
கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானது தொடர்பான வழக்கில் தனக்கு யார் மீதும் தனிப்பட்ட பழிவாங்கும் எண்ணம் இல்லை என்று நடிகை பாவனா விளக்கமளித்துள்ளார். திலீப் கைதையடுத்து முதன்முறையாக அவர் கருத்து தெரிவித்திருக்கிறார்.
இது தொடர்பாக தனது சகோதரர் மூலம் முகநூலில் பதிவிட்டுள்ள பாவனா, நடந்த சம்பவங்கள் தொடர்பாக, ஊடகத்துறையினரை சந்தித்து விளக்கமளிக்கும் மனநிலையில் தான் தற்போது இல்லை என்று கூறியிருக்கிறார். இவ்விவகாரத்தில் தனக்கு யார் மீதும் சந்தேகம் எழுந்ததில்லை என்பதை தான் ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளதாகவும் பாவனா சுட்டிக்காட்டியுள்ளார்.
குற்றச்சாட்டில் சிக்கியுள்ள நடிகர் திலீப்புடன் தான் பல படங்களில் நடித்துள்ளதாகவும், பின்னர் சில தனிப்பட்ட பிரச்னைகளால் தங்களது நட்பை முறித்துக் கொண்டு விட்டதாகவும் பாவனா குறிப்பிட்டுள்ளார். தான் குற்றவாளி அல்ல என்று நடிகர் திலீப் கூறியிருப்பது உண்மையெனில், அவர் அதனை சட்டத்தின் முன் நிரூபிக்கட்டும் என்றும் பாவனா தெரிவித்துள்ளார். ஒரு நிரபராதி தண்டிக்கப்படக்கூடாது என்பதும், குற்றவாளி சட்டத்தின் பிடியில் இருந்து தப்பக்கூடாது என்பதுதான் தனது விருப்பம் என்றும் முகநூல் பதிவில் நடிகை பாவனா கூறியுள்ளார்.
நடிகை பாவனா கடத்தப்பட்டு பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்ட வழக்கில், நடிகர் திலீப் கடந்த சில தினங்களுக்கு முன் கேரள போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.