஜ் அசலான டெஸ்ட் கிரிக்கெட் பவுலர். அவர் நியூ பாலில் சிறப்பாக இந்திய உள்ளூர் கிரிக்கெட்டில் பந்து வீசுவார் என்பதை கேள்விப்பட்டுள்ளேன். ஆனால் ஆஸ்திரேலியாவில் கொஞ்சம் சிரமத்தை எதிர்கொள்வார் என்று தான் கருதினேன். ஆனால் அவர் சிறப்பாக பந்து வீசியுள்ளார். ஷார்ட் பால், ஸ்விங் என வேரியேஷன் துல்லியமாக உள்ளது. சர்வதேச கிரிக்கெட்டில் சிறப்பாக பந்து வீசும் பவுலரை தான் இந்தியா அடையாளம் கண்டுள்ளது” என சிராஜை புகழ்ந்து பேசியுள்ளார் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங்.
இந்த ஆட்டத்தின் இரண்டாவது இன்னிங்ஸிலும் சிராஜ் 22 ஓவர்கள் வீசி மூன்று விக்கெட் வீழ்த்தியுள்ளார். அதன் மூலம் முதல் போட்டியிலேயே மொத்தமாக ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணியின் வெற்றிக்கு உதவியுள்ளார்.
இது சிராஜ் அவரது தந்தைக்கு செலுத்தியுள்ள சமர்ப்பணம் தான் அவர் எடுத்த விக்கெட்டுகளும் இந்திய அணியின் வெற்றி.
A bit of glove from Lyon, and Australia are now nine wickets down.
— cricket.com.au (@cricketcomau) December 29, 2020
Live #AUSvIND: https://t.co/qwpaGhOixspic.twitter.com/C3HzZU4NJX