Published : 26,Dec 2020 07:34 PM
'இன்னும் 15 நிமிடங்களில் வெடிக்கும்!' -கிறிஸ்துமஸ் தினத்தில் அமெரிக்காவை அதிரவைத்த சம்பவம்

கிறிஸ்துமஸ் தினத்தில் அமெரிக்க நகர் ஒன்றின் குடியிருப்புப் பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த கார் ஒன்றில் நடந்த வெடிப்புச் சம்பவம் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அமெரிக்காவின் நாஷ்வில்லே நகரத்தில் கிறிஸ்துமஸ் அதிகாலையில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் மக்கள் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது, அங்கே இருந்த குடியிருப்புப் பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த கார் ஒன்றில் பயங்கர சத்தத்துடன் வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. அதில் 3 பேர் காயமடைந்த நிலையில் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே, தற்போது இந்த வெடிப்புச் சம்பவத்தின் காட்சிகள் வெளியாகி உள்ளன. அதில், நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்றில் இருந்து ஒரு ஆடியோ ஒலித்து கொண்டிருந்தது. ``இன்னும் 15 நிமிடங்களில் இங்கே வெடிகுண்டு வெடிக்கும். இதை கேட்பவர்கள் உடனே இந்த இடத்தை விட்டு வெளியேறுங்கள்" என்பதே அந்த ஆடியோ.
இந்த எச்சரிக்கை ஒலித்துக்கொண்டே இருந்த அடுத்த சில நிமிடங்களில் காரில் இருந்து வெடிபொருள் வெடித்தது. இந்தக் காட்சிகள் அந்த வீடியோவில் வெளியாகியுள்ளன. நகரின் மத்தியில் இது நடந்ததால் அந்தப் பகுதி முழுவதும் சில மணிநேரம் கரும்புகை சூழ்ந்துக்கொண்டது. கட்டடங்கள் பலத்த சேதத்துக்கு உள்ளாகின. அதிலும் தொலைபேசி சேவை வழங்கும் நிறுவன கட்டடம் ஒன்றும் பலத்த சேதமடைந்தது. இந்தத் தகவல் அறிந்த உடனே, நாஷ்வில்லே சர்வதேச விமான நிலையத்திலிருந்து அனைத்து விமான சேவைகளையும் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது.
இந்தச் சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதுதொடர்பாக பேசியுள்ள நாஷ்வில்லே நகர போலீஸ், ``ஆடியோ ஒலித்துக்கொண்டிருக்கும் கார் குறித்து எங்களுக்கு தகவல் கிடைத்தது. உடனே நாங்களும் எச்சரிக்கை விடுக்கும் பணியில் இறங்கினோம். அப்பகுதி மக்களுக்கு எச்சரிக்கை விடுத்து, அவர்களை உடனே அங்கிருந்து அப்புறப்படுத்தினோம். வெடிகுண்டு நிபுணர்களையும் சம்பவ இடத்துக்கு வரவழைத்து சோதனையிட்டு வருகிறோம்.
இந்தத் தாக்குதல் ஏன் நடத்தப்பட்டது என்பது தெரியவில்லை. தகுந்த நேரத்தில் எச்சரிக்கை கொடுக்கப்பட்டதால் பெரிய அசம்பாவிதம் தடுக்கப்பட்டது. காயமடைந்த மூன்று பேரும் உடனடியாக மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டனர். அவர்கள் யாரும் ஆபத்தான நிலையில் இல்லை" எனக் கூறியுள்ளது.
கிறிஸ்துமஸ் தினத்தில் அமெரிக்கவை அதிரவைத்த இந்தச் சம்பவத்தில் எஃப்.பி.ஐ (FBI) உள்ளிட்ட பல்வேறு விசாரணை ஏஜென்சிகள் விசாரணை நடத்தி வருகின்றன.