[X] Close

அதிக இடங்களில் டி.ஆர்.எஸ்; ஆனால், எழுச்சியோ பாஜகவுக்கு!- ஹைதராபாத் முடிவுகள் சொல்வது என்ன?

இந்தியா,சிறப்புக் களம்,தேர்தல் களம்

Hyderabad-GHMC-election-results-2020

ஹைதராபாத் மாநகராட்சித் தேர்தலில் டி.ஆர்.எஸ் கட்சி அதிக இடங்களில் வென்றிருந்தாலும், இந்தத் தேர்தல் மூலம் பாஜக பெற்றுள்ள எழுச்சி என்பது தெலங்கானாவில் தன் இருப்பை வலுப்படுத்தும் வகையில் அமைந்திருக்கிறது.

ஹைதராபாத் மாநகராட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை வெள்ளிக்கிழமை நடந்தது. இறுதி நிலவரப்படி, மொத்தமுள்ள 150 வார்டுகளில் தெலங்கானாவின் ஆளும் கட்சியான தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சி 55 இடங்களைக் கைப்பற்றியிருக்கிறது; பாஜக 48 இடங்களை வசப்படுத்தியிருக்கிறது. ஒவைசி கட்சி 44 இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறது. காங்கிரஸ் 2 இடங்களை மட்டுமே பெற்றது.

இந்தத் தேர்தலில் தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சி முதலிடம் வகிக்கும் நிலையில், இரண்டாம் இடத்தைப் பிடிக்க பாஜக - ஓவைசியின் கட்சி கடும் போட்டி நிலவியது. மாலை வரை ஓவைசி கட்சி முந்தியது. கடைசியில், பாஜக 4 இடங்களைக் கூடுதலாகப் பெற்றிருக்கிறது.


Advertisement

வாக்குச்சீட்டு முறையில் நடந்த இந்தத் தேர்தலின் வாக்குகள் தொடர்ந்து எண்ணப்பட்டு வருகிறது. முடிவுகள் முழுமையாக வெளிவர சற்றே தாமதம் ஆனது.

image

பாஜகவுக்கு எழுச்சியே!


Advertisement

கடந்த 2016 தேர்தல் முடிவுகளைப் பொறுத்தவரையில், மொத்தமுள்ள 150 வார்டுகளில் டி.ஆர்.எஸ் கட்சி 102 இடங்களுடன் மகத்தான வெற்றி பெற்றது. ஓவைசி கட்சி 42 இடங்களைக் கைப்பற்றியது. பாஜக கூட்டணி 4 இடங்களையும், காங்கிரஸ் ஒரே ஒரு வார்டையும் மட்டுமே பெற்றிருந்தன.

வெறும் 4 இடங்களைக் கைப்பற்றியிருந்த பாஜக இம்முறை 48 இடங்களை வென்றிருப்பதே மிகப் பெரிய எழுச்சியாகப் பார்க்கப்படுகிறது.

வழக்கம்போல் இல்லாமல் இந்தத் தேர்தலுக்கு அதிக முக்கியவதும் கொடுத்தது பாஜக. தங்கள் கட்சியின் மேல்மட்ட தலைவர்கள் அத்தனை பேரையும் பிரசாரக் களத்தில் இறக்கியது. ஜெ.பி.நட்டா, அமித் ஷா, யோகி ஆதித்யநாத், பட்நாவிஸ், பிரகாஷ் ஜவடேகர், ஸ்மிருதி இரானி என அந்த வரிசை நீண்டது.

கடந்த மாநகராட்சித் தேர்தலைவிட இந்த முறை பாஜக கணிசமான இடங்களைக் கைப்பற்றியிருக்கிறது. இந்தத் தேர்தல் மட்டுமல்ல, சமீபத்தில் நடந்துமுடிந்த துபாக்கா தேர்தலிலும் பாஜக வெற்றி எதிர்பாராத ஒன்று. சமீப காலமாக தெலங்கானாவில் பாஜக வேரூன்றி வருவதற்கு அந்தக் கட்சியின் செல்வாக்கு மட்டும் காரணமில்லை. சந்திரசேகர ராவின் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி, ஓவைசி கட்சியான ஏஐஎம்ஐஎம் (AIMIM) மெத்தனங்களும் காரணம் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

உதாரணத்துக்கு, ஹைதராபாத்தை எடுத்துக்கொள்வோம். அக்டோபர் 13-14 தேதிகளில் பெய்த கனமழையால் ஹைதராபாத் மாநகரத்தின் பெரும் பகுதிகள் வெள்ளத்தில் சூழ்ந்தன. பல குடியிருப்பு காலனிகள் நீரில் மூழ்கின. வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் அரசின் நடவடிக்கை பெரும் விமர்சனத்துக்குள்ளானது. மிக தாமதமாக தண்ணீரை அகற்றினர் மாநகராட்சி அதிகாரிகள். இத்தனைக்கும் மேயராக இருந்தது மாநிலத்தை ஆளும் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியைச் சேர்ந்தவர்தான். ஆனாலும், மக்கள் குடியிருப்புகளில் இருந்து வெள்ளநீர் வெளியேற்றப்படவில்லை. காலனிகள் பல நாட்களாக நீரில் மூழ்கியிருந்தன. அத்தியாவசிய பொருட்கள் மற்றும் உணவு இல்லாமல் ஏழை மக்கள் அவதிக்குள்ளாக்கினர்.

நகராட்சி கவுன்சிலர்கள் நேரடியாக வெள்ள நீரில் சிக்கித் தவிக்கும் குடிமக்களின் கோபத்தை எதிர்கொண்டனர். அக்டோபர் 19-ம் தேதி, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உடனடி நிவாரணமாக ரூ.10,000 ரொக்கப் பணத்தை அறிவித்தார் முதல்வர் சந்திரசேகர ராவ். ஆனால், நிவாரணம் உருப்படியாக மக்களை சென்று சேரவில்லை. பண விநியோகத்தில் பல குளறுபடிகள் இருந்தன என்று மக்கள் குற்றம் சாட்டிய சம்பவங்களும் அரங்கேறின.

இதுபோன்ற சம்பவங்கள் இப்போது மட்டுமல்ல, புயல் - கனமழை எப்போது வந்தாலும் ஹைதராபாத் மாநகர் பெரும் பாதிப்பை சந்திக்க தவறுவதில்லை. கிட்டத்தட்ட 7 ஆண்டுகளாக தெலங்கானவை ஆட்சி செய்து வருகிறது தெலங்கானா ராஷ்டிரிய சமிதி. கடந்த தேர்தலின்போது அந்தக் கட்சியுடன் கூட்டணி அமைத்து இருந்தது ஓவைசி கட்சி. ஆனாலும் இந்த இரு கட்சிகளும் ஹைதராபாத் மேம்பாட்டுக்காக உழைக்கவில்லை என்பது பெரும்பாலோரான குற்றச்சாட்டு.

image

புதுடெல்லியை தளமாகக் கொண்ட 'இன்ஸ்டிட்யூட் ஆஃப் பெர்சப்ஷன் ஸ்டடீஸ்' (Institute of Perception Studies) என்ற நிறுவனம் சமீபத்தில் ஹைதராபாத்தில் ஓர் ஆய்வை மேற்கொண்டது. 2020 நவம்பர் 1 முதல் 15 வரை இந்த ஆய்வு நடத்தப்பட்டது. 67%-க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் நகரத்தில் மோசமான சாலைகள் உள்ளதாகவும், 62%-க்கும் அதிகமான மக்கள் மோசமான சுகாதார வசதி உள்ளதாகவும், 34% நகராட்சி பள்ளிகளில் மோசமான கல்வி நடத்தப்பட்டு வருவதாகவும் கருத்து தெரிவித்துள்ளனர். ஹைதராபாத்தில் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தவில்லை என்று இன்னும் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதேபோல், சந்திரசேகர ராவ்வின் செயல்பாடுகளும் விமர்சனத்துக்குள்ளாகி உள்ளன. அவர் 'சர்வாதிகார போக்குடன்' நடந்துகொள்கிறார் என்ற சமீப கால பிரசாரங்களும் மக்கள் மத்தியில் ஈடுபட்டுள்ளது. இதையெல்லாம் கணித்துதான் பாஜக தனது தேர்தல் பிரச்சாரத்தை வகுத்தது.

குறிப்பாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, "நகரத்தின் கட்டமைப்பை மேம்படுத்துவோம். கனமழை, வெள்ளத்தால் நீங்கள் பட்ட துன்பங்கள் தெரியும். மக்களுக்கு நான் ஒரு உறுதியளிக்க விரும்புகிறேன். நாங்கள் வென்றால் நகரத்தின் ஆக்கிரமிப்புகள் அகற்றி நகரம் ஒருபோதும் வெள்ளம் ஏற்படாதவாறு கட்டமைப்பை ஏற்படுத்துவோம். வெள்ளத்தில் ஹைதராபாத் மூழ்கியது கே.சி.ஆர் மற்றும் ஓவைசி எங்கே சென்றார்கள் என்பது தெரியவில்லை. அவர்கள் மக்களை சந்திக்கவில்லை. நாங்கள் உங்களுக்காக பணியாற்றுவோம். உலகத்தரத்துக்கான இணையான கட்டமைப்பை இங்கு ஏற்படுத்துவோம்" என்றார்.

ஹைதராபாத் முனிசிபல் கார்ப்பரேஷன் எல்லைக்குள் 24 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. அதனால், தற்போது வெளியாகியுள்ள ஹைதராபாத் மாநகராட்சித் தேர்தல் முடிவுகள் அம்மாநிலத்தில் அரசியல் முக்கியத்துவத்தைப் பெற்றுள்ளது. அந்த வகையில், பாஜகவின் தற்போதைய எழுச்சி என்பது ஆளும் கட்சிக்கும், ஓவைசி கட்சிக்கும் எச்சரிக்கை மணி என்றே சொல்லாம்.

2023-ல் நடக்க இருக்கும் தெலங்கானா சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னோடியாக, இந்த வாக்கெடுப்பு முடிவுகள் பார்க்கப்படுகின்றன. பாஜக கர்நாடகாவைத் தவிர, தென்னிந்தியாவில் ஒரு பெரிய இருப்பைக் கொண்டிருக்கவில்லை. இந்தத் தேர்தல் மூலம் தெலங்கானாவில் ஓர் அடையாளத்தை உருவாக்க அக்கட்சி முயன்று, அதில் குறிப்பிடத்தக்க வெற்றியும் பெற்றிருப்பது கவனிக்கத்தக்கது.

இதற்கிடையே, "மாற்றம் தெலங்கானா மாநிலத்தில் தொடங்கியது. மக்களவைத் தேர்தல் முடிவுகளையும், பின்னர் துபாக்கா இடைத்தேர்தலையும், இப்போது ஜி.எச்.எம்.சி. தேர்தலும் உணர்த்துவது மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள் என்பதுதான். இது டிஆர்எஸ்-க்கு விடுக்கப்பட்ட தெளிவான செய்தி" என்று தெலங்கானா பாஜக எம்.பி. டி.அரவிந்த் கூறியுள்ளார். இதையேதான் அரசியல் வல்லுநர்களும் கூறுகிறார்கள்.

தொடர்ந்து தெலங்கானா ராஷ்டிரிய சமிதி மீது மக்கள் மத்தியில் எழுந்துள்ள அதிருப்தியே கடந்த சில தேர்தல்களில் எதிரொலிக்க தொடங்கியுள்ளது. இதை சரியாக பாஜக பயன்படுத்திக் கொள்கிறது. இதை அறிந்து சந்திரசேகர ராவ் செயல்படவில்லை என்றால், 2023 சட்டமன்றத் தேர்தலில் அவருக்கு கேள்விக்குறி என்பதே நிதர்சனம்.

- மலையரசு


Advertisement

Advertisement
[X] Close