Published : 06,Dec 2020 12:21 PM

ஜடேஜா, பும்ரா, ஷ்ரேயஸ் என இந்திய அணியின் மும்மூர்த்திகளுக்கு இன்று பிறந்த நாள்!

TEAM-INDIA-CRICKETERS-JADEJA-BUMRAH-AND-SHREYAS-IYER-CELEBRATING-THEIR-BIRTHDAY-TODAY

படம் : நன்றி பிசிசிஐ 

இந்திய கிரிக்கெட் அணியின் தூண்களான ரவீந்திர ஜடேஜா, ஜஸ்ப்ரீத் பும்ரா மற்றும் ஷ்ரேயஸ் ஐயருக்கு இன்று பிறந்த நாள். சர்வதேச கிரிக்கெட்டில் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் ஆதிக்கம் செலுத்தி வரும் வீரர்கள் இவர்கள். 

image

ரவீந்திர ஜடேஜா

இந்திய கிரிக்கெட் அணியின் அசத்தல் ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா. பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என அனைத்திலும் அசத்துவார். 2008 இல் நடைபெற்ற ஐபிஎல் தொடர் மூலம் இந்திய கிரிக்கெட்டிற்கு கிடைத்த பொக்கிஷம். தோனி மற்றும் கோலி என இருவரின் ஆஸ்தான தளபதி. இதே நாளில் கடந்த 1988 இல் குஜராத்தில் பிறந்தவர். இப்போது ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் கிரிக்கெட் தொடரில் இந்தியாவுக்காக அபாரமான பங்களிப்பை கொடுத்து வருகிறார். சில போட்டிகளால் ஃபீல்டிங் செய்வதற்காகவே ஆடும் லெவனில் கேப்டன்கள் ஜடேஜாவை வான்டடாக சேர்ப்பது உண்டு. சர்வதேச கிரிக்கெட்டில் 4338 ரன்களும், 439 விக்கெட்டுகளையும் ஜடேஜா வீழ்த்தியுள்ளார். இடது கை சுழற்பந்து வீச்சாளராக ஒருநாள் கிரிக்கெட்டில் இந்தியாவுக்காக அதிவேகமாக 150 விக்கெட்டுகளை வீழ்த்தியதும் ஜடேஜா தான். 

image

பும்ரா

இதே நாளில் 1993 இல் குஜராத்தின் அஹமதாபாத் நகரில் பிறந்து வளர்ந்தாலும் பாரம்பரியமிக்க சீக்கிய வம்சாவளியை சேர்ந்தவர் இந்திய அணியின் மரண மாஸான பந்து வீச்சாளர் பும்ரா. தன்னோடு விளையாடும் நண்பர்கள் அனைவரும் பேட் செய்ய விரும்பினால் ‘நான் உங்களுக்கு பவுலிங் போடுகிறேன்’ என பந்தை தன் கையில் வைத்திருப்பது தான் பும்ராவின் விளையாட்டு பாணி. 

அவரது அம்மா தொந்தரவு இன்றி தூங்க வேண்டும் என்பதற்காக வீட்டில் விளையாடும்போது பந்தை சுவரும், தரையும் இணைகின்ற இடத்தில் பிட்ச் செய்து அதிக சத்தமில்லாமல் விளையாடியுள்ளார் பும்ரா. பின்னாளில் அதையே தனது ஆயுதமாக மாற்றி துல்லியமான யார்கர்களாக வீசி பேட்ஸ்மேன்களை இம்சிக்க பயன்படுத்தி கொண்டார். “யார்க்கர், பவுன்ஸ், ஸ்விங், ஸ்பீட் என ஒரு பாஸ்ட் பவுலர் நிச்சயமாக தெரிந்திருக்க வேண்டிய வித்தைகள் அனைத்தையும் பும்ராவிடம் என்னால் பார்க்க முடிந்ததால் 2013 ஐபிஎல் சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அவரை புக் செய்தோம்’ என்கிறார் பும்ராவை ஐபில் ஆட்டங்களில் விளையாட வைத்து அழகு பார்த்த ஜான் ரைட். தொடக்கத்தில் குஜராத் அணிக்காக விளையாடி இருந்தாலும். ஐபிஎல் தொடர் மூலம் இந்தியா கண்டெடுத்த மாணிக்கம் தான் பும்ரா. 

சுழற் பந்து வீச்சுக்கு சாதகமான இந்தியாவிலிருந்து வேகப்புயலான பும்ரா கிடைத்திருப்பது அரிதான நிகழ்வு. நியூ பால், மிடில் ஓவர், டெத் ஓவர் என எங்கு தன்னை பந்து வீச சொன்னாலும் அதை செய்து விக்கெட்டுகளை வேட்டை ஆடுவார். கடந்த 2015 இல் இந்தியாவுக்காக அறிமுகமான அவர் இதுவரை சர்வதேச கிரிக்கெட்டில் 225 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார். ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மாதிரியான மண்ணிலும் அபாரமாக பந்து வீசி அந்த நாடுகளை ஆட்டம் காண செய்தவர். 

image

ஷ்ரேயஸ் ஐயர்

கடந்த பிப்ரவரி மாதம் நடந்த நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் அந்நிய நாட்டு மைதானத்தில் அபாரமாக ஆடி இந்திய கிரிக்கெட் அணியின் மேட்ச் வின்னராக உருவெடுத்துள்ளார் ஷ்ரேயஸ் ஐயர். இதே நாளில் கடந்த 1994 இல் மத்திய மும்பையின் ஆதர்ஷ் நகரில் பிறந்தவர். தனது தந்தை சந்தோஷ் ஐயரின் கனவை நிறைவேற்றுவதற்காக கிரிக்கெட் பேட்டை எடுத்தவர். கிரிக்கெட் அவரது ஜீனிலேயே கலந்தது. அவரது தந்தையும் கல்லூரி காலம் வரை கிரிக்கெட் விளையாடி வந்துள்ளார். 

கல்லி கிரிக்கெட் விளையாடி வந்தவர் மும்பையின் ஜிம்கானா பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று டொமெஸ்டிக் கிரிக்கெட்டில் அசத்தியதன் மூலம் 2014 இல் அண்டர் 19 இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பை பெற்றார். அங்கு டிராவிடிடம் கிரிக்கெட் நுணுக்கங்களை கற்றார். ஐபிஎல், ரஞ்சி, விஜய் ஹசாரே கோப்பை என உள்ளூர் கிரிக்கெட்டில் அசத்தியவருக்கு இந்திய சீனியர் அணியில் விளையாடும் வாய்ப்பு 2017 இல் கிடைத்தது. இதுவரை அவர் ஆடிய 22 ஒருநாள் போட்டிகளில் எட்டு அரை சதமும், ஒரு சதமும் அடங்கும். ஒருநாள் போட்டிகளில் அவரது சராசரி 51.86. டி20 போட்டிகளில் அவரது சராசரி 50.99. டெஸ்டில் தனது அறிமுக போட்டிக்காக காத்துக் கொண்டிருக்கிறார்.

இந்தியாவின் மற்றொரு கிரிக்கெட் வீரர் கருண் நாயருக்கும் இன்று தான் பிறந்த நாள். 

ஹேப்பி பர்த் டே டூ ஆல்...

சற்று முன்எடிட்டர் சாய்ஸ்