[X] Close

PT Web Explainer: ஒற்றை அதிகாரியால் ஒரு 'சக்சஸ்' வங்கியையே மூழ்கடிக்க முடிகிறது. எப்படி?

வணிகம்,சிறப்புக் களம்

A-successful-Lakshmi-Vila-Bank-can-be-sunk-by-a-single-officer--How-

அதிகாரமிக்க ஒற்றை நபரில் தவறான அணுகுமுறையால், வெற்றிகரமாக இயங்கிவந்த ஒரு வங்கியையே மூழ்கடிக்க முடியும் என்பதற்கு சமீபத்திய உதாரணம்தான் லக்‌ஷ்மி விலாஸ் வங்கி. எப்படி?

பங்குச்சந்தையில் மட்டுமல்லாமல் பொதுமக்கள் அதிகம் விவாதிக்கும் பேசுபொருளாக லக்‌ஷ்மி விலாஸ் வங்கி மாறியுள்ளது. தமிழகத்தை மையமாகக் கொண்டு செயல்படும் வங்கி என்பதால் இங்கு பதற்றம் அதிகரித்துள்ளது. ஒவ்வொரு விஷயமாக அலசுவோம்.


Advertisement

ஏன் பதற்றம்?

 டிசம்பர் மாதம் 16-ம் தேதி வரை இந்த வங்கியில் இருந்து டெபாசிட்தாரர்கள் அதிகபட்சம் ரூ.25,000 மட்டுமே எடுக்க முடியும் என ரிசர்வ் வங்கி கட்டுப்பாடு விதித்திருக்கிறது. மருத்துவக் காரணங்களுக்காக அதிகபட்சம் ரூ.5 லட்சம் வரை எடுக்க முடியும். மேலும், லக்‌ஷ்மி விலாஸ் வங்கியை, டிபிஎஸ் இந்தியா வங்கியுடன் இணைப்பதற்கும் ரிசர்வ் வங்கி முடிவெடுத்திருக்கிறது. டிபிஎஸ் வங்கி ரூ.2,500 கோடி ரூபாயை முதலீடு செய்ய இருப்பதால் வங்கியின் டெபாசிட்தாரர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என அறிவிக்கப்பட்டிருக்கிறது. டிசம்பர் 16-ம் தேதி வரை கட்டுப்பாடு இருந்தாலும் நவம்பர் 25-ம் தேதி இந்த கட்டுப்பாட்டை ரிசர்வ் வங்கி நீக்கியது. டிபிஎஸ் வங்கி உடனான இணைப்புக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது. இதனை அடுத்து இன்று முதல் (நவம்பர் 27) டிபிஎஸ் வங்கியாகவே லஷ்க்மி விலாஸ் வங்கி செயல்பட தொடங்கி இருக்கிறது.

 ஆனால், பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு பெரிய இடி விழுந்திருக்கிறது. வங்கியின் பங்குகள், உபரித்தொகை முழுவதையும் 'ரைட் ஆப்' செய்யப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்திருக்கிறது. அதனால், இதற்கு எந்த மதிப்பும் இல்லை. ஒருவேளை நீங்கள் லக்‌ஷ்மி விலாஸ் வங்கி பங்கினை வைத்திருந்தீர்கள் என்றால், உங்களுக்கு எதுவும் கிடைக்காது என்பதே உண்மை.

 லக்‌ஷ்மி விலாஸ் வங்கியை வெளிநாட்டு வங்கியுடன் இணைக்காமல் பொதுத்துறை வங்கியுடன் இணைத்திருக்க வேண்டும், லக்‌ஷ்மி விலாஸ் வங்கியின் தோல்வி மத்திய அரசுதான் காரணம். டிபிஎஸ் வங்கி இரு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பங்குக்கு ரூ.100 வழங்குவதாக தெரிவித்தது. ஆனால். தற்போது வங்கியின் பங்குகளுக்கு எந்த மதிப்பும் இல்லாமல் இலவசமாக வழங்கப்பட்டிருக்கிறது என குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

 

மத்திய அரசு காரணமா?

 

மத்திய அரசு மீது குற்றம் சொல்வதற்கு ஆயிரம் வேறு காரணங்கள் உண்டு. ஆனால், லக்‌ஷ்மி விலாஸ் வங்கியை பொறுத்தவரை, வங்கியின் தவறான நடவடிக்கைகள் காரணமாகவே தோல்வியடைந்தது. கரூரை மையமாக கொண்டு செயல்பட்ட இந்த வங்கி, சிறு கடன்கள், சிறிய நிறுவனங்களுகான கடன்களை (எஸ்.எம்.இ) வழங்கிவந்தது. ஆனால் அதிக வளர்ச்சியை நோக்கமாக கொண்ட குறிப்பிட்ட சில பங்குதாரர்கள் கார்ப்பரேட் கடன்களுக்கு முன்னுரிமை அளித்தார்கள்.

 

அதாவது, சிறு சிறு கடன்களில் இருந்து பெரிய தொகையை கடனாக கொடுக்க லக்‌ஷ்மி விலாஸ் வங்கி முடிவெடுத்தது. அதனால், வங்கியின் கடன் வழங்கும் வளர்ச்சி விகிதமும் உயர்ந்தது. ஆனால், துரதிஷ்டவசமாக பெரு நிறுவனங்களுக்கு கொடுத்த பெரும்பாலான கடன்கள் வாராக்கடனாக மாறியது. ரெலிகர் ஃபின்வெஸ்ட் (ரூ.729 கோடி), காபிடே (ரூ.350 கோடி), பின்கான் ஸ்பிரிட்ஸ் (ரூ.207 கோடி) இபிசி கன்ஸ்ட்ரக்‌ஷன் (ரூ.148 கோடி), ஏஎஸ்ஆர் இன்ஜினீயரிங் (ரூ.147 கோடி), தால்வால்கர் (120 கோடி) என பெரும் தொகை வாராக்கடன் கடன் பட்டியலில் சிக்கி இருக்கிறது.

 

இதுதவிர காக்ஸ் அண்ட் கிங்க்ஸ், ரிலையன்ஸ் ஹவுசிங், அல்டிகோ கேபிடல், கீதாஞ்சலி ஜெம்ஸ் என பல கடன்கள் திரும்பி வராமல் வாராக்கடன் கணக்குகளாக மாறின. இதில் 'காபிடே' உள்ளிட்ட சில கடன்கள் எந்தப் பிணையும் இல்லாமலே கொடுக்கப்பட்டிருக்கிறது.

image

 

நிலையில்லாத தலைமை

 

ஹெச்டிஎஃப்சி வங்கியில் 26 ஆண்டுகளாக ஆதித்யா பூரி தலைமைச் செயல் அதிகாரியாக இருந்து சமீபத்தில் ஓய்வு பெற்றார். ஆனால், கடந்த பத்தாண்டுகளில் எல்விபி-யில் நான்கு தலைமைச் செயல் அதிகாரிகள் மாறி இருக்கிறார்கள்.  சில மாதங்களுக்கு முன்பு தலைமைச் செயல் அதிகாரியாக பொறுப்பேற்க யாரும் முன்வராததால் இடைக்கால தலைமைச் செயல் அதிகாரியை நியமனம் செய்தார்கள். ஆனால், அவர் உள்ளிட்ட இயக்குநர் குழு மொத்தத்தையும் பங்குதாரர்கள் முழுமையாக நிராகரித்து வெளியேற்றிவிட்டார்கள்.

 

வங்கியின் தலைமைச் செயல் அதிகாரி மாறுதல்களுக்கும், பெரு நிறுவனங்களுக்கு கடன் கொடுப்பதற்கு முன்னுரிமை வழங்கப்பட்டதற்கு முக்கியமான காரணம் வங்கியின் ஐந்து சதவீத பங்குகளை வைத்திருக்கும் இயக்குநர் கே.ஆர். பிரதீப்தான் என வங்கியின் முன்னாள் பணியாளர்கள் தெரிவிக்கிறார்கள். கடன் வழங்குவதில் யாருக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல முடிவுகளில் இவரது தலையீடு இருந்தாக ஊடகங்களிலும் செய்தி வெளியாகி இருக்கிறது. தவிர, இவர் வங்கியின் தலைவராகும் முயற்சியை தொடர்ந்து முயற்சி எடுத்தார், ஆனால் இவரது முயற்சிக்கு ரிசர்வ் வங்கி அனுமதி வழங்கவில்லை.

 

இரு ஆண்டுகளுக்கு முன்பு ரூ.100...

 

வங்கியின் மோசமான செயல்பாடுகளால் கடந்த மூன்று நிதி ஆண்டுகளாக நஷ்டத்தை சந்திக்க வேண்டியிருந்தது. இதனால் வங்கியை வேறு நிறுவனங்களுடன் இணைக்கும் நடவடிக்கை இரு ஆண்டுகளுக்கு முன்பே எடுக்கப்பட்டது. இந்தியாபுல்ஸ் நிறுவனத்துடன் இணைப்பதற்கான பேச்சுவார்த்தை தொடங்கியது. இத்தனைக்கும் அந்த நிறுவனம் மீது சந்தையில் எதிர்மறையான கருத்துகள் நிலவிவந்த சூழலில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால், இந்த நடவடிக்கைக்கு ரிசர்வ் வங்கி ஒப்புதல் வழங்கவில்லை. இதனைத் தொடர்ந்து கிளிக்ஸ் கேபிடல் நிறுவனத்துடன் இணைப்பதற்கான பேச்சுவார்த்தை தொடங்கியது.

 

இந்தப் பேச்சுவார்த்தை இறுதிகட்டத்தில் இருக்கும்போது, வங்கியின் மீது ரிசர்வ் வங்கி தன்னுடைய கட்டுப்பாட்டை விதித்தது. மேலும், இந்த வங்கியை டிபிஎஸ் வங்கியுடன் இணைப்பதற்கான நடவடிக்கையும் எடுத்தது. இந்த வங்கி ரூ.2,500 கோடி முதலீடு செய்வதால் வங்கியின் டெபாசிட்தாரர்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லாமல் டெபாசிட் தொகை கிடைத்துவிடும். ஆனால், லக்‌ஷ்மி விலாஸ் பங்குகளை ரிசர்வ் வங்கி ரைட் ஆப் செய்துவிட்டது. அதாவது, அந்த பங்குகளுக்கு எந்த மதிப்பும் இல்லை.

 

இது தொடர்பாக வங்கியின் இயக்குநர் பிரதீப் கூறும்போது, "இரு ஆண்டுகளுக்கு முன்பு டிபிஎஸ் வங்கி ஒரு பங்கினை 100 ரூபாய்க்கு வாங்க திட்டமிட்டது. ஆனால், அப்போது ரிசர்வ் வங்கி அனுமதி அளிக்கவில்லை. இப்போது பங்குகள் ரைட் ஆப் செய்யப்பட்டிருக்கிறது" என தெரிவித்திருக்கிறார்.

 

இரு ஆண்டுகளுக்கு முன்பு வங்கியின் வாராக்கடன் அளவு, நெட்வொர்த் ஆகியவற்றின் நிலைமை வேறு. தற்போதைய நிலைமை வேறு. தற்போதைய நிலைமையில் மொத்த வாராக்கடன் 25 சதவீதமாக இருக்கிறது. தவிர வங்கியின் நெட்வொர்த் நெகட்டிவாக மாறி இருக்கிறது. அதனால் பங்குகளுக்கு மதிப்பில்லை என ரிசர்வ் வங்கி அறிவித்திருக்கிறது. 563 கிளைகள், 900 ஏடிஎம்கள், ரூ.20,973 கோடி டெபாசிட் தொகை, 20 லட்சம் வாடிக்கையாளர்கள், 4000 பணியாளர்கள் என பெரும் பலம் இருந்தாலும், நஷ்டத்தின் காரணமாக நெட்வொர்த் ஏதும் இல்லை.

image

 

ஏன் வெளிநாட்டு வங்கி?

 

பொதுத்துறை வங்கியுடன் இணைக்காமல் ஏன் வெளிநாட்டு வங்கியுடன் இணைக்கவேண்டும் என பொதுவாக கருத்துகளைக் கேட்க முடிகிறது. ஒவ்வொரு முறை வங்கிகள் சிக்கலுக்கு உள்ளாகும்போது பொதுத்துறை வங்கிகளுடன் இணைக்கும் நடவடிக்கைகளுக்கு ரிசர்வ் வங்கி முற்றுப்புள்ளி வைத்திருப்பதாக வங்கித்துறை வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள். பொதுமக்களின் வரிப்பணம் வீணாவதுடன், தனியார் வங்கி பணியாளர்கள் நேரடியாக பொதுத்துறை வங்கியின் பணியாளர்களாக மாறிவிடுவார்கள். அதனால், தனியார் வங்கியுடன் இணைத்தது தவறில்லை.

 

சிங்கப்பூரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் வங்கியாக இருந்தாலும், இதன் துணை வங்கியான டிபிஎஸ் இந்தியா வங்கி இந்திய ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டுக்குள்ளே வரும்.

 

'ரிசர்வ் வங்கி இந்த நடவடிக்கையை முன்பே எடுத்திருக்கலாமா?' என்னும் கேள்வியை கேட்டால் பலரும் 'ஆமாம்' என்றே சொல்கிறார்கள். பங்குதாரர்களை காப்பற்ற ஆர்பிஐ தவறிவிட்டது. எல்விபி-யின் சரிவு ஒரே நாளில் நடந்திருக்காது. கடந்த சில காலாண்டுகளாகவே மூலதன தன்னிறைவு விகிதம், மொத்த வாராக்கடன் உள்ளிட்ட விகிதங்கள் எச்சரிக்கை மணி எழுப்பி வரும் சூழலில் ரிசர்வ் வங்கி முன்பே இதனை கவனித்திருக்கலாம். 2016-ம் ஆண்டு மொத்த வாராக்கடன் 2 சதவீதம் என்னும் அளவிலே இருந்தது. ஆனால், தற்போது 25 சதவீதமாக அதிகரித்திருக்கிறது. இடைப்பட்ட காலத்தில் ஆய்வு செய்திருக்கும் பட்சத்தில் பங்குதாரர்கள் காப்பாற்றப்பட்டிருப்பார்கள் என முன்னாள் வங்கியாளர்கள் பலர் தெரிவிக்கிறார்கள்.

 

பங்குதாரர்கள் வழக்கு தொடுக்க திட்டமிட்டிருந்தாலும், அதற்கு பலன் இருக்காது என்றே தோன்றுகிறது. குளோபல் ட்ரஸ்ட் வங்கி, ஓரியண்டல் பேங்க் ஆப் காமர்ஸ் உடன் இணைக்கப்பட்டது. அப்போது குளோபல் ட்ரஸ்ட் வங்கி பங்குகளில் முதலீடு செய்தவர்கள் சட்ட போராட்டங்களை நடத்தினார்கள். ஆனால், அதற்கு பலன் கிடைக்கவில்லை. எல்விபி முதலீட்டாளர்கள் வழக்கு தொடுத்தாலும் பலன் இருக்காது என்றே தோன்றுகிறது. லஷ்மி விலாஸ் வங்கி நிறுவனர்கள் மும்பை நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தாலும் எந்தவிதமான இடைக்கால தடையையும் நீதிமன்றம் விதிக்கவில்லை.

 

ஆக, 96 ஆண்டு கால வங்கி தனிப்பட்ட சிலருடைய விருப்பங்களால் தன்னுடைய அடையாளத்தை இழந்துவிட்டது!

 

- வாசு கார்த்தி

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close