Published : 13,Jul 2017 11:14 AM
ட்ரம்ப்- புடின் உறவு உருவானது இப்படித்தான்...

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்புக்கும், ரஷ்யா அதிபர் புடினுக்கும் இடையேயான தொடர்பு குறித்த புதிய தகவல்கள் நாளுக்கு நாள் வெளிவந்து கொண்டே இருக்கின்றன. இந்த உறவு எப்படி உருவானது தெரியுமா?
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ரஷ்ய அதிபர் விளாதிமிர் புடின் குறித்து 2013-ஆம் ஆண்டு முதலே பாராட்டிப் பேசத் தொடங்கினார். ரஷ்யாவுக்கும் ட்ரம்புக்கும் இடையேயான முதல் தொடர்பு அரஸ் அகல்ரோவ் மூலமாக ஏற்பட்டது. இவர் ரஷ்யாவின் பெருந்தொழிலதிபர். ட்ரம்புடன் குடும்ப ரீதியாக நட்பு கொண்டவர். ட்ரம்பின் இரண்டாவது ரஷ்யத் தொடர்பு பாப் பாடகர் எமின் அகலரோவ் மூலமாக கிடைத்தது. இவர் அரஸ் அகலரோவின் மகன். ட்ரம்பை வீடியோக்களில் தோன்ற வைத்தவர் இவர்தான் என்று கருதப்படுகிறது.
இந்த உறவு வலையில் அடுத்ததாக வருபவர் ராப் கோல்ட்ஸ்டன். பிரிட்டனைச் சேர்ந்த முன்னாள் செய்தியாளரான இவர், ட்ரம்பு குழுமத் தயாரிப்புகளை பிரபலப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருபவர். இதனால், இவருக்கும் ட்ரம்பின் மகன் டொனால்ட் ட்ரம்ப் ஜூனியருக்கும் நெருக்கம் இருந்தது. கோல்ட்ஸ்மன், ரஷ்ய வழக்கறிஞரான நடாலியாவை ட்ரம்ப் ஜூனியருக்கும் அறிமுகப்படுத்தி வைத்தார். இதைத் தொடர்ந்து ட்ரம்பின் மருமகன் ஜேரட் குஷ்னர், ட்ரம்பின் அதிபர் தேர்தல் பரப்புரைக் குழுத் தலைவர் மனாஃபோர்ட் ஆகியோரும் நடாலியாவைச் சந்தித்துப் பேசினார்கள்.
இந்தச் சந்திப்பின்போதுதான் ஹிலரி தொடர்பான ரகசியத் தகவல்களை வழங்க ரஷ்யா தயாராக இருப்பதாகப் பேசப்பட்டது என ஊடகங்கள் தெரிவிக்கின்றன. நடாலியா, கோல்ட்ஸ்மன், ட்ரம்ப் ஜூனியர் ஆகியோர் ஹிலரிக்கு எதிராகச் செயல்பட்டிருக்கலாம். இவர்களுக்கு ரஷ்யா உதவியிருக்கலாம் என குற்றம்சாட்டப்படுகிறது.