இந்திய விவசாயிகளை கனடா பிரதமர் ஆதரிப்பது 'உள்நோக்கம்' கொண்டதா?

இந்திய விவசாயிகளை கனடா பிரதமர் ஆதரிப்பது 'உள்நோக்கம்' கொண்டதா?
இந்திய விவசாயிகளை கனடா பிரதமர் ஆதரிப்பது 'உள்நோக்கம்' கொண்டதா?

வாக்கு வங்கி அரசியலால்தான் இந்திய விவசாயிகள் போராட்டத்துக்கு கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஆதரவு தெரிவித்துள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது.

இந்திய விவசாயிகளின் போராட்டம் குறித்து கருத்து தெரிவித்த கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, ''இந்தியாவில் இருந்து விவசாயிகள் போராட்டம் குறித்து செய்திகள் வருகின்றன. நாங்கள் அவர்களின் குடும்பத்தினரை பற்றியும், நண்பர்களை பற்றியும் கவலை கொள்கிறோம். அதுதான் உங்களது மனநிலையாகவும் இருக்கும். எங்களது கவலைகளை இந்திய அரசுக்கும் தெரிவித்துள்ளோம். உங்களுக்கு ஒன்றை நினைவுபடுத்துகிறேன், அமைதியாக போராடும் விவசாயிகளின் உரிமைகளை பாதுகாக்க கனடா எப்போதும் துணைநிற்கும்" எனத் தெரிவித்தார்.

உடனடியாக, இந்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவாஸ்தவா, ''இந்தியாவில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டம் தொடர்பாக கனடா நாட்டு தலைவர்கள் தவறான தகவல்களை தெரிவித்து வருகின்றனர். ஒரு ஜனநாயக நாட்டின் உள் விவகாரங்கள் தொடர்பாக இதுபோன்று கருத்து தெரிவிப்பது தேவையற்றவை. அரசியல் நோக்கங்களுக்காக ராஜதந்திர உரையாடல்கள் தவறாக சித்தரிக்கப்படாமலிருப்பதும் சிறந்தது" என பதில் கொடுத்தார்.

இவர் மட்டுமல்ல, பாஜக முக்கிய பிரமுகர்கள், தமிழக பாஜகவைச் சேர்ந்த குஷ்பு உள்ளிட்டோரும் ட்ரூடோவுக்கு எதிராக வரிந்துகட்டி கண்டனங்களைப் பதிவிட்டனர். அவர்கள் முன்வைப்பது, 'விவசாயிகள் போராட்டம் உள்நாட்டு பிரச்னை. இதில் ட்ரூடோ தலையிட அவசியம் இல்லை" என்பதுதான்.

அவர்கள் குறிப்பிட்டதுபோல், இந்தியாவில் எத்தனையோ பிரச்னைகள் இருந்தும் ட்ரூடோ, விவசாயிகள் போராட்டத்துக்கு மட்டும் ஆதரவு தெரிவிப்பதற்கு காரணங்கள் உண்டு. அதற்கு கனடாவின் வாக்கு வங்கி அரசியலையும், சீக்கியர்களின் எழுச்சியையும் தெரிந்துகொள்ள வேண்டும் என்கிறார்கள் சர்வதேச அரசியல் பார்வையாளர்கள்.

1980-களில் பஞ்சாப் பகுதிகளில் வன்முறைகள் வெடிக்கத் தொடங்கின. பஞ்சாப்பை தனிநாடாகப் பிரித்து தரக்கோரி 'காலிஸ்தான்' அமைப்பு தீவிரமாக செயல்பட்டதால் இந்த வன்முறைகள் வெடித்தன. ஆனால், 1984-ல் அன்றைய பிரதமர் இந்திரா காந்தி, காலிஸ்தான் அமைப்பை சிதைக்கும் நடவடிக்கைகளில் இறங்கினார். அமிர்தர்ஸ் பொற்கோயிலுக்குள் இந்திய ராணுவம் நடத்திய 'ப்ளு ஸ்டார்' ஆபரேஷன் காரணமாக பிரதமர் இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்டார். இதன்பின் நடந்த பெரும் கலவரத்தில் 3,000 சீக்கியர்கள் கொல்லப்பட்டனர். இவர்களில் காலிஸ்தான் பிரிவினைவாத அமைப்பை சேர்ந்தவர்கள் பலரும் கொல்லப்பட்டனர்.

இதே காலிஸ்தான் போராளிகள் 1985-ல் கனடாவில் இருந்து இந்தியா வந்த ஏர் இந்தியா விமானத்தில் குண்டுவைத்து 329 பேர் சாவுக்கு காரணமாக இருந்தனர் என்ற குற்றச்சாட்டும் உண்டு. அடுத்தடுத்த வன்முறைகளால் சீக்கியர்கள் பெரும் அளவில் புலம்பெயரத் தொடங்கினர். இவர்களில் கனடாவில் குடியேறியவர்கள் அதிகம். தற்போதைய கணக்கின்படி இந்திய வம்சாவளி சீக்கியர்கள் லட்சக்கணக்கில் கனடாவை வாழ்விடமாக கொண்டு வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் அங்கு அரசியல் ரீதியாகவும் வலுப்பெற்று உள்ளனர். ட்ரூடோ அமைச்சரவையில்கூட நான்கு சீக்கியர்கள் அமைச்சர்களாக இருக்கின்றனர். ஏன், கனடா ராணுவ அமைச்சர் ஹர்ஜித் சிங் ஷஜ்ஜன்கூட சீக்கியர்தான்.

ட்ரூடோவின் லிபரல் கட்சிக்கு அதிகம் பலம் சேர்ப்பது சீக்கியர்கள்தான். இதனால் ட்ரூடோ, காலிஸ்தான் பிரிவினைக்கு ஆதரவாக இருக்கிறார் என்று குற்றச்சாட்டு நீண்ட நெடுங்காலமாக இந்தியாவால் சுமத்தப்பட்டு வருகிறது. ட்ரூடோவின் அமைச்சரவையில் இருக்கும் அமைச்சர்கள்கூட 'காலிஸ்தான்' பிரிவினை நினைப்புடன் இருக்கின்றனர் என்ற குற்றச்சாட்டும் இருக்கிறது. இதன் காரணமாகதான் கடந்த 2018-ல் ட்ரூடோ இந்தியா வந்தபோது நிறைய புறக்கணிப்பு சம்பவங்கள் நிகழ்ந்தன.

வழக்கமாக வெளிநாட்டுத் தலைவர்கள் வரும்போது விமான நிலையத்துக்கு நேரடியாக சென்று அவர்களை கட்டித் தழுவி வரவேற்கும் பிரதமர் மோடி, ட்ரூடோவின் 'காலிஸ்தான்' ஆதரவு காரணமாக அவரை கண்டுகொள்ளவே இல்லை. 3 நாள்கள் கழித்தே ட்ரூடோவை சந்தித்தது குறிப்பிடத்தக்கது. தற்போதும், வாக்கு வங்கி அரசியலுக்காகவே விவசாயிகளின் போராட்டத்துக்கு ட்ரூடோ ஆதரவு தெரிவித்து இருக்கிறார் என்றும் சர்ச்சைகள் எழுந்துள்ளன.

அதேநேரத்தில், அகதிகளின் தேசம் என வர்ணிக்கப்படும் கனடாவில் சீக்கியர்களை தாண்டித் தமிழர்கள் உள்பட பல மாநில மக்களுக்கும் நிபந்தனையற்ற அன்பை, ஆதரவை வழங்கி வருகிறது ட்ரூடோ அரசு. அகதிகளாக யார் வந்தாலும் மற்ற நாடுகளைப்போல் அவர்களுக்கு முகாமோ, தனிக் குடியிருப்புகளையோ ஏற்படுத்தி தங்க வைக்காமல், சக மனிதர்களாக அரவணைத்துக்கொள்ளும் ஒரே நாடு என்றால் அது கனடாதான். அகதிகள் அகதிகளைபோல அல்லாமல் அந்த நாட்டின் ஓர் அங்கமாகவே வாழ வழிவகை செய்யப்பட்டுள்ளது.

2015ல் உள்நாட்டுப் போர் காரணமாக சிதைந்த சிரிய மக்கள் அகதிகளாக பல நாடுகளுக்குச் சென்றனர். அவர்களுக்கு மற்ற நாடுகள் இடம் கொடுக்க மறுக்க ட்ரூடோ மட்டுமே இடம் கொடுத்தார். அவரின் முயற்சியால் 25,000 சிரிய மக்கள் கனடாவில் தஞ்சம் புகுந்தனர். சிரிய மக்களைபோல யார் வந்தாலும் அவர்களை அரவணைத்து கொள்பவர் ட்ரூடோ. இதனாலேயே அவர் 'அகதிகளின் காவலன்' என அழைக்கப்படுகிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com