[X] Close

ரஜினியின் கட்சியாகிறதா பழைய 'மக்கள் சேவைக் கட்சி'?

தமிழ்நாடு,தேர்தல் களம்

Rajinikanth-Political-entry-from-little-known-party-

தேர்தல் ஆணையத்தில் ஏற்கெனவே பதிவு செய்யப்பட்டு, பெரிதாக மக்கள் மத்தியில் அறிமுகம் இல்லாத ஒரு கட்சியின் பெயரையே நடிகர் ரஜினிகாந்த் பயன்படுத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்தக் கட்சியின் பெயர், 'மக்கள் சேவைக் கட்சி'.


Advertisement

நடிகர் ரஜினிகாந்த் புதிய கட்சி தொடங்க உள்ளதாக சில நாட்களுக்கு முன்பு அதிகாரபூர்வமாக அறிவிப்பு வெளியிட்டார். புதிய கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக அர்ஜுன மூர்த்தி என்பவரையும், மேற்பார்வையாளராக தமிழருவி மணியனையும் நியமனம் செய்திருந்தார். இதனிடைய கட்சிப் பணிகளும் மும்முரமாக நடைபெற்று வந்தன.

இந்நிலையில், தேர்தல் ஆணையத்தில் ஏற்கெனவே பதிவு செய்யப்பட்டு, மக்கள் மத்தியில் அறிமுகம் இல்லாத ஒரு கட்சியை நடிகர் ரஜினிகாந்த் பயன்படுத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, தேர்தல் ஆணையத்தில் 2018ம் ஆண்டு 'அனைத்திந்திய மக்கள் சக்தி கழகம்' எனும் பெயரில் ஒரு கட்சி பதிவு செய்யப்பட்டிருக்கிறது. பின்னர், அக்கட்சியானது கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் தேர்தல் ஆணையத்தின் மூலமாகவே 'மக்கள் சேவை கட்சி' என பெயர் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.


Advertisement

image

அத்துடன், மக்கள் சேவை கட்சியிடம் இருந்து தமிழகத்தில் அனைத்து தொகுதிகளிடம் இருந்து போட்டியிட ஏதுவாக பொதுவாக சின்னத்தை ஒதுக்கும்படி தேர்தல் ஆணைத்திடம் கோரிக்கை வைக்கப்பட்டிருக்கிறது. அந்த விண்ணப்பத்தின் பெயரில் 'ரஜினிகாந்த்' பெயர் குறிப்பிடப்பட்டிருக்கிறது. எனினும், அதிகாரபூர்வமாக ரஜினிக்கும் அந்த விண்ணப்பத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பது தெளிவு.

ஆனால், ரஜினிகாந்த் பொதுவாக பயன்படுத்தும் 'பாபா முத்திரை' சின்னத்தை ஒதுக்கும்படியும், அது இல்லாதபட்சத்தின் அவரின் 'பாட்ஷா' திரைப்படத்தை நினைவுப்படுத்தும் 'ஆட்டோ' சின்னத்தை ஒதுக்கும்படியும் கோரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில், மக்கள் மக்கள் சேவை கட்சிக்கு ஆட்டோ சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. சென்னை எர்ணாவூரில் இருந்து இக்கட்சி பதிவு செய்யப்பட்டிருக்கிறது.


Advertisement

இந்தக் கட்சியின் பெயரைத்தான் ரஜினி பயன்படுத்தப்போகிறார் என்று தகவல்கள் கூறுகின்றன. அதாவது, கட்சி ஆரம்பிக்க வேண்டும் என்று தீர்மானித்தவுடனே, ரஜினியே சிலரை நியமித்து, அவர்களது பெயரில் இப்படி ஒரு கட்சியைப் பதிவு செய்ய வைத்ததாகவும், ஜனவரியில் நடக்கவுள்ள மாநாட்டில் அதிகாரபூர்வமாக இந்தக் கட்சியின் பெயரை மாநாட்டின் மூலம் மக்களுக்கு அறிவிக்கவுள்ளதாகவும் ரஜினிக்கு நெருக்கமான வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விடை தெரியத் தொடங்கும் கேள்விகள்...

தமிழக மக்கள் மத்தியில் நீண்ட காலமாக விடை தெரியாமல் இருந்த கேள்வியாக ரஜினி எப்போது அரசியலுக்கு வருவார் என்பது இருந்து வந்தது. அந்தக் கேள்விக்கு தன்னுடைய திட்டவட்டமான அறிவிப்பை வெளியிட்டு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் ரஜினி. உடல்நல சிக்கல் காரணமாக ரஜினி அரசியல் நுழைவு குறித்த முடிவை கைவிட்டு விட்டதாக தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், ஜனவரியில் கட்சி தொடங்கப்படும் என்றும் அதுதொடர்பான அறிவிப்பு டிசம்பர் 31 ஆம் தேதி அறிவிக்கப்படும் என்றும் கடந்த டிசம்பர் 3 ஆம் தேதி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ரஜினி பதிவிட்டிருந்தார்.

அத்துடன், “வரப்போகின்ற சட்ட மன்றத் தேர்தலில், மக்களுடைய பேராதரவுடன் வெற்றி பெற்று, தமிழகத்தில் நேர்மையான, நாணயமான, வெளிப்படையான, ஊழலற்ற, ஜாதி மதச் சார்பற்ற ஆன்மீக அரசியல் உருவாகுவது நிச்சயம். அற்புதம்... அதிசயம்... நிகழும்” என்றும் அந்த ட்விட்டரில் தெரிவித்து இருந்தார். மேலும், மாத்துவோம் எல்லாத்தையும் மாத்துவோம், இப்போ இல்லைனா எப்பவும் இல்லை என்ற இரண்டு ஹேஷ்டேக்குகளையும் பயன்படுத்தினார்.

ட்விட்டரில் ரஜினி இந்த அறிவிப்பை வெளியிட்டது முதலில் தமிழக அரசியல் களத்தில் ஒரு பரபரப்பு தொற்றிக் கொண்டது. இதனையடுத்து, தமிழக பாஜகவின் அறிவுசார் பிரிவு தலைவராக இருந்த அர்ஜுன மூர்த்தியை தான் ஆரம்பிக்கவுள்ள கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராகவும், தமிழருவி மணியனை கட்சியின் மேற்பார்வையாளராகவும் நியமிக்கவுள்ளதாக ரஜினி பேட்டியின்போது தெரிவித்தார்.

ரஜினி அரசியல் நுழைவு உறுதியான உடனேயே தேர்தலுக்கு இன்னும் 5 மாதங்களே உள்ள நிலையில், அவர் எப்போது கட்சியை பதிவு செய்து கட்சியை தொடங்கப் போகிறார் என்பது குறித்த கேள்விகள் முன் வைக்கப்பட்டன. ஏனெனில் ஒரு அரசியல் கட்சி தொடங்க வேண்டும் எனில் அதற்கு முறையான நடைமுறைகள் இருக்கின்றன. ஜனவரியில்தான் கட்சி குறித்த அறிவிப்பே வெளியாகும் என அவர் கூறியதால் இந்த நடைமுறைகளை ரஜினி எப்படி மேற்கொள்ள போகிறார் என்ற கேள்வியும் முன் வைக்கப்பட்டது.

இந்நிலையில், ரஜினியின் அரசியல் கட்சி, சின்னம் தொடர்பான ஒரு தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது. அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளுக்கான சின்னங்களை தேர்தல் ஆணையம் நேற்று ஒதுக்கீடு செய்து இருந்தது. தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு குக்கர் சின்னம், நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் போன்றவை ஒதுக்கீடு செய்யப்பட்டன. கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்திற்கு புதுச்சேரியில் மட்டுமே டார்ச் லைட் சின்னம் கிடைத்தது. தமிழகத்தில் அந்த கட்சிக்கு டார்ச் லைட் சின்னம் கிடைக்கவில்லை.

இத்தகைய சூழலில்தான், மக்கள் சேவை கட்சி என்ற கட்சிக்கு ஆட்டோ ரிக்‌ஷா சின்னம் தேர்தல் ஆணையத்தால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. மக்கள் சேவை கட்சி தொடக்கத்தில் பாபா படத்தில் இடம்பெற்றிருந்த பாபா முத்திரை (அஷ்ட முத்திரா) போன்ற சின்னத்தை ஒதுக்கீடு செய்யுமாறு கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், காங்கிரஸ் கட்சியின் கை சின்னத்தோடு அது ஒத்துப்போவதால் பாபா முத்திரை சின்னத்தை தேர்தல் ஆணையம் நிராகரித்து விட்டதாக தெரிகிறது.

தொடக்கத்தில் அனைத்திந்திய மக்கள் சக்தி கழகம் என்றுதான் முதலில் பதிவு செய்யப்பட்டதாகவும், இரண்டு மாதங்களுக்கு முன்புதான் அது மக்கள் சேவை கட்சி என மாற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது. மக்கள் சேவை கட்சியின் தலைமை அலுவலகம் சென்னை எர்னாவூரில் அமைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தங்களுடைய சின்னத்தில் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் போட்டியிடவுள்ளதாக மக்கள் சேவை கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

ஆட்டோ ரிக்‌ஷா சின்னம் என்பது ரஜினியின் சினிமா கேரியருடன் தொடர்புடைய முக்கியமான சின்னம்தான். ரஜினி தன்னுடைய சினிமா வாழ்க்கையில் உச்சத்தை தொட்ட திரைப்படம்தான் பாட்ஷா. அவருடைய மாஸ்டர், கிளாசிக் ஹிட் படம் அது. அந்தப் படத்தில் இடம்பெற்ற ஓப்பனிங் பாடல்தான் நான் ஆட்டோ காரன் பாடல். அந்த பாடல் பட்டி தொட்டியெங்கும் மிகவும் பிரபலமானது. அந்த படத்தின் மூலம் ஆட்டோகாரர்கள் மீது கூடுதல் மரியாதை வந்தது என்று கூட சொல்லலாம். அந்த அளவிற்கு அந்த பாடலும் அந்த ஏற்றிருந்த ஆட்டோக்காரன் கதாபாத்திரமும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனால், ஒரு ஆட்டோ ரிக்‌ஷா சின்னம் கிடைத்தாலும் ரஜினிக்கு அது கூடுதல் பலம்தான்.

ஆனால், இந்த தகவல் எதுவும் ரஜினி தரப்பில் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்படவில்லை. அரசியல் கட்சியை பொறுத்தவரை யார் வேண்டுமென்றாலும் யார் பெயரில் வேண்டுமென்றாலும் கட்சியை தொடங்கலாம். சமீபத்தில் விஜய் பெயரில் அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் கட்சியை தொடங்கியது போல. ஆனால், ரஜினி இந்த தகவலை வெளிப்படையாக அறிவித்தால்தான் அது உறுதியாகும். இனிமேல் புதிய கட்சியை தொடங்குவது என்பது மிகவும் சிக்கலான ஒன்றாக இருக்கும் என்பதால் ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட ஒரு கட்சியில்தான் அவர் போட்டியிடக்கூடும் என்றே அரசியல் நோக்கர்களால் கூறப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement
[X] Close