[X] Close

மேற்குவங்கத்தில் இரண்டு நாள் விசிட் - அமித்ஷாவின் சூறாவளி பயணமும், அனல் பறந்த பேச்சும்!

இந்தியா

Amit-Shah-said-People-hate-Mamata-Banerjee

'ஜெய் பிரகாஷ் நட்டா மீது மேற்கு வங்காளத்தில் நடந்த தாக்குதல், ஒட்டுமொத்த பாஜக மீதான தாக்குதல்' என்று குற்றஞ்சாட்டினார் அமித்ஷா. 

மேற்கு வங்காள மாநிலத்தில் இரண்டு நாள் சூறாவளி தேர்தல் பிரச்சாரத்தை இன்று முடித்துக்கொண்ட உள்துறை அமைச்சர் அமித் ஷா, மேற்கு வங்காள மாநிலம் மிகவும் பின்தங்கிய மாநிலமாக மாறி உள்ளது என குற்றம்சாட்டினார். செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அமித்ஷா,

''மருத்துவம், கல்வி, உட்கட்டமைப்பு வசதிகள் போன்ற பல்வேறு மக்களுக்கு மிகவும் இன்றியமையாத வசதிகள் மேற்கு வங்காள மாநிலத்தில் மிகவும் மோசமான நிலையில் பராமரிக்கப்படுகிறது என்றும் தொடர்ந்து பல்வேறு அரசுகள் மக்களின் தேவைகளை புறக்கணித்ததன் காரணமாக இந்த சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. 


Advertisement

இதற்கு காரணம் யார் என்பது மேற்குவங்காள மக்களுக்கு தெரியும். அவர்கள் தக்க பாடம் கற்பிப்பார்கள். ஊழல் மற்றும் குற்றங்கள் ஆகியவற்றில் தான் தற்போது மேற்குவங்காளம் முதலிடத்தில் இருக்கிறது. அரசு நடத்துபவர்கள் இதைப் பற்றி கவலை இல்லாமல் வன்முறையை கையில் எடுத்திருக்கிறார்கள்'' என்று கூறினார். 

தொடர்ந்து பேசிய அவர், ''மேற்கு வங்காள மாநிலத்தில் மாற்றம் தேவை என்பது மக்களுக்கு தெரிந்து விட்டது. பாரதிய ஜனதா கட்சி அந்த மாநிலத்தில் ஆட்சிக்கு வரும். மீண்டும் மேற்கு வங்காளத்தில் பொற்காலம் மலரும். மேற்கு வங்காள மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சி பெரும் வெற்றி பெறும் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை. இதன் காரணமாகத்தான் ஆளும் கட்சியினர் தனது கட்சியின் மீது வன்முறையை கட்டவிழ்த்து விட்டிருக்கிறார்கள்.

image


Advertisement

பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவரான ஜெ.பி.நட்டா மீது மேற்கு வங்காளத்தில் நடந்த தாக்குதல் இதற்கு எடுத்துக்காட்டு. அது ஒட்டுமொத்த பாரதிய ஜனதா கட்சி மீதான தாக்குதல்'' என்றும் அமித்ஷா குற்றஞ்சாட்டினார். 

அமித்ஷா கலந்து கொண்ட நிகழ்ச்சிகள்:

இன்று போல் போல்பூர் பகுதியிலே மாபெரும் பொதுக்கூட்டம் நடத்திய அமித் ஷா, "மட்டற்ற அன்பு மற்றும் மாபெரும் மக்கள் திரள் ஆகியவற்றை இதற்கு முன்பு நான் காணவில்லை. எந்த அளவுக்கு முதலமைச்சர் மம்தா பானர்ஜி மீது மக்கள் வெறுப்புடன் இருக்கிறார்கள் என்பதற்கு இதுவே ஒரு எடுத்துக்காட்டு” என அமித் ஷா பேசினார்.

ஏழை பாடகர் வீட்டில் உணவு:

முன்பாக பவுல் பாடகர் வாசுதேவ் தாஸ் இல்லத்துக்குச் சென்று அங்கே தரையில் அமர்ந்து சைவ உணவு உண்டார் அமிர் ஷா. இன்று அவர் சென்ற பவுல் பாடகரின் வீடு மிகவும் ஏழ்மையான பகுதியில் இருக்கிறது. அங்கே தரையில் அமர்ந்து இலையில் பரிமாறப்பட்ட மேற்கு வங்காள பாரம்பரிய முறை சைவ உணவை அமித் ஷா ரசித்து அருந்தினார்.

image

அனுமர் கோயிலில் பூஜை:

அவர் அனுமார் கோயில் ஒன்றுக்கு சென்று பூஜையும் செய்து பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் பிரச்சாரத்தை மேலும் முன்னெடுத்துச் செல்லும் பணிகளில் கட்சித் தலைவர்களுடன் ஈடுபட்டார்.

சாந்தி நிகேதனில் அமித்ஷா

ரவீந்திரநாத் தாகூரால் உருவாக்கப்பட்ட சாந்தி நிகேதனில் உள்ள விஸ்வ பாரதி பல்கலைக்கழகத்திற்கும் அமித் ஷா சென்று, அங்கே ரவீந்திரநாத் தாகூருக்கு புகழாரம் சூட்டினார். ரவீந்திரநாத் தாகூர் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய அமித் ஷா, “நான் எந்த மாநிலத்தில் இருந்து வருகிறேன் எப்படி இருக்கிறேன் என்பதெல்லாம் முக்கியம் அல்ல, நான் மேற்கு வங்காள மக்கள் மீது மட்டற்ற அன்பு வைத்திருக்கிறேன். ரவீந்திரநாத் தாகூர் மீது எனக்கு மிகப்பெரிய மரியாதை இருக்கிறது. அவருக்கு அளிக்கபட்டதன் காரணமாக நோபல் பரிசின் மரியாதையே உயர்ந்திருக்கிறது” என்றார். இதைத்தொடர்ந்து பாரதிய ஜனதா கட்சியின் பல்வேறு தலைவர்களையும் அமித் ஷா சந்தித்து உரையாடினார்.

2 நாள் பயணத்தின் தாக்கம் எப்படி இருக்கும்?

இந்த 2 நாள் சுற்றுப் பயணத்தின் மூலமாக முழுவீச்சாக அடுத்த வருடம் நடக்க உள்ள மேற்கு வங்காள சட்டமன்ற தேர்தலுக்கு பாரதிய ஜனதா கட்சி தனது பிரச்சாரத்தை முடுக்கிவிட்டிருக்கிறது. ஏற்கனவே பல காங்கிரஸ் தலைவர்கள் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்திருப்பது, மற்றும் சென்ற வருடம் நடந்த மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி எதிர்பார்த்ததை விட அதிக இடங்களை கைப்பற்றி இருப்பதன் காரணமாகவும், இந்த முறை பாரதிய ஜனதா மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு இடையே கடுமையான போட்டி நிலவும் என எதிர்பார்க்கபடுகிறது. இதன்காரணமாக இடதுசாரி கட்சிகள் மற்றும் காங்கிரஸ் ஆகியோர் மேற்கு வங்காள தேர்தல் களத்தில் பின் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.

image

மேற்கு வங்கத்திற்கு தற்பொழுதுள்ள சட்டமன்றம் அடுத்த ஆண்டு மே மாதம் 30ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. எனவே தமிழகத்தை போலவே வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் அந்த மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நேற்று மேற்கு வங்க மாநிலம் மிட்னாபூர் என்ற இடத்தில் நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட அமித் ஷா முன்னிலையில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த சுவேந்து அதிகாரி மற்றும் பல சட்டமன்ற உறுப்பினர்கள் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தனர்.

- கணபதி, புதிய தலைமுறை டெல்லி செய்தியாளர்


Advertisement

Advertisement
[X] Close