[X] Close

இன்ஃப்ளூயன்சா to சைனஸ்... குளிர்கால முன்னெச்சரிக்கைகள்! - அரசு மருத்துவர் தரும் ஆலோசனைகள்

சிறப்புக் களம்,ஹெல்த் - லைஃப்ஸ்டைல்

winter-season-diseases-and-prevention--Government-Physician-Advice

தமிழகத்தில் தற்போது குளிர் அலை வீசி வருவதாலும், மாநிலம் முழுவதும் கடுங்குளிர் நிலவி வருவதாலும் குளிர் கால நோய்களுக்கு உள்ளாகும் வாய்ப்பு உள்ளது. குளிர்கால நிலைகளில் வரும் முக்கிய நோய்க்குறிகள் மற்றும் அவற்றை தவிர்க்க செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விளக்குகிறார், அரசு பொதுநல மருத்துவர் ஃபரூக் அப்துல்லா.

வைரஸ் காய்ச்சல்

குளிர் காலங்களில் பெரும்பாலும் வீடுகளுக்குள் மக்கள் இருக்கும் சூழல் வருவதால், குடும்பத்தில் ஒருவருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டாலும், அதை அவர் பிறருக்கு பரப்பிவிட வாய்ப்பு அதிகம். குளிர் காலங்களில் இருமல், மூக்கு ஒழுகுதல், காய்ச்சல் போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தும் இன்ஃப்ளூயன்சா வைரஸ் எளிதில் பரவும். இந்த வருடம் நாம் அதனுடன் சேர்த்து கொரோனா வைரஸையும் கட்டுப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.


Advertisement

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

1. நோய் அறிகுறி வந்தவரை தனிமைப்படுத்த (Isolation) வேண்டும்

2. நோய் அறிகுறி ஏற்பட்டவர் முகக்கவசம் அணிய வேண்டும்.

3. வெளியே சென்று பிறருக்குப் பரப்புவதை தவிர்க்க வேண்டும்.

4. வெந்நீர் பருக வேண்டும்.

5. மூன்று நாட்கள் நல்ல ஓய்வு தேவை

6. எளிதில் ஜீரணமாகும் உணவுகளை உட்கொள்ள வேண்டும்.

7. காய்ச்சல் மூன்று நாட்களில் குணமாகாவிடில் மருத்துவரை நாட வேண்டும்

 ஆஸ்துமா/ நுரையீரல் அழற்சி

 நுரையீரலில் அழற்சி நோய் இருப்பவர்களுக்கு குளிர் காலம் மிகவும் சவாலான காலமாகும். வெளியே நிலவும் குளிர் சீதோஷ்ண நிலையினாலும் நுரையீரலுக்கு உள்ளே குளிர்ந்த காற்று செல்வதாலும் சுவாசப்பாதை சுற்றளவில் சுருங்கி அதனால் மூச்சுத்திணறல் ஏற்படும்.

 முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

1. கட்டாயம் இந்த காலங்களில் குளிர்ந்த பானங்கள் அருந்துவதை தவிர்க்க வேண்டும்.

2. தூசி சேர்ந்த இடங்களை சுத்தம் செய்வதை தவிர்க்க வேண்டும்.

3. ஆஸ்துமாவுக்கு எடுத்து வரும் இன்ஹேலர்களை மருத்துவரின் அறிவுரைப்படி முறையாக உபயோகிக்க வேண்டும்.

4. முடிந்த அளவு மாலை மற்றும் இரவு பனிபடர்ந்த சூழ்நிலைகளில் வீட்டை விட்டு வெளியே வருவதை தவிர்க்க வேண்டும். image

குடல் உபாதைகள்

நோரோ வைரஸ் எனும் வகை வைரஸ்களால் பரவும் வாந்தி பேதி உள்ளிட்ட அறிகுறிகளை உள்ளடக்கிய வயிற்று மற்றும் குடல் உபாதை நோய் குளிர் காலங்களில் அதிகம் பரவும் வாய்ப்பு  உண்டு.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

1. தண்ணீரை எப்போதும் காய்ச்சி வடிகட்டி பருக வேண்டும். தண்ணீரை காய்ச்சும் போது ஐந்து நிமிடங்களுக்காவது தண்ணீர் நன்றாக கொதித்து நீர்க்குமிழ்கள் தோன்றுமளவு நீர் கொதித்திருக்க வேண்டும்.

2. வயிற்றுப்போக்கு ஏற்படும்போது ஓ.ஆர்.எஸ் (Oral Rehyrdation Salt Solution) எனும் திரவத்தைப் பருக வேண்டும்.

3. எளிதில் ஜீரணமாகாத உணவுகளைத் தவிர்த்து விட வேண்டும்.

4. வாந்தி, வயிற்றுப்போக்கு அதிகமாக இருந்தால் மருத்துவரை நாடி உடனே சிகிச்சை பெற வேண்டும்.

 வறட்சி கண்ட தோல் நோய்

குளிர் காலங்களில் பெரும்பாலும் முதியோருக்கு கால்களில் இருக்கும் சருமம் நன்றாக வறட்சி கண்டிருக்கும். இதனால் அரிப்பு ஏற்படும். இதை "Xerotic Eczema" என்று அழைக்கிறோம்.

 முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

1. தோல் வறட்சி கண்ட இடங்களில் செக்கில் ஆட்டிய தூய தேங்காய் எண்ணெய் தடவி வரவும். வாசலின் போன்ற மாய்ஸ்ச்சரைசர்களையும் தடவலாம்.

2. அரிப்பு ஏற்பட்ட இடங்களில் புண் ஏற்பட்டால் உடனே மருத்துவ சிகிச்சை பெற வேண்டும். அதிலும் நீரிழிவு நோயாளிகள் காலில் ஏற்படும் அத்தகைய புண்களை அதிக கவனத்துடன் கையாள வேண்டும்.

imageநிமோனியா நுரையீரல் தொற்று

பனிக்காலங்களில் ஏற்படும் தொற்றுகள் நிமோனியா எனும் நுரையீரலை தாக்கி பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் வாய்ப்பு அதிகம். அதிலும் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் முதியோர்களுக்கு வரும் சாதாரண தொற்று கூட சில நாட்களில் நுரையீரலை தாக்கி விடும் சூழல் ஏற்படும். 

 முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

 1. முதியோர்களை இயன்றவரை பொது இடங்களில் கலக்காமல் வீடுகளுக்குள் வைத்து பாதுகாக்க வேண்டும்.

 2. முடிந்தவரை இந்த காலங்களில் அவசியத்தேவையன்றி மருத்துவமனை விசிட்களை குறைத்துக்கொள்ளலாம். காரணம் அங்கிருந்து தொற்று பரவும் வாய்ப்பு அதிகம்.

 3. அறுபது வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு நியுமோகாக்கல் தடுப்பூசியை கிடைக்கச் செய்யலாம்,

 குளிர்ந்த பாத நோய்

 குளிர்காலங்களில் முதியோர்களுக்கு ஏற்படும் நோய் இது. அதிலும் நீரிழிவு இருப்பவர்களுக்கு கால் பாதங்களில் உணர்வு குறைவாகவே இருக்கும். இதனால் கால்களை குளிர்ந்த  தரைகளில் நீண்ட நேரம் வைத்திருப்பதால், பாதங்களில் உள்ள ரத்த ஓட்டம் வெகுவாக குறைந்த அதனால் புண் ஏற்பட வாய்ப்பு உண்டு .

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

1. கால்களில் காலுறை அல்லது வீடுகளுக்குள் அணியும் பாதணி அணிந்து கொள்வது சிறந்தது.

2. நீண்ட நேரம் கால்களைத் தொங்கப்போட்டுக் கொண்டு உட்கார்ந்திருப்பது நல்லதல்ல. கால்களை மேஜைகளின் மேல் தூக்கி வைத்துக்கொள்வது நல்லது.

3. அவ்வப்போது மிதமான வெந்நீரில் கால் பாதங்களை அமிழ்த்தி சில நிமிடங்கள் வைத்திருந்து எடுக்கலாம். இது பாதங்களுக்கான ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்.

4. கால் பாதங்களை கண்ணாடியில் பார்த்து ஏதேனும் புண்கள் தோன்றியிருக்கின்றனவா? என்பதை கண்காணித்து வர வேண்டும்.

 ஹைப்போதெர்மியா

 இது நமது உடலின் உஷ்ணம் ஆபத்தான அளவு குறையும் நிலையாகும். 95 டிகிரி ஃபாரன்ஹீட் / 35டிகிரி செல்சியஸ் அளவுக்கு குறைவது உடலின் முக்கிய செயல்பாடுகளை நிறுத்தி மரணத்தை உண்டாக்க வல்லது. முக்கியமாக நாம் கவனமெடுக்க வேண்டியது - பிறந்து ஒரு வருடத்துக்குள் இருக்கும் பச்சிளம் குழந்தைகள் மற்றும் உடல் நலம் குன்றிய முதியோர்கள்.

 முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

 1. குழந்தைகளை எப்போதும் கதகதப்பான துணிக்குள் வைத்திருக்க வேண்டும். கை மற்றும் காலுறைகளை அணிவித்திருக்க வேண்டும்.

 2. குழந்தை தாய்ப்பால் சரியாக பருகாமல் இருந்தால் உடனே மருத்துவரிடம் காண்பிக்க வேண்டும்.

 3. முதியோர்களுக்கு நல்ல கம்பளிப்போர்வயை போர்த்திக்கொள்ள வழங்க வேண்டும்.

 மாரடைப்பு

குளிர் காலங்களில் மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு மற்ற காலங்களை விட 50% அதிகமாகிறது என்பதை ஆய்வு முடிவுகள் பரைசாற்றுகின்றன. குளிர் காலங்களில் உடலின் வெப்பநிலை குறைவதும், ரத்தத்தின் பிசுபிசுப்புத்தன்மை கூடி இருப்பதும் காரணங்களாக கூறப்படுகின்றன.

 முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

 1. இதய ரத்த நாள நோய் இருப்பவர்கள் கட்டாயம் அதிக உடல் ஆற்றலைக்கோரும் வேலைகளில் குளிர்காலங்களில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும்.

 2. நீரிழிவு ரத்த கொதிப்பு இதய நோய் போன்றவற்றுக்கு முறையாக மருத்துவம் பார்த்து மாத்திரைகளை எடுக்க வேண்டும்.

 முகவாதம் (Facial palsy)

குளிர்காலங்களில் ஏற்படும் மற்றொரு பிரச்சனை முகவாதம் ஆகும். முகத்தின் ஒரு பக்கம் தொங்கிப்போய் விடும்.  உதடு ஒரு பக்கமாக இழுத்துக்கொள்ளும். ஒரு பக்க கண் விழியை மூட இயலாது.

 முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

 1. கட்டாயம் வெறும் தரையில் துணி / பாய் விரிக்காமல் படுக்கக்கூடாது.

 2. வாடைக்காற்று வீசும் போதும் பயணங்களின் போதும் ஜன்னல்களை திறந்து வைத்து முகத்தில் குளிர்ந்த காற்று படுமாறு இருப்பதை தவிர்க்க வேண்டும். முக்கியமாக முதியோர்கள் இதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

3.முகவாதம் ஏற்பட்டால் உடனே மருத்துவரை சந்தித்து சிகிச்சை பெற வேண்டும். முறையான மருத்துவ சிகிச்சை மற்றும் இயன்முறை சிகிச்சையால் முழுமையாக இதை சரிசெய்ய இயலும்.

சைனஸ் தலைவலி

நாசிக்குள் இருக்கும் காற்று அறைகளை "சைனஸ்கள்" என்று அழைப்போம். மேக்சிலரி சைனஸ், ஃப்ரான்ட்டல் சைனஸ் போன்ற காற்றறைகள் உள்ளன. இவை குளிர் காலங்களில் அடைபட்டுக்கொண்டு அதனால் அதீத தலைவலி ஏற்படும்.

 முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

 1. மாலை நேரங்களில் தினசரி வெந்நீரில் வேது புடிக்க வேண்டும்.

2. குளிர்ச்சியான பானங்கள் அருந்துவதை தவிர்க்க வேண்டும்

3. வாடையில் வெளியே செல்லும் போது காதுகளை மறைத்து மூக்கை மறைக்கும் முகக்கவசங்களை அணிந்து பயணிக்க வேண்டும்.

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close