[X] Close

"2015-ஐ காட்டிலும் இந்த ஆண்டு பாதிப்பு அதிகம்!" - விவசாயிகளின் கண்ணீரும் கள நிலவரமும்

விவசாயம்,சிறப்புக் களம்,தமிழ்நாடு

cuddalore--nagai--thiruvarur-districts-severe-affect-by-nivar-and-burevi---what-is-field-reality-

பரபரப்புடன் வந்த நிவர் புயலும், சத்தமே இல்லாமல் வந்த புரெவி புயலும் கடலூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களை துவம்சம் செய்திருக்கின்றன. இந்த மாவட்டங்களில் கிட்டத்திட்ட 4 லட்சம் ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கிக்கிடக்கின்றன. தற்போது இந்த மாவட்டங்களின் கள நிலவரம் குறித்து சொல்கிறார்கள் விவசாய சங்க தலைவர்கள்...


Advertisement

image

நிவரும், புரெவியும் வந்துசென்றுவிட்டது, மழையும் கூட ஓய்ந்துவிட்டது, நாமெல்லாம் ஓரளவு இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிவிட்டோம். ஆனால், இந்த இரண்டு புயல்களாலும் சூறையாடப்பட்ட திருவாரூர், நாகை, கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் இதுவரை தண்ணீரும் வடியவில்லை, கண்ணீரும் முடியவில்லை.


Advertisement

திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மூன்று மாவட்டங்களில் சுமார் 3 லட்சம் ஏக்கர் நெற்பயிர்கள், கடலூரில் 1.5 லட்சம் ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கிக்கிடக்கின்றன. கடலூரில் நெல் மட்டுமல்லாது வாழை, பொங்கல் கரும்பு, நிலக்கடலை, பருத்தி, காய்க்கறிப்பயிர்கள் போன்றவை ஆயிரக்கணக்கான ஏக்கரில் சேதமடைந்துள்ளன.

இந்த மாவட்டங்கள் மட்டுமின்றி தஞ்சாவூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களிலும் ஆயிரக்கணக்கான ஏக்கரில் விளைபயிர்கள் சேதமடைந்துள்ளன. மழை - வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இந்த மாவட்டங்களை முதல்வரும், வேளாண்மை துறை அதிகாரிகளும் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர். புயல், மழையால் இடிந்த வீடுகள், உயிரிழந்த கால்நடைகளுக்கு இழப்பீடுகளை அறிவித்துள்ள தமிழக அரசு, ஆய்வுக்கு பிறகு விவசாய பயிர் சேதங்களுக்கான நிவாரணம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.

image


Advertisement

தற்போதைய களநிலவரம் குறித்து பேசிய கடலூரை சேர்ந்த காவிரி டெல்டா பாசன சங்கங்களில் கூட்டமைப்பின் தலைவர் இளங்கீரன் “2015 ஆம் ஆண்டு கடலூரை பாதித்த பெரும் வெள்ளத்தை விடவும் அதிகளவு பாதிப்பு இந்த ஆண்டு விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ளது. ஒரு 15 நாட்களுக்கு முன்பு இந்த மழை வந்திருந்தால் நெற்பயிர்களுக்கு எந்த பாதிப்பும் இருந்திருக்காது. ஆனால் இப்போது சரியாக நெல் கதிர்விடும் நேரத்தில் இந்த பாதிப்பு ஏற்பட்டதால் இவ்வளவு பெரியசேதம் ஏற்பட்டுள்ளது.

நிவர், புரெவி என அடுத்தடுத்து தாக்கிய புயல்களால் கடலூர் மாவட்டத்தில் காட்டுமன்னார்கோவில், சிதம்பரம், குறிஞ்சிப்பாடி, பரங்கிப்பேட்டை, கீரப்பாளையம், புவனகிரி உள்ளிட்ட தாலுக்காக்களில் சுமார் ஒன்றே கால் லட்சம் ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. வேப்பூர், திட்டக்குடி தாலுக்காக்களில் பருத்தி, காய்கறிப்பயிர்கள் 3 ஆயிரம் ஏக்கரில் பாதிக்கப்ப்பட்டுள்ளது, மேலும் மாவட்டம் முழுவதும் பல்லாயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நிலக்கடலை, வாழை, பனிக்கரும்பு, மரவள்ளி உள்ளிட்ட பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது.

புயல் சேதங்களை பார்வையிட விவசாயிகளை சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி உணர்வுபூர்வமாக சந்தித்ததாக தெரியவில்லை, ஏதோ கடமைக்கு எங்களிடம் மனு வாங்கிக்கொண்டு போனதுபோலத்தான் தெரிகிறது. விவசாயிகள் சொல்லும் குறைகளைக்கூட கேட்காமல், வெறும் புகைப்படத்திற்காகவே முதல்வர் ஆய்வு செய்தார். மற்றபடி எங்களுக்கு எந்த இழப்பீடும் அறிவிக்கவில்லை.image

நாங்கள் ஒரு ஏக்கர் நெல்பயிருக்கு ரூ.30 ஆயிரம் செலவு செய்துள்ளோம், நிலக்கடலைக்கு ஏக்கருக்கு ரூ.50 ஆயிரம், வாழைக்கு ஏக்கருக்கு ரூ.75 ஆயிரம், பொங்கல் கரும்புக்கு ஏக்கருக்கு ஒரு லட்சம் ரூபாய் செலவு செய்துள்ளோம். இதனை ஈடு செய்யும் வகையில் உரிய நிவாரணம் கிடைத்தால்தான் அடுத்த சாகுபடி செய்யலாம்.

பயிர்க்காப்பீடு கிடைக்கும் என்று வேளாண்துறை சொல்கிறது. ஆனால் அப்படியே காப்பீடு கிடைத்தாலும் அது கிடைக்க இன்னும் 10 மாதங்கள் ஆகும். அதுவரை நாங்கள் என்ன செய்வது? எல்லா பயிர்களும் அழிந்துபோய் நிற்கும் நாங்கள் அடுத்த சாகுபடியை எப்படி செய்வோம்? வாங்கிய கடனை எப்படி அடைப்போம்? குடும்ப செலவுகளை எப்படி சமாளிப்போம் என்று தெரியவில்லை” என்கிறார் கவலையுடன்

திருவாருர், நாகை மாவட்டங்களின் கள நிலவரம் குறித்து பேசும் விவசாய சங்க நிர்வாகி சேரன் “நிவர் மற்றும் புரெவி புயல் காரணமாக 10 நாட்களாக பெய்த தொடர் கனமழையால் திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் பயிரிடப்பட்டிருந்த சுமார் 6.5 லட்சம் ஏக்கர் நெல்பயிர்களில் 50 சதவீதத்துக்கும் அதிகமான பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. தண்ணீர் வடிந்தாலும்கூட பயிரின் வயதினை பொறுத்து முழுவதுமாகவோ அல்லது பாதியளவோ பயிர் சேதம் ஏற்படும். இளம் நாற்றாக இருந்தால்கூட தண்ணீர் வடிந்தவுடன் மீண்டும் துளிர்த்து தூர்கட்டும் வாய்ப்புகள் உண்டு. ஆனால் இப்போது தண்ணீரில் மூழ்கியுள்ளவை பெரும்பாலும் 70 முதல் 80 நாள் பயிர்கள், கதிர் வரும் பருவத்தில் இருந்த இந்த பயிர்கள் அழுகிப்போய்விடும். முதல்வர் வந்து ஆய்வு செய்தபோதே அழுகிய பயிர்களை கண்டார், ஆனாலும் அரசு இதுவரை நிவாரணம் எதுவும் அறிவிக்கவில்லை.

image

நிவர் புயலால் பாதிக்கப்பட்ட கடலூரை பார்வையிட மத்தியக்குழு வந்தது. ஆனால் நிவர், புரெவி என இரு புயல்களால் பாதிக்கப்பட்டுள்ள நாகை, திருவாரூர் மாவட்டங்களை இக்குழு பார்வையிடவில்லை. உடனடியாக மத்திய, மாநில அரசுகள் சார்பில் உரிய நிவாரணம் வழங்கினால்தான் விவசாயிகளால் தற்போது ஏற்பட்டுள்ள பேரிழப்பிலிருந்து மீண்டுவர முடியும். எனவே அரசு தாமதிக்காமல் நிவாரணத்தை அறிவித்து விவசாயிகளின் கண்ணீரை துடைக்க வேண்டும்” என கூறுகின்றார்.

இன்னும் ஒரு மாதம் இருந்தால் அறுவரை செய்துவிடலாம் என்ற கனவுடன் இருந்த விவசாயிகளுக்கு,  “கைக்கு எட்டியதை வாய்க்கு எட்டவிடாமல்” செய்துள்ளது நிவர், புரெவி புயல்கள். கையறு நிலையில் நிற்கும் விவசாயிகளின் கண்ணீரை துடைக்க வேண்டியது அரசின் பொறுப்பு.

-வீரமணி சுந்தரசோழன்


Advertisement

Advertisement
[X] Close