"தமிழகத்தில் 'பாரத் பந்த்' தோல்வி!" - எல்.முருகன் கருத்து

"தமிழகத்தில் 'பாரத் பந்த்' தோல்வி!" - எல்.முருகன் கருத்து
"தமிழகத்தில் 'பாரத் பந்த்' தோல்வி!" - எல்.முருகன் கருத்து

தமிழகத்தில் 'பாரத் பந்த்' தோல்வியடைந்துள்ளது என்று பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தலைவர் எல்.முருகன் கருத்து தெரிவித்துள்ளார். 


மதுரையில் பாரதிய ஜனதா கட்சியின் தமிழகத் தலைவர் எல்.முருகன் இன்று செய்தியாளர்களிடம் கூறும்போது, "தமிழக பாரதிய ஜனதா கட்சி சார்பில் 'மோடி விவசாயிகளின் நண்பன்' என்ற இயக்கம் இன்று முதல் துவங்கப்பட உள்ளது. இந்தத் திட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியினர் கிராமம் கிராமாக சென்று விவசாயிகளை சந்தித்து மத்திய அரசின் வேளாண் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தப்பட உள்ளது.

புதிய வேளாண் திருத்தச் சட்டத்தை தமிழக விவசாயிகள் வரவேற்றுள்ளனர். தமிழகத்தில் ஒரு சிலரை தவிர்த்து அனைவரும் வேளாண் சட்ட திருத்த மசோதாவை ஏற்றுக் கொண்டுள்ளார். வேளாண் சட்ட திருத்த மசோதாவில் விவசாயிகளே விலை நிர்ணயம் செய்து நேரடியாக விற்பனை செய்ய முடியும். தற்போதைய வேளாண் சட்டத்தின்படி விவசாயிகள் நேரடியாக ஏற்றுமதி செய்யும் வாய்ப்புகள் உள்ளது.


2010ம் ஆண்டு தற்போதைய வேளாண் சட்ட திருத்த மசோதாவில் உள்ள திட்டத்தை அப்போதைய மத்திய வேளாண்துறை அமைச்சர் சரத்பவார் மற்றும் காங்கிரஸ், திமுக ஆகிய கட்சிகள் ஆதரவு அளித்தார்கள். ஆனால் தற்பொழுது திமுக, காங்கிரஸ் போலி வேஷமிட்டு வேளாண் சட்ட திருத்த மசோதாவை எதிர்த்து வருகிறது.

2014ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திமுகவின் தேர்தல் அறிக்கையில் தெரிவித்த திட்டத்தை தற்பொழுது பாரதிய ஜனதா அரசு வேளாண் சட்ட திருத்த மசோதவில் வழங்கியுள்ளது. தற்பொழுது திமுக இரட்டை வேடமிட்டுள்ளது மக்கள் மத்தியில் வெட்ட வெளிச்சமாகியுள்ளது.

 இடைத்தரகர்கள் இல்லாமல் விவசாயிகள் பயன்பெறும் வகையில் விவசாய சீர்திருத்த சட்டங்கள் பலனளிக்கும். விவசாயிகள் உற்பத்தி செய்யும் விளை பொருட்களை சேமித்து வைத்து நல்ல விலைக்கு விற்பனை செய்ய வாய்ப்புள்ளது. மேலும் சர்வதேச அளவில் வேளாண் பொருட்களை ஏற்றுமதி செய்ய இந்த வேளாண் சட்ட திருத்த மசோதா பயனுள்ளதாக இருக்கும்.


அதேபோல தமிழகத்தில் பாரத் பந்த் தோல்வியடைந்துள்ளது. தமிழகத்தில் பல இடங்களில் திமுகவினர், வணிகர்களை மிரட்டி கடைகளை மூட வலியுறுத்தியுள்ளனர். வேளாண் சட்ட திருத்த மசோதவினால் பாரதிய ஜனதா கட்சிக்கு பெயர் கிடைத்துவிடக் கூடாது என்பதற்காக எதிர்க்கட்சிகள் விவசாயிகளை திசை திருப்பி எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

ரஜினி ஜனநாயக முறைப்படி கட்சி துவங்க உள்ளார். ரஜினி தனது சொந்த விருப்பப்படி கட்சி துவங்க உள்ள நிலையில், அவர் பாரதிய ஜனதா கட்சியின் பி டீம் என எப்படி சொல்ல முடியும்?” என கேள்வி எழுப்பியவரிடம், ரஜினியுடன் கூட்டணி அமைக்கப்படுமா என்று கேட்டதற்கு, "கூட்டணி முடிவை கட்சியின் அகில இந்திய தலைமை முடிவு செய்யும்" என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், ”வேல் யாத்திரை துவங்கிய நோக்கம் நிறைவேறியுள்ளது. மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. பாரதிய ஜனதா கட்சி எங்கு உள்ளது என கேட்கும் இடங்களான கடலூர் கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் கூட வேல் யாத்திரையில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர்” என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com