[X] Close

எதிர்மறை உலகின் பயணம்! - அந்தகாரம்' தவிர்க்கக் கூடாத படைப்பு. ஏன்? - ஒரு விரிவான அலசல்

சினிமா,சிறப்புக் களம்

Andhaghaaram-movie-review

சில நேரங்களில் நாம் காணும் கனவுகளில் நம்மை பீதியடையச் செய்யும்; ஒரு பயங்கரமான மனநிலைக்கு இட்டுச் செல்லும் காட்சிகள், சம்பவங்கள் வந்திருக்கும். தூக்கம் கலைந்த பின்னரும் அந்த பயங்கரமான கனவின் காட்சிகளில் இருந்து விடுபடமுடியாமல் அன்றைய பொழுதே இறுக்கமாகச் செல்லும். அப்படி ஒரு மூன்று மணி நேர காட்சிகளின் தொகுப்பில் இருந்து நம்மை விடுபட முடியாமல் மீண்டும் மீண்டும் அந்தக் காட்சிகளை நினைவூட்டி திகிலூட்டக்கூடிய படம்தான் 'அந்தகாரம்'. (படம் பார்க்காதவர்கள் கவனத்துக்கு: இந்தக் கட்டுரையில் ஸ்பாய்லர்கள் உள்ளன.)


Advertisement

இந்தப் படத்தில் வினோத் கதாபாத்திரம் சிக்கிக்கொண்டுள்ள அந்த இருள் சூழ் உலகத்தில் நிச்சயம் நாமும் சில நிமிடங்கள் அடைப்பட்டிருப்போம். எப்படியாவது வினோத் அந்த இருளில் இருந்து விடுபட்டு வெளிச்சத்திற்கு வரவேண்டும் என்றே நாமும் உள்ளூர நினைத்திருப்போம். அதனால், க்ளைமேக்ஸில் அவன் வெளிச்சத்தை உணரும் தருணம் நம்மையும் ஒருவிதமான விடுதலை உணர்வுக்கு கொண்டு சென்றுவிடுகின்றது. 'அந்தகாரம்' என்றால் மன இருள் என்று அர்த்தம். மன இருளில் சிக்கிக்கொள்ளும் மனிதர்கள் எப்படி அதிலிருந்து போராடி விடுபடுகிறார்கள் அல்லது அந்த இருளுக்கு இரையாகி மனிதத் தன்மையை இழந்து சமூகத்திற்கே விரோதமாகப் போகிறார்கள் என்பதே படத்தின் ஒன்லைன்.

image


Advertisement

மூன்று கதாபாத்திரங்கள்... சில முடிச்சுகள்:

பார்வைச் சவால் மாற்றுத்திறனாளியான செல்வம், நூலகத்தில் பணியாற்றி வருகிறார். மாற்றுத் திறனாளிகளுக்கான படிப்பையும் படித்து தேர்வுகளை எழுதி எழுதி தோற்றுப்போகிறார். தன் தந்தை விட்டுச் சென்ற வீட்டை யாருக்கும் விற்று விடாமல் தற்காத்துக்கொள்ள வேண்டும் என்பதே அவரது ஆசை. அவருக்கு சிறுநீரகத்தில் ஏற்பட்ட பிரச்னையை சரிசெய்ய 80 ஆயிரம் ரூபாய் ஆகும் என்கிறார்கள். யார், யாரிடமோ கேட்டும் பணம் கிடைக்காததால், தன் தந்தை செய்து வந்த மாந்திரீக தொழிலை, அதாவது ஆவிகளை பிடிக்கும் வேலையை செய்வதாக ஒப்புக்கொள்கிறார். ஆவிகளைப் பிடித்தபோதும், அவரது கதை எதிர்பாராத விதமாக சோகத்தில் முடிந்து விடுகிறது.

கிரிக்கெட் வாழ்க்கையில் தான் நினைத்ததுபோல் ஆக முடியாமல், சிறுவயது மாணவர்களுக்கு கோச்சிங் கொடுத்து வருகிறார் இளைஞரான வினோத். அவரது அறையில் உள்ள டெலிபோனுக்கு மர்மமான ஒருவர் போன் செய்து அவரை மிரட்டி வருகிறார். அவரது அறையிலும் அமானுஷ்யமான முறையில் ஏதேதோ நடப்பதைக் கண்டு பயத்தின் உச்சிக்கே செல்கிறார். தன்னை அச்சுறுத்துவது யார்? தன்னுடைய அறையில் என்ன நடக்கிறது என்பதை கண்டுபிடிக்க முயற்சிக்கிறார்.


Advertisement

image

படத்தில் மிரட்டலான நபராக வருபவர் டாக்டர் இந்திரன். மிகவும் பிரபலமான மூத்த உளவியல் மருத்துவர். தன்னுடைய ஃபேஷன்ட் ஒருவராலே சுடப்பட்டு பின்பு நல்வாய்ப்பாக உயிர்பிழைத்துவிடுகிறார். ஆனால், அவர் குரல் போய்விடுகிறது. 8 மாத கோமா நிலைக்குப் பிறகு கண்விழித்த போதுதான் தன்னுடைய மனைவி குழந்தையை அந்த ஃபேஷன்ட் சுட்டுக் கொன்றுவிட்டார் என்ற தகவல் அவருக்கு கிடைக்கிறது. அவருடைய ஃபேஷன்டாலேயே அவர் சுடப்பட்டதாலும், அவருக்கு ஏற்பட்ட கடுமையான பாதிப்பாலும் அவர் மீண்டும் தன்னுடைய டாக்டர் பயிற்சியை தொடர முடியாமல் போய்விடுகிறது. இருப்பினும் யாருக்கும் தெரியாமல் தன்னிடம் ஏற்கெனவே சிகிச்சை பெற்று வந்த மற்ற நபர்களை அவர்களின் வீட்டிற்கே சென்று பார்க்கிறார்.

இந்த மூன்று பேரில் யாருக்கு யாருடன் எப்படி தொடர்பு ஏற்படுகிறது, யாரால் யாருக்கு என்ன நேர்கிறது என்பதுதான் கதை. கதைக்கு இடையில் போடப்படும் முடிச்சுகள் அவிழ, இறுதிக் காட்சி வரை கண்டிப்பாக காத்திருக்க வேண்டும்.

நான்லீனியரும் நேர்த்தியும்:

இது மிகவும் நுணுக்கமாக அதேசமயம் டெப்த் ஆன வசனங்கள் கொண்ட நான்லீனியர் படம் . நான்லீனியர் என்பதற்கு எடுத்துக்காட்டாக வெற்றிமாறனின் வடசென்னை படத்தை எடுத்துக் கொள்ளலாம். ராஜன், அன்பு என்ற இரண்டு கதாப்பாத்திரத்தை மையமாகக் கொண்டு எம்.ஜி.ஆர் மரணம், ராஜிவ்காந்தி படுகொலை என மூன்று கால இடைவெளியில் நடைபெறும் கதையை முன், பின்னாக மாற்றி திரைக்கதை அமைத்திருப்பார்கள். அதேபோல், இந்தப் படத்திலும் மூன்று உளவியல் மருத்துவர் இந்திரன், கிரிக்கெட் கோச் வினோத், நூலகத்தில் பணிபுரியும் பார்வைச் சவால் மாற்றுத்திறனாளி செல்வம் ஆகிய மூன்று பேருடைய வாழ்க்கையை மையமாகக் கொண்டே கதை அமைக்கப்பட்டிருக்கும். இந்த மூன்று பேரின் கதையும் படத்தில் மாற்றி மாற்றி வரும்.

image

ஒரு 10 நிமிடம்கூட தொடர்ந்தால்போல் ஒருவரது கதை வராது. சில இடங்களில் ஃப்ரேம்க்கு, ஃப்ரேமுக்கு ஒவ்வொருத்துருடைய கதை மாறிமாறி வரும். படம் தொடங்கி முதல் ஒரு மணி நேரம் என்ன நடக்கிறது என்றே நமக்குப் பிடிபடாது. எந்தக் கதை எந்த டைம்லைனில் நடக்கிறது என்பது யூகிக்கவே சிரமமாக இருக்கும். மூன்று மணிநேர படத்தின் கடைசி 20 நிமிடங்கள் வரை என்ன கதை என்று யூகிக்க முடியாமல் சஸ்பென்ஸ் ஆகவே செல்லும். க்ளைமாக்ஸில் முடிச்சுகள் அவிழ்க்கப்படும்போதுதான் ஒவ்வொரு காட்சியும் மற்றொரு காட்சிக்கு தொடர்புடையதாக காரணத்தோடு வைக்கப்பட்டிருக்கும் என்பது நமக்கு தெரியவரும். திரைக்கதை அவ்வளவு நேர்த்தியாக இருக்கும். எந்தவொரு காட்சியும் தேவையில்லாமல் இருக்காது.

கதாபாத்திரங்களும் டீடெய்லிங்கும்:

பார்வைச் சவால் மாற்றுத் திறனாளி, கிரிக்கெட்டர், உளவியல் மருத்துவர் ஆகிய மூன்று கதாபாத்திரங்களையும் உயிரோட்டமாக படைப்பதற்காக இயக்குநர் அவ்வளவு மெனக்கெட்டு இருக்கிறார் என்பது ஒவ்வொரு காட்சியிலும் தெரியும். செல்வத்துடைய ஒவ்வொரு அசைவும் உண்மையான அசல் தன்மையை அப்படியே பிரதிபலிக்கும். அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளில் எல்லாம் மாற்றுத்திறனாளிக்கான அம்சங்கள் டீடெய்லிங்காக இருக்கும்.

image

உதாரணத்துக்கு, நூலகத்தில் அவர் பணியாற்றி வருவார். புத்தகங்களை எடுத்துக் கொடுப்பது, அடுக்கிவைப்பது ஆகிய பணிகளை செய்வார். வழக்கமான புத்தக ரேக்குகளின் முன்பகுதியில் வரிசை எண் எழுதப்பட்டிருக்கும். அதனை பார்த்துதான் புத்தகங்களை சரியான இடத்தில் வைப்பார்கள். செல்வத்துக்கு பார்வை இல்லை என்பதால் அவர்களுக்கு ஏற்றார்போல் தொட்டு உணர்வதுபோன்று ரேக்குகளில் எழுதி இருப்பார்கள். இறந்தவர்களின் ஆவிகளுடன் பேசி, அவர்கள் சொன்ன வேலையை செய்து முடித்தபின்னர் ஒரு டேப் ரெக்கார்டரில் பதிவு செய்து அதற்கான கேசட்டில் பேசிய ஆவிகளின் விவரம், வரிசை எண்ணை பார்வை குறைபாடு உடையவர்களுக்கான மொழியில் எழுதிவைப்பார்.

image

இப்படி எந்த இடத்திலும் பிசகாமல் இருக்கும். வசனத்திலும் அதன் தன்மை இருக்கும், 'பாத்துப்பா காத்து கருப்புலாம் இருக்கும்' என்று புரோக்கர் சொல்ல, அதற்கு நான் பார்க்காத கருப்பா என்று அசால்டாக சொல்வார். அதேபோல் இறுதிக்காட்சியில் வெளிச்சம் இல்லாததுதான் இருட்டு, ஒரு துளி வெளிச்சம் இல்லாம என்னோட வாழ்க்கைய வாழ்ந்துட்டேன்' என்பார்.

வினோத் கோச்சிங் கொடுக்கும் இரண்டு காட்சிகளே போதும், புரஃபஷனல் கிரிக்கெட்டர் என்பதற்கான தன்மை அதிலேயே இருக்கும். அவரது அறையில் பந்துகளும், பேட்களும் இருக்கும். கடைசியில் டெலிபோனை உடைக்கும் போதும், தன்னுடைய அறைக்கு வெளியே வந்திருக்கிறார்கள் என நினைத்து தாக்கச் செல்லும்போதும் பேட்டையே பயன்படுத்துவார். காலையில் எழுந்தவுடன் எக்ஸர்சைஸ் செய்வார். டிவியில் கிரிக்கெட் மேட்ச் பார்ப்பார். நூலகத்தில் புத்தகம் எடுக்கச் செல்லும் காட்சியில் கிரிக்கெட் கிட் பேக் உடன்தான் செல்வார். வசனங்களிலும் அவர் கிரிக்கெட்டர் என்பது அவ்வளவு அழுத்தமாக இருக்கும்.

கடைசியில் எல்லா பிரச்னைக்கும் காரணமான அந்த போனை தன்னுடைய பேட்டால் அடிக்கும்போது, 'ஒரே புல் ஷாட்ல அடிச்சிட்ட பாத்தியா, இதுதான் என்னுடைய ஃபேவரட் ஷாட்' என்று ஆக்ரோஷமாகச் சொல்வார். கிரிக்கெட் வாழ்க்கையின் தோல்வியும், தன்னுடைய நண்பன் பிரதீப்பின் நிலைக்கு தானே காரணம் என்ற மன வேதனையும் அவரது முகத்தில் அப்படியே இயல்பாக தெரியும். அவர் தாடி வளர்த்ததுகூட சோகத்தில்தான். ஏனென்றால் புத்தகத்தை நூலகத்தில் இருந்து எடுக்கும்போது தாடி இல்லாமல் ட்ரிம் செய்த முகத்துடன்தான் இருப்பார். அவனுடைய காதலியின் அண்ணன்கூட இந்த மாற்றத்தை குறிப்பிட்டு என்ன தாடிலாம் வளர்த்துட்டிங்கனு கேட்பார்.

image

உளவியல் மருத்துவர் இந்திரனை பொறுத்தவரை அவரது உடல்மொழியே மிரட்டலாக இருக்கும். குரல் பறிபோன பின்பு அவருக்கு செயற்கையாக வைக்கப்படும் குரலும் வேற லெவலில் மிரட்டலாக இருக்கும். உளவியல் மருத்துவர்களின் வாழ்வியலை நமக்கு மிக நெருக்கமாக காட்டியிருப்பார்கள். செஷன், எவால்யூவேஷன் போன்ற வார்த்தைகள் அந்தத் துறைக்கு உரியவை. டாக்டர் இந்திரனுக்கும் அவரை எவால்யூவேஷன் செய்யும் ஜூனியர் டாக்டருக்கும் இடையிலான ஒரே ஒரு காட்சி போதும், இது சைக்கலாஜிக்கல் த்ரில்லர் வகை படம் என்றும் சொல்வதற்கு. இந்த அளவிற்கு ஆழமான காட்சி மட்டுமின்றி, படத்தில் மாஸான காட்சியும்கூட.

தமிழ் சினிமாவில் ஒரு முக்கியப் படைப்பு:

'அந்தகாரம்' காலம் கடந்தும் காட்சி மொழிக்காக பேசும் படமாக இருக்கும். சினிமா என்னும் விஷூவல் மீடியமில் ஒளி - ஒலி இரண்டும் மிக முக்கியம். ஒளிப்பதிவு, இசை, எடிட்டிங், திரைக்கதை என அத்துனை சினிமா துறையிலும் மிக நேர்த்தியாக செதுக்கிய படமாக இருக்கிறது 'அந்தகாரம்'. அதாவது படம் தொடங்கியது முதல் இறுதியில் எண்டு கார்டு போடும் வரை நாம் ஒரு குறிப்பிட்ட அந்தக் கதைக்கான மூடில் வைத்திருக்க, எல்லா துறைகளைச் சேர்ந்த தொழில்நுட்பக் கலைஞர்களும் கச்சிதமாக பங்காற்றியுள்ளனர். சில இடங்களில் இசை மெல்லிய உணர்வுகளை கடத்தும், சில இடங்களில் திக்கென்ற நிலைக்கு, அதாவது ஒரு சூப்பர் நேச்சுரல் படத்திற்கான தன்மையை உணர வைக்கும். இசையமைப்பாளர் பிரதீப் உண்மையில் நிறைவான பங்களிப்பை செலுத்தி இருக்கிறார்.

image

படத்தின் முதல் காட்சியில் இருந்து இறுதிவரை எந்தவொரு காட்சியை நாம் தவறவிட்டாலும் கதையை புரிந்துக்கொள்வது சிரமம் ஆகிவிடும். காட்சி என்பதை காட்டிலும் ஒரு ஃப்ரேம்-ஐ கூட மிஸ் பண்ணக் கூடாது என்று சொல்லலாம். அந்த அளவிற்கு திரைக்கதையில் விளையாடி இருக்கிறார். வினோத்தின் நண்பர் ஏன் இடது கையால் அடிக்கடி கிறுக்குகிறார் என்றால், அவருடைய உடலில் டாக்டர் இந்திரனை சுட்டுவிட்டு, பின் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்ட நபரின் ஆவி இருக்கிறது. தொடக்கத்தில் இருந்து கவனித்தால் டாக்டர் இந்திரனை அந்த நபர் இடது கையால்தான் சுடுவார். பின்னர் அவரும் இடது கையால் சுட்டுக்கொள்வார். பிரதீப் உடலில் அந்த நபரின் ஆவி இருக்கிறது என்பதே க்ளைமாக்ஸில்தான் தெரியவரும்.

அதேபோல், டாக்டர் எப்படி இறந்தார் என்ற காட்சி வரும்போது, அவரது செல்போனில் உற்றுப் பார்த்தால் தெரியும். அந்த செல்போனில் ஸ்க்ரீனில் மேலே இருந்து ஒருவர் கீழே குதிப்பது போன்று தெரியும். இது சில நொடிகளே வந்துபோகும் காட்சி. அதேபோல், செல்வம் தியேட்டரில் வைத்து கொலை செய்யப்பட்ட நிலையில், அவனை யார் என்றே தெரியாது என்று அவங்க மாமா போலீசில் கூறுவார். ஆனால், அதற்கு முன்பாக இருவருக்கும் இடையே உருக்கமான, பாசமான காட்சிகள் வைக்கப்பட்டிருக்கும். அப்படி இருக்கையில், ஏன் செல்வத்தை அவர் தெரியாது என்றார் என்பது பலருக்கும் கேள்வியாக இருந்திருக்கும். ஆனால், அதற்கு முந்தைய ஒரு காட்சியில், 'உங்க அப்பாவும் இப்படிதான் மாந்தரீகம்னு போயிக்கிட்டு இருந்தார். அதனாலேயே அவரும் இறந்து போயிட்டார். அப்புறம், யாருக்கும் தெரியாம தலைமறைவா இந்த தியேட்டரில் டிக்கெட் கொடுத்துக்கிட்டு இருக்கே'னு செல்வத்திடம் கூறியிருப்பார். எல்லா காட்சிகளை தொகுத்துப் பார்க்கும் போதுதான் நமக்கு புரியும்.

image

நெகிழ்ச்சியான காட்சிகள்:

என்னதான் சூப்பர் நேச்சுரல் - ஹாரர் படம் என்றாலும், நிறையவே எமோஷனல் காட்சிகள் படம் முழுவதும் பரவிக் கிடக்கிறது. செல்வம் வரும் காட்சிகள்தான் பெரும்பாலும் அழகுணர்ச்சியுடன் மென்மையான தன்மையில் கட்டமைக்கப்பட்டிருக்கும். செல்வத்திற்கும் அவருக்கு டீச்சராக வரும் பூஜாவுக்கும் இடையிலான காட்சிகள் பெரும்பாலும் நெகிழ்ச்சியானவைதான். தேர்வின்போது செல்வத்திற்கு சொல்லிக் கொடுத்த டீச்சரான பூஜாவே அவருக்காக எழுதுபவராக வருவார். அப்போது விடைதெரியாமல் செல்வம் தவிக்கும்போது தானே விடையை எழுதிவிடுகிறேன் நீ சொல்வது போல் நடித்தால் போதும் என்று பூஜா சொல்வார். அதற்கு வேண்டாம் என்று மறுத்துவிடுவார் செல்வம்.

தேர்வு முடிந்து இருவரும் பேசிகொள்ளும்போது, தோல்வி ரொம்ப சாதாரணமானதுதான், அதனை ஏற்றுக் கொள்ளாமல் தவறு செய்யும்போது அந்தக் குற்ற உணர்ச்சி நம்மை பின்தொடரும் என்று அவர் சொல்லும் தருணம் நெகிழ்ச்சியாக இருக்கும். செல்வத்தின் நேர்மையான பேச்சால் நெகிழ்ச்சி அடைந்த பூஜா இறந்துபோன தனது தந்தை குறித்து பேசுவதும் உருக்கமாக இருக்கும். அதேபோல், இறுதிக்காட்சியில் பூஜாவின் தந்தையுடைய ஆவியுடன் செல்வம் பேசியிருந்த கேசட்டை அவர் கேட்கும் காட்சிகளும் உருக்கமாக இருக்கும். அதேபோல், செல்வத்திற்கும் அவரது மாமாவாக வரும் அவரது தந்தையின் நண்பருக்கும் இடையிலான காட்சிகளும் நெகிழ்ச்சியாக இருக்கும். தன்னுடைய நண்பன் பிரதீப் இறந்த செய்தியை கேட்டதும் வினோத் கண்ணீர் விடும் காட்சி நம்மையும் கலங்க வைக்கும்.

image

விமர்சனங்கள் குறித்த ஒரு புரிதல்:

படம் வெளியானதில் இருந்து இரண்டு விதமான விமர்சனங்கள் முக்கியமாக வைக்கப்படுகிறது. ஒன்று படத்தின் நீளமாகவும் (இந்தக் கட்டுரையைப் போலவே), அதேபோல் ரொம்ப மெதுவாகவும் இருக்கிறது. மற்றொன்று, திரைக்கதை இடியாப்பச் சிக்கல்போல் இருக்கிறது என்று. படத்தின் நீளம் என்பது எப்போதுமே ஒரு சிக்கல் கிடையாது. 'புதுப்பேட்டை', 'ஆயிரத்தில் ஒருவன்', 'ஹேராம்' போன்ற படங்கள் சுமார் 3 மணி நேரம் ஓடக்கூடியதுதான். அந்தப் படங்களில் ஒவ்வொரு காட்சியையும் செதுக்கி எடுத்திருப்பார்கள். அந்தப் படங்களை இன்று கொண்டாடுகிறார்கள். ஒரு படத்திற்கு எவ்வளவு நேரம் வேண்டும் என்பதே, திரைக்கதையும் அதனை சொல்வதற்கான விஷூவல் மொழியும்தான். செல்வம் கதாபாத்திரம் லிஃப்டில் ஆறாவது மாடிக்கு செல்லும் காட்சியில் உண்மையில் ஆறாவது மாடிக்கு பழைய டைப் லிஃப்டில் செல்ல எவ்வளவு நேரம் ஆகுமோ அவ்வளவு நேரத்தை படத்திலும் எடுத்துக் கொண்டிருப்பார்கள். ஆனாலும் அதற்கு இடையில் சில ஷாட்களை வைத்திருப்பார்கள்.

திரைக்கதையில் இருக்கும் நான்லீனியர் காட்சிகள் பலருக்கும் புரியவில்லை என்று கூறுகிறார்கள். எல்லா படமும் ஒரே மாதிரி எடுக்க வேண்டும் என்ற அவசியமில்லை. எந்தவொரு காட்சியும் அர்த்தமில்லாமல் வைக்கப்படவில்லை. அவ்வளவு சிரமப்பட்டு காட்சிகளை இணைத்து இணைத்து நாம் புரிந்துகொள்ள வேண்டுமா? என்று கேட்டால், இப்படியும் ஒரு படம் இருக்கட்டுமே என்றுதான் சொல்ல வேண்டும். எல்லா படங்களும் எல்லா ஆடியன்ஸை குறிவைத்து எடுக்கப்படுவதில்லை. இது வழக்கமான தமிழ் சினிமா படம் இல்லை. முகம் சுளிக்கவைக்கும் ஒரு காட்சிக்கூட படத்தில் இல்லை. காதலியுடன் வினோத் இருக்கும் காட்சிகளும் கதையை நகர்த்தவே இடம்பெற்றிருக்கும். செல்வம் - டீச்சர் இடையே இருக்கும் உறவும் எதுவென்று கணிக்க முடியாத அளவிற்கு இருக்கும்.

image

படத்தில் இருக்கும் மிகப்பெரிய சிக்கலே, முடிச்சுகள் அவிழ்க்கப்பட்டு இறுதி காரணங்கள் விளக்கப்படும்போது அது அவ்வளவும் திருப்திகரமாக இல்லை என்பதுதான். அந்த இடத்தை மட்டும் இயக்குநர் கொஞ்சம் கவனம் செலுத்தி, நாம் திகைக்கும் அளவிற்கு ஒன்றினை க்ளைமாக்ஸில் கொடுத்திருக்க வேண்டும். ஏற்கெனவே 'ஈரம்' படத்தையும், 'விருமாண்டி', 'வடசென்னை' போன்ற படங்களை நன்றாக புரிந்துகொண்டு பார்த்தவர்களுக்கு இந்தப் படத்தை பார்ப்பதற்கு பெரிய சிக்கல் இருக்காது. என்ன, இரண்டாவது முறை நிச்சயம் பார்க்கவைக்கும். இந்தப் படம் திரையரங்கில் வரும்போதும் அதன் தொடர்ச்சியாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் போதும்தான் அதன் தாக்கம் நமக்கு தெரியும்.

இவ்வளவு எதிர்மறை ஏன்?

வாழ்க்கையில் நாம் சந்திக்கும் சில எதிர்பாராத நிகழ்வுகள், தோல்விகள், இழப்புகள், நெருக்கடிகள் நம்மை மனரீதியாக பாதிக்கின்றன. அவை நம்ம மிகுந்த மன அழுத்தத்திற்கு இட்டுச் செல்கிறது. பெரும்பாலும் எல்லோரும் அந்த மன அழுத்தத்தில் இருந்து சில காலங்களில் மீண்டு வந்துவிடுவார்கள். ஆனால், சிலரோ அதிலிருந்து மீண்டு வரமுடியாமல் ஆழ்மன சிக்கலில் மாட்டிக்கொள்கிறார்கள். அப்போது, அவர்கள் நடவடிக்கைகள் இயல்புக்கு மீறியதாக இருக்கும். அந்த இயல்புக்கு மீறிய தன்மை ஓர் உச்சத்தை அடையும்போது அவர்கள் அப்-நார்மல் கண்டிஷனுக்கு சென்றுவிடுகிறார்கள். அப்படி அப்-நார்மல் நிலைக்கு சென்றவர்களுக்கு சிகிச்சை அளிப்பவர்கள்தான் உளவியல் மருத்துவர்கள்.

அப்படியான ஓர் உளவியல் மருத்துவரான இந்திரனுக்கும் அவர் சிகிச்சை அளித்து வந்த நபர்களுக்கும் இடையே நடைபெறும் கதைதான் 'அந்தகாரம்'. மனநலம் பாதிக்கப்பட்ட பலரை மீட்டு அவர்களை இருள் சூழ் உலகில் இருந்து வெளிச்சத்திற்கு அதாவது இயல்பு வாழ்க்கைக்கு கொண்டு வந்த மிகப் பிரபலமான ஒரு மருத்துவர் கதாபாத்திரம்தான் டாக்டர் இந்திரன். ஆனால், தான் பார்த்த அந்த பணியாலேயே அவர் ஓர் இருள் சூழ் உலகிற்குள் சிக்கிக் கொள்வதுதான் வாழ்வின் விநோதம்.

image

6 வருட காத்திருப்புக்கு கிடைத்த வெற்றி:

இந்தப் படத்தைப் பொறுத்தவரை படம் உருவான பின்னணி குறித்து நாம் அறிந்துகொள்ள வேண்டும். ஏனென்றால், எத்தனை மெனக்கெடலுக்குப் பிறகு, எவ்வளவு காத்திருப்புகளுக்கு பிறகு இந்தப் படம் வெளியாகி இருக்கிறது என்பது மிக முக்கிய ஒன்று. 2014-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தப் படம் கடந்த நவம்பர் 24 ஆம் தேதிதான் ரிலீஸ் ஆகியிருக்கிறது. கிட்டதட்ட 6 ஆண்டுகளுக்கு மேல் ஆகியிருக்கிறது. படம் எடுத்து முடித்த பிறகும் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் வெளியிட முடியாமல் தவித்திருக்கிறார்கள். படத்தின் முன்னணி கதாபாத்திரங்களாக அர்ஜூன் தாஸ், வினோத் கிஷன், பூஜா ராமசந்திரன், மீஷா கோஷல் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

image

இந்தப் படம் இன்று இரண்டு முக்கியமான காரணங்களுக்காக எல்லோரது கவனிப்புக்கும் வந்தது. ஒன்று இயக்குநர் அட்லி தயாரிப்பில் உருவான படம். மற்றொன்று 'கைதி' படத்தில் நம்மையெல்லாம் நெகட்டிவ் ரோலில் மிரட்டிய அர்ஜூன் தாஸ் நடித்த படம். இந்தப் படத்தின் அர்ஜூன் தாஸுக்காக பார்த்தவர் நிச்சயம் பலர் இருப்பார்கள். ஆனால், இந்தப் படம் தொடங்கும்போது அர்ஜூன் தாஸ் எந்தப் படத்திலும் நடித்திருக்கவில்லை. சில ஷார்ட் பிலிம்ஸ் தவிர. அதேபோல், 'நந்தா' படத்தில் சூர்யாவின் சிறிய வயது கதாபாத்திரத்தில் நடித்து அவரது கண்களால் மிரட்டி இருந்த வினோத் கிஷன் பின்னர் 'நான் மகான் அல்ல' படத்தில் தன்னுடைய வில்லத்தனமான கேரக்டரில் நம்மை கதிகலங்க வைத்திருப்பார். 'நான் மகான் அல்ல' படத்தில் நடித்த பிறகு பல பெண்களும் தன்னை பார்த்து பயந்ததாக வினோத் கிஷனே தன்னுடைய பேட்டிகளில் சொல்லியிருக்கிறார். அந்த அளவிற்கு நெகட்டிவான ரோல்.

பூஜா ராமசந்திரன் எஸ்.எஸ்.மியூசிக் சேனலில் ஆங்கராக இருந்தவர். இக்கால இளைஞர்களுக்கு அவரை தெரிய வாய்ப்பில்லை. பெரிய அளவில் படங்களில் நடித்தவர் அல்ல. அதேபோல், 'ராஜா ராணி' படத்தில் நயன்தாராவிற்கு ஃபிரண்டாக நடித்தவர் மீஷா கோஷல். இவரும் பெரிய அளவில் திரையில் தோன்றியவர் இல்லை. இப்படி பெரிய அளவில் அறிமுகம் இல்லாத ஒரு பட்டாளத்தை திரட்டி களத்தில் இறங்கியிருக்கிறார் இயக்குநர் விக்னராஜன். ஆனால், அவர் கைகளில் இருந்தது வெல் பிளாண்ட் ஸ்க்ரிப்ட். உண்மையில் விக்னராஜனை இதற்காகவே நாம் பாராட்டி ஆகவேண்டும்.

படம் சொல்லும் வாழ்க்கைக்கான கருத்துகள்:

> வாழ்க்கையில் நமக்கென்று ஒரு நோக்கம் இருக்க வேண்டும். அப்படியில்லை என்றால் நம்மை தேவையில்லாத விஷயங்கள் ஆட்கொண்டு விடும்.

> நம்முடைய பலவீனங்களை பயன்படுத்தியே பிறர் நம்மை ஆட்கொண்டு அவர்கள் நினைத்ததை முடித்துவிடுகிறார்கள்

> நம்மை அச்சுறுத்தும் விஷயங்களில் இருந்து போராடும் போதும் வெளிச்சம் நம்மை தேடி வரும்

> எந்தவொரு பிரச்னை என்றாலும் அதன் இறுதிவரை சென்று பார்க்க வேண்டும். எதிராளி யார் என்பதை தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டும்

> எப்போது பணத்திற்காக உங்களுடைய உண்மைத் தன்மையை இழக்கிறீர்களோ அப்போது அதற்கான விளைவுகளை சந்திக்க நேரிடும்

வாழ்த்துகள் இயக்குநர் விக்னராஜன்: 

பேட்டி ஒன்றில் நீங்கள் இனிமேல் நிறைய படங்களை எடுக்க வேண்டும் என்று ஆங்கர் சொல்ல, 'ஒரிஜினலா ஒரு படம் எடுக்கணும்னா கண்டிப்பா அதற்கு உண்டான நேரம் ஆகும்' என்று இயக்குநர் விக்னராஜன் பதில் சொல்லியிருப்பார். அவர் இதுபோன்ற நேர்த்தியான படங்களை எடுக்க வேண்டும்.

'அந்தகாரம்' நெட்ஃப்ளிக்ஸில் இருக்கிறது!


Advertisement

Advertisement
[X] Close