[X] Close

முதல்வரை விவாதத்திற்கு அழைக்க ஆ.ராசாவிற்கு தார்மிக உரிமை இல்லை: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

தமிழ்நாடு

Minister-RB-Udhaya-Kumar-on-A-Raja-and-other-issues

"முதல்வர் பழனிசாமியை விவாதத்திற்கு அழைக்க, ஆ.ராசாவிற்கு தார்மிக உரிமை கிடையாது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குறித்து இனி அவதூறாக யார் பேசினாலும், எந்த நிலைக்கும் செல்ல எங்களுக்கு தெரியும்" என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.

மதுரை மாவட்டத்தில் இயற்கைப் பேரிடரால் சேதமடைந்த குடிசை வீடுகளை புனரமைப்பு செய்ய நிவாரண நிதியாக 59 பேருக்கு தலா 4100 ரூபாய் முதல் 5100 ரூபாய் வரையிலான நிவாரண உதவியை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வழங்கினார்.


Advertisement

image


பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், "நிவர், புரெவி புயல்கள் கரையை கடந்துள்ள நிலையில், பொருள் மற்றும் உயிர் சேதம் இல்லாமல் தவிர்க்கப்பட்டுள்ளது. முதல்வர் மேற்கொண்ட சீரிய முயற்சியால் நிவர், புரெவி புயலால் மழை நீர் தேங்கிய சேதத்தை தவிர, வேறு எந்த சேதமும் ஏற்படவில்லை.

பேரிடர் காலங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதில் தமிழக முதல்வர், இந்தியாவிற்கே முன்னுதாரணமாகத் திகழ்கிறார். மத்திய அரசிடமிருந்து ஆண்டுதோறும் வழங்கப்படும் பேரிடர் நிவாரண நிதியான ரூ.1,360 கோடியில், முன்னதாக கொரோனோ பேரிடர் நேரத்தில் ரூ.680 கோடி பெறப்பட்டுள்ளது. முதல்வரின் கோரிக்கைக்கு இணங்க மத்திய அரசு மீதமுள்ள ரூ.680 கோடியையும் மத்திய அரசு வழங்கியுள்ளது.


Advertisement

வடகிழக்கு பருவமழை நிறைவடையும் வரை வீடுகள், கால்நடை உள்ளிட்ட எந்த இழப்புகள் ஏற்பட்டாலும் உடனடியாக நிவாரணம் வழங்கப்படும். அதேபோல பயிர் சேதத்தை பொறுத்தவரை, நீர் முழுமையாக வடிந்த பின்னர் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

சமூக வலைதளத்தில் அடுத்தடுத்து 5 புயல்கள் வர உள்ளதாக பரவி வரும் புரளியை பொதுமக்கள் யாரும் நம்ப வேண்டாம்.
வேலையில்லாதவர்கள் சிலர் புயல் குறித்து தவறான தகவல்களை பரப்பி வருகிறார்கள். அதிகாரபூர்வமற்ற, ஆதாரமற்ற பீதியை ஏற்படுத்தும் செய்திகளை யாரும் நம்பவேண்டாம். வானிலை ஆய்வு மையம் மற்றும் மாவட்ட நிர்வாகம் அறிவிக்கும் தகவல்கள் மட்டுமே அதிகாரப்பூர்வமானவை. புரெவி புயல் பாம்பனில் முழுவதுமாக வலுவிழந்துவிட்டது.

image


வேளாண் சட்டங்கள் விவகாரத்தில் அப்பாவி விவசாயிகளை திசை திருப்பும் வகையில் தவறான பிரசாரத்தை எதிர்கட்சிகள் முன்னெடுத்துச் செல்கின்றன. மத்திய அரசு தற்போது வேளாண் சட்டத்தில் திருத்தம் செய்துள்ள விவசாயிகளுக்கு பலனளிக்கும் திட்டத்தினை கடந்த 2016 சட்டமன்ற தேர்தலில் திமுக வாக்குறுதியாக சொன்னதைக் கூட மறைத்து விட்டும் திமுக தற்போது வேளாண் திருத்தச் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

போராட்டத்தின்போது பச்சை துண்டு போடுபவர்கள் அனைவரும் விவசாயிகள் கிடையாது என்று முதல்வர் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் வாய்க்கு வந்தப்படி பேசி வருகிறார். எதிர்க்கட்சித் தலைவர் தனது மகனை எடுத்தவுடன் தலைமை பொறுப்பில் கொண்டு வந்துள்ளது வாரிசு அரசியல் என்பதைக் காட்டுகிறது. உதயநிதி காருக்குள் அமர்ந்து செல்கிறார். கட்சிக்காக உழைத்த கே.என்.நேரு காரில் தொங்கியபடி செல்கிறார். தனக்கு பின்னர் தனது மகனை அரசியல் வாரிசாக நிறுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். கட்சிக்கும், கட்சியின் சொத்துக்கும் தனது மகன் உதயநிதியை உரிமையாளராக்கும் முயற்சியை மறைப்பதற்காகவே முதல்வர் குறித்து வாய்க்கு வந்தப்படி மு.க.ஸ்டாலின் பேசி வருகிறார்.

ஜெயலலிதா மீது தொடுத்த அனைத்து வழக்குகளும் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக தொடுக்கப்பட்டது. ஆனால், திமுக மீது தொடுக்கப்பட்ட வழக்குகள் அனைத்தும் திமுக அங்கம் வகித்த காங்கிரஸ் தொடுத்த வழக்குகள். 2ஜி ஊழலில் ஆ.ராஜா நிரபராதி என உச்ச நீதிமன்றம் அவரை விடுக்கவில்லை. ஆதாரங்களை நிரூபிக்க தவறியதாகவே உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 2ஜி வழக்கு விசாரணை இன்னும் முடியவில்லை. 2ஜி வழக்கு விசாரணையில் உள்ள ஆ.ராஜாவிற்கு முதல்வரை விவாதத்திற்கு அழைக்க எந்த தார்மிக உரிமையும் கிடையாது. ஜெயலலிதா குறித்து இனிமேல் அவதூறாக யார் பேசினாலும், எந்த நிலைக்கும் செல்ல எங்களுக்கு தெரியும். உச்ச நீதிமன்றத்தில் 2ஜி வழக்கு நிலுவையில் உள்ளதை ஆ.ராசா நினைவில் கொள்ளவேண்டும்.

 2ஜி வழக்கு நிலுவையில் உள்ளபோது எப்படி பொதுவெளியில் விவாதிக்க முடியும்? வாய்த் துடுக்காக ஆ.ராசா பேசினால் அதிமுகவினர் பதில் பேசுவதற்கு ரெம்ப நேரமாகாது. நீண்ட நாட்களாக பொதுவாழ்வில் இருந்து வரும் ஆ.ராசா பொது வெளியில் மிக கவனமாக பேச வேண்டும். ஆ.ராசா பேச்சை அதிமுகவினரும், மக்களும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஆ.ராசாவின் பேச்சுக்கு சட்டமன்றத் தேர்தலில் மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள்" என்றார் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்.


Advertisement

Advertisement
[X] Close