Published : 13,Jul 2017 11:32 AM
கிருஷ்ணா நீரை நம்பி இருக்கும் சென்னை....

கண்டலேறு அணையிலிருந்து சென்னைக்கு நீர் திறக்க முடியாது என்று ஆந்திர அரசு கைவிரித்துவிட்ட நிலையில், சென்னையில் கடும் குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால், கிருஷ்ணா நதிநீரைப் பெற வேண்டிய கட்டாயத்தில் தமிழகம் உள்ளது.
கண்டலேறு அணையின் நீர்மட்டம் 4.65 டிஎம்சியாகக் குறைந்து விட்டதாலேயே சென்னைக்கு நீர் திறக்க முடியாது என ஆந்திரா கூறியுள்ளது. ஆனால் தமிழகம், மற்றும் ஆந்திர அரசுகளிடையேயான ஒப்பந்தத்தின்படி, சென்னைக்கு ஒவ்வொரு ஆண்டும் 12 ஆயிரம் மில்லியன் கனஅடி நீரை, ஆந்திர அரசு வழங்க வேண்டும். அதில், 8 ஆயிரம் மில்லியன் கனஅடி நீர் ஜூலையிலிருந்து அக்டோபர் மாதத்திற்குள் வழங்கப்பட வேண்டும். இந்த திட்டத்திற்கான நிர்மாணம் மற்றும் பராமரிப்பு பணிகளுக்காக தமிழக அரசு வழங்க வேண்டிய ஆயிரத்து 130 கோடி ரூபாயில், சுமார் 737 கோடி ரூபாய் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 393 கோடி ரூபாய் நிலுவையிலுள்ளது.
ஆனால், திட்டம் அமலான 1996-ஆம் ஆண்டிலிருந்து இதுவரை 77 ஆயிரம் மில்லியன் கனஅடி நீர் மட்டுமே சென்னைக்கு வந்துள்ளது. இருபது ஆண்டுகளில் 2 லட்சத்து 40 ஆயிரம் மில்லியன் கனஅடி நீர் வந்திருக்க வேண்டும். கடந்த ஆண்டு ஆந்திராவிலிருந்து 2 ஆயிரத்து 300 மில்லியன் கனஅடி நீர் மட்டுமே பெறப்பட்ட நிலையில், போதிய மழை இல்லாத காரணத்தினால் சென்னையின் குடிநீர் ஆதாரமாகத் திகழும் செம்பரம்பாக்கம் உள்ளிட்ட 4 ஏரிகளின் நிலை பரிதாபகரமாகவே உள்ளது.
இதனால் சென்னை மாநகருக்கு வழங்கப்படும் நீரின் அளவு நாள் ஒன்றுக்கு 470 மில்லியன் லிட்டர்களாகச் சுருங்கி விட்டது. எனவே குடிப்பதற்கு கூட போதிய தண்ணீர் கிடைக்காமல் சென்னை மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
சென்னைக்கு வழங்கப்படும் 470 மில்லியன் லிட்டர் நீரில், 380 மில்லியன் லிட்டர் குழாய்கள் மூலமாகவும், 55 மில்லியன் லிட்டர் லாரி மூலமாகவும் வழங்கப்படுகிறது. 35 மில்லியன் லிட்டர் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் தரப்படுகிறது. நாளொன்றுக்கு 700 டேங்கர் லாரிகள் மெட்ரோ வாட்டர் நிறுவனத்தால், இயக்கப்படுகின்றன. இவை 7ஆயிரம் முறை இயக்கப்படுகின்றன.
சென்னை குடிநீர் தட்டுப்பாட்டை போக்க ஆந்திராவிடமிருந்து உரிய கிருஷ்ணா நதி நீரைப் பெற வேண்டிய கட்டாயத்தில் தமிழகம் உள்ளது.