Published : 19,Dec 2020 10:02 PM
மாஸ்டருடன் ஈஸ்வரனையும் வெளியிடுங்கள் - தயாரிப்பாளரிடம் வலியுறுத்தும் சிலம்பரசன்?

மாஸ்டர் படத்துடன் ஈஸ்வரன் படத்தையும் வெளியிட வேண்டும் என்று ஈஸ்வரன் படத்தயாரிப்பாளரிடம் சிலம்பரசன் வலியுறுத்தியதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக, கடந்த 8 மாதங்களாக திரையரங்குகள் மூடப்பட்ட நிலையில், தளர்வுகளின் அடிப்படையில் அரசு 50 சதவீத பார்வையாளர்களுடன் திரையரங்குகளை இயக்க அனுமதி அளித்தது. ஆனால், திரையரங்குகளுக்கு ரசிகர்கள் வராததால் திரையரங்கு உரிமையாளர்கள் தவித்து வருகின்றனர். இதனால் சுமார் 400 திரையரங்குகள் மீண்டும் மூடப்பட்டுள்ளன. ஆதலால், இந்த கடுமையான சூழலில் இருந்து விஜயின் மாஸ்டர் திரைப்படம் மீட்கும் என திரையரங்கு உரிமையாளர்கள் உறுதியாக நம்புகின்றனர்.
ஆனால் மாஸ்டர் திரைப்படம் பல மாதங்களாக ரிலீஸுக்கு காத்திருப்பதால், தயாரிப்பாளருக்கு வட்டி அதிகரித்து கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அத்துடன் தற்போதைய நிலையில் வெளி நாடுகளிலும் படத்தை வெளியிட முடியாத சூழல் நிலவுகிறது. இருந்தாலும் இந்திய வியாபாரத்தை மட்டும் நம்பி பொங்கல் பண்டிகைக்கு மாஸ்டர் படத்தை வெளியிடுகின்றனர். ஆனால் தமிழகத்தில் உள்ள ஆயிரம் திரையரங்குகளில் மாஸ்டர் படத்தை மட்டும் வெளியிட வேண்டும் என்று திரையரங்கு உரிமையாளர்களிடம் தயாரிப்பாளர் லலித்குமார் கோரிக்கை வைத்தார்.
தயாரிப்பாளரின் கோரிக்கையை ஏற்ற திரையரங்க உரிமையாளர்கள் அனைத்து திரையரங்குகளிலும் மாஸ்டரை திரையிட திட்டமிட்டுள்ளனர். இதனால் கார்த்தியின் 'சுல்தான்’, சிலம்பரசனின் 'ஈஸ்வரன்', ஆகிய படங்களின் ரிலீஸைத் தள்ளிவைக்க சம்மந்தப்பட்ட தயாரிப்பாளர்கள் முடிவெடுத்தனர். இந்த நிலையில் 'ஈஸ்வரன்' படத்தை பொங்கல் பண்டிகைக்கு வெளியிட வேண்டும் என்று நடிகர் சிலம்பரசன் தன்னுடைய தயாரிப்பாளரிடம் வலியுறுத்தி வருகிறார் என தகவல் வெளியாகி இருக்கிறது. அத்துடன் திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தினரிடம் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார் எனவும் சொல்லப்படுகிறது.
ஆயிரம் திரையரங்குகளில் மாஸ்டர் படம் வெளியாவதால், மீதம் 104 சிறிய திரையரங்குகள் மட்டுமே உள்ளன. இது படத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் ’ஈஸ்வரன்’ திரைப்பட ரீலீஸை தள்ளிவையுங்கள் என்று திரையரங்கு உரிமையாளர்கள் கூறிவிட்டனர். இருந்தாலும் ’ஈஸ்வரன்’ பொங்கல் பண்டிக்கைக்கு வெளியாக வேண்டும், தன்னுடைய படம் மாஸ்டருடன் மோத வேண்டும் என்று சிலம்பரசன் உறுதியாக உள்ளார் என திரைத்துறையினர் கூறுகின்றனர். சிலம்பரசனின் முடிவு இதுவாக இருந்தாலும், ஓடிடியில் வெளியிடாமல் திரையரங்கில்தான் வெளியிடுவோம் என்று காத்திருந்த மாஸ்டர் படத்திற்கே முன்னுரிமை கொடுப்போம் என்று திரையரங்கு உரிமையாளர்கள் கூறுகின்றனர்.