[X] Close

இஸ்லாமியத்திற்கு எதிரானதா பிரான்ஸின் புதிய வரைவுச் சட்டம்? - ஒரு சிறப்புப் பார்வை

உலகம்,சிறப்புக் களம்

Explained-What-is-in-France-draft-law-against-Islamism

'பாதுகாப்பு சட்டம்' என்கிற பெயரில் பிரான்ஸ் கொண்டுவந்துள்ள புதிய வரைவுச் சட்டத்திற்கு எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன. இது "இனவெறி சட்டம்" என்றும், ''இந்த சட்டம் இஸ்லாமியர்கள் மீதான ஒவ்வாமையை அதிகரிக்கும்" என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதுகுறித்த விரிவான பார்வையை இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.


Advertisement

image

பிரான்ஸ் அரசு நேற்று ஒரு புதிய வரைவுச் சட்டம் ஒன்றை தாக்கல் செய்தது. குடியரசுக் கொள்கைகளை வலுப்படுத்த 'பாதுகாப்பு சட்டம்' என்கிற பெயரில் இந்தச் சட்டம் கொண்டுவரப்பட்டதாக அரசு தெரிவித்துள்ளது. அமைச்சரவையில் ஒப்புதல் கொடுக்கப்பட்டுள்ள இந்தச் சட்டம் விரைவில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளது.


Advertisement

ஆனால், இந்தச் சட்டத்துக்கு இஸ்லாமிய அமைப்புகள், இஸ்லாமிய மக்கள் கடும் எதிர்வினையை வெளிப்படுத்தியுள்ளனர். மேலும், இந்த சட்டம், 'இஸ்லாமிய குழு'க்களை ஒடுக்குவதற்காக இயற்றப்பட்டுள்ளது என்றும் இஸ்லாமிய அமைப்புகள் சொல்லிவருகின்றன. இப்படி சொல்லக் காரணம், சமீபத்தில் பிரான்ஸில் நடந்த சில கசப்பான சம்பவங்கள்தான்.

என்ன காரணம்?


Advertisement

பிரான்ஸ் தலைநகர் பாரிஸிலிருந்து 30 கி.மீ தொலைவில் உள்ள கான்ஃப்ளான்ஸ் செயின்ட் ஹொனோரின் என்ற இடத்தில் அமைந்திருக்கும் பள்ளி ஒன்றில் பணியாற்றி வந்தவர் ஆசிரியர் சாமுவேல் பேட்டி. இவர் கடந்த ஒன்றரை மாதத்திற்கு முன்னால் முகமது நபியின் கேலி சித்திரங்களை தனது வகுப்பில் காட்டியதற்காக, தலைதுண்டிக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலைத் தொடர்பாக 17 வயது இளம்பெண் உட்பட மூன்று பேர் கைதுசெய்யப்பட்டனர். இந்த விவகாரம் பிரான்ஸில் மதப்பிரச்னையாக வெடித்தது. பிரான்ஸில் இஸ்லாமியர்கள் மீதான வெறுப்பு அதிகரித்துக்கொண்டே செல்கிறது. தெருவோரத்தில் நின்றுகொண்டிருந்த இரண்டு இஸ்லாமிய பெண்ளை சிலர் கத்தியால் குத்தினர். சில இடங்களில் வன்முறை வெடித்தது.

image

ஆசிரியருக்கு நடந்த அஞ்சலிப் பேரணியில் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், "பிரான்ஸில் இஸ்லாமிய பயங்கரவாதம் ஒடுக்கப்படும். இனி ஐ.எஸ். பயங்கரவாதிகள் பிரான்ஸில் நிம்மதியாக தூங்க முடியாது" என ஆவேசமாகப் பேசினார். இதற்காக மேக்ரானுக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், சவூதி அரசர் என இஸ்லாமிய நாட்டுத் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஆனாலும், அதனைக் கண்டுகொள்ளாத மேக்ரான் அரசு தற்போது இந்த புதிய வரைவுச் சட்டத்தை கொண்டுவந்துள்ளது. இந்தச் சம்பவம் மட்டுமல்ல, கடந்த எட்டு ஆண்டுகளில் 200-க்கும் மேற்பட்ட உயிர்கள் மத பயங்கரவாதத்தால் பறிபோயுள்ளன என்கிறது பிரான்ஸ் அரசு. அதன் காரணமாகவே இந்தச் சட்டத்தை கொண்டு வரப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது.

புதிய சட்டம் சொல்வது என்ன?!

இஸ்லாமிய கோட்பாடுகளை கற்பிக்கும் ரகசியப் பள்ளிகளுக்கு தடை, மூன்று வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கான வீட்டுப் பள்ளிக்கூடத்துக்கு தடை போன்ற பள்ளி கல்வி சீர்திருத்தங்கள், மசூதிகள் மற்றும் சாமியார்கள் மீது கடுமையான கட்டுப்பாடுகள் மற்றும் ஆன்லைனில் வெறுப்பு பிரசாரங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கிறது இந்தச் சட்டம். பலதார மணத்துக்கு ஏற்கெனவே தடை இருக்கும் நிலையில், இந்தச் சட்டம் அதை மேலும் கடுமையாக்குகிறது.

image

அதாவது, பலதார மணம் புரிந்தவர்களின் குடியிருப்பு உரிமை விண்ணப்பங்கள் இந்தச் சட்டத்தின் மூலம் நிராகரிக்கப்படும். மேலும், மருத்துவர்கள் பெண்களுக்கு கன்னித்தன்மை பரிசோதனை செய்யத் தடை, அதை மீறினால் அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிகிறது. இதைவிட முக்கியமாக, இஸ்லாமிய அமைப்புகள் இனி நிதி விவகாரங்களில் வெளிப்படத்தன்மையை கடைபிடிக்க வேண்டும் என்று சட்டம் வலியுறுத்துகிறது.

பிரான்ஸில் அரசு அதிகாரிகள் பணியிடங்களில் மதம் சார்ந்த ஆடைகளை அணியக் கூடாது எனும் விதிமுறை இருக்கிறது. குறிப்பிட்ட ஊழியர்களுக்கு மட்டுமே இந்த விதி பொருந்தி வந்த நிலையில், போக்குவரத்துப் பணியாளர்கள், சந்தை ஊழியர்கள் போன்றவர்களுக்கும் இந்தச் சட்டம் வழியாக இந்த விதி விரிவுபடுத்தப்படுகிறது.

சட்டத்துக்கு எதிர்வினை என்ன?!

இந்தச் சட்டத்துக்கு கடுமையான விமர்சனம் வெளிநாடுகளிலிருந்து வந்துள்ளது. சமீபத்திய மாதங்களில் இம்மானுவேல் மக்ரோனை கடுமையாக விமர்சித்து வரும் துருக்கி ஜனாதிபதி ரெசெப் எர்டோகன், இந்தச் சட்டத்தை "வெளிப்படையான ஆத்திரமூட்டல்" என்று கூறியுள்ளார்.

image

எகிப்தின் மதகுருவான அல்-அஸ்ஹரின் கிராண்ட் இமாம், இந்தச் சட்டத்தை "இனவெறி சட்டம்" என்று கூறியுள்ளார். வெளிநாடுகளை போல இந்தச் சட்டத்துக்கு உள்நாட்டிலும் எதிர்வினை கிடைத்துள்ளது. இடதுசாரி அரசியல்வாதிகள், ''இந்த சட்டம் இஸ்லாமியர்கள் மீதான ஒவ்வாமையை அதிகரிக்கும்" என்று கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ஆனால், பிரான்ஸ் பிரதமர் ஜீன் காஸ்டெக்ஸோ, 'இது பாதுகாக்கும் சட்டம்' என்றும், இந்த சட்டத்தின் மூலம் தீவிர இஸ்லாமிய குழுக்களின் பிடியில் இருந்து இஸ்லாமியர்களை விடுவிக்கும் என்றும் விளக்கம் கொடுத்துள்ளார்.


Advertisement

Advertisement
[X] Close