[X] Close

அன்று பிடித்தது விளையாட்டு; இன்று தொழில் 'படிப்பு'... 'பைஜூஸ்' ரவீந்திரனின் வெற்றிக் கதை!

கல்வி-வேலைவாய்ப்பு,சிறப்புக் களம்,டெக்னாலஜி

BYJUS-THE-LEARNING-APP-FOUNDER-BYJU-RAVEENDRAN-SUCCESS-STORY

இன்றைய டிஜிட்டல் டெக்னாலஜியை பயன்படுத்தி கற்பித்தலில் தனித்துவம் காட்டி, வியத்தகு பிசினஸ் மாடலை நிறுவியிருக்கும் ஸ்டார்ட் அப் நிறுவனம்தான் பைஜூஸ். உலக அளவில், EDTECH (தொழில்நுட்பத்தின் உதவியோடு கல்வியை போதிக்கும் முறை) நிறுவனங்களில் பைஜூஸ் நிறுவனத்திற்கு இப்போது முக்கியம் இடம். இதன் நிறுவனர் கடந்து வந்த பாதை சுவாரசியமானது. புத்தாக்க முயற்சிகளில் ஈடுபாடு உள்ளவர்களுக்கு புத்துணர்வூட்டுவதும் கூட.


Advertisement

image

அமெரிக்காவில் ஆப்பிள் நிறுவனத்தை ஸ்டீவ் ஜாப்ஸ் எப்படி தன் வீட்டின் கார் ஷெட்டில் ஆரம்பித்தாரோ, அதேபோல பைஜூஸ் நிறுவனத்தை பெங்களுருவில் இருந்த தன் நண்பர் வீட்டின் மொட்டை மாடியில் ஆறு மாணவர்களோடு ஆரம்பித்தார், அதன் நிறுவனர் பைஜூ ரவீந்திரன்.


Advertisement

யார் இவர்?

கேரளாவின் கண்ணூர் மாவட்டத்தில் உள்ள ஆழிக்கோடு கிராமத்தில் 1980களில் பிறந்தவர்தான் ரவீந்திரன். அவரது அப்பா, அம்மா என பெற்றோர்கள் இருவருமே ஆசிரியர்கள். அதே கிராமத்தில் இருந்த பள்ளியில் ஆரம்பக் கல்வியை மலையாள மொழியில் கற்றார். 

image


Advertisement

‘அவன் ஸ்கூல் படிக்கிறப்போ கிளாஸ்ல இருந்த நேரத்தவிட கிரவுண்டுல இருந்த நேரம்தான் அதிகம்’ என்கின்றனர் அவரது பள்ளித் தோழர்கள். அந்தளவிற்கு ரவீந்திரனுக்கு விளையாட்டு என்றால் கொள்ளை இஷ்டமாம். கிரிக்கெட், புட்பால், டேபிள் டென்னிஸ், பேட்மிண்டன் என ரகம் ரகமாக விளையாட்டை ரசித்து விளையாடுவாராம். அவரது விளையாட்டு ஆர்வத்திற்கு பெற்றோர்களும் தடா போடாமல் இருந்துள்ளனர். 

image

பள்ளிப் படிப்பை முடித்ததும் கண்ணூரில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் மெக்கானிக்கல் இன்ஜினியராக பட்டம் பெற்ற அவருக்கு வெளிநாடுகளில் லட்சங்களில் சம்பளம் கிடைக்க அங்கு பறந்தார். 2004 வாக்கில் விடுமுறைக்காக ஊர் திரும்பியவர் தன் நண்பர்களோடு தங்கியுள்ளார். அந்த சமயத்தில் அவரது தோஸ்துகள் எல்லாம் CAT தேர்விற்கு தயாராகிக் கொண்டிருந்தனர். ரவீந்திரன் கணக்கு பாடத்தில் வல்லவர் என்பதால் அவரிடம் தங்களது சந்தேகங்களை நண்பர்கள் கேட்க அவரும் உதவியுள்ளார்.

விளையாட்டாக அந்த வருடம் நடைபெற்ற CAT தேர்வை ரவீந்திரனும் எழுத நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இருந்தாலும் தன் விடைத்தாளை திருத்திய மெஷினில் ஏதோ கோளாறு இருந்திருக்கும் என எண்ணிய அவர் விடுமுறை முடிந்ததும் வேலைக்காக பறந்துள்ளார். ஓராண்டுக்கு பின்னர் மீண்டும் விடுமுறைக்காக வந்த ரவீந்திரன் அந்த ஆண்டும் CAT தேர்வை எழுத அதிலும் சதம் விளாசியுள்ளார். அவரோடு சேர்ந்து பயின்ற நண்பர்களும் நல்ல மதிப்பெண்களை பெற்றிருந்தனர். 

image

‘உன் திறமைக்கும், புத்திசாலிதனத்திற்கும் நீ வேலை செய்ய வேண்டியது வெளிநாட்டில் இல்லை, இந்தியாவில்’ என நண்பர்கள் நம்பிக்கை கொடுக்க தொழில்முனைவோராக களத்தில் இறங்கினார் ரவீந்திரன். 

பெங்களுருவில் இருந்த தன் நண்பன் வீட்டின் மொட்டை மாடியில் போட்டித் தேர்வுகளை கிராக் செய்ய விரும்பிய சில மாணவர்களுக்கு பயிற்சி கொடுத்துள்ளார். அவரது ஜீனிலேயே கலந்து இருந்த ஆசிரியர் வெளியே எட்டிப்பார்த்த சமயம் அது. ஆரம்ப நாட்களில் மாணவர்களிடம் சன்மானம் எதையும் எதிர்பார்க்காத அவர் ஒரு கட்டத்தில் மாணவர்களின் அன்பு தொல்லைகளுக்கு இணங்க கல்விக் கட்டணத்தை பெற்றுள்ளார். நாளடைவில் வாய் மொழியாகவும், செவி வழியாகவும் ரவீந்திரனின் பயிற்சிப் பட்டறை குறித்து கேள்விப்பட்ட மாணவர்கள் பலர் அவரிடம் பயிற்சிக்காக சேர்ந்துள்ளனர். 

image

நண்பர் வீட்டு மொட்டை மாடியில் இருந்து வகுப்பறைக்கு மாறி அங்கும் இடப் பற்றாக்குறை ஏற்பட்டதால் ஆடிட்டோரியம் ஒன்றை வாடகைக்கு எடுத்து வகுப்புகளை மாணவர்களுக்கு நடத்தியுள்ளார். அவரது பயிற்சி நுணுக்கங்களும், பயிற்சி கொடுக்கும் முறையும் மற்ற ஆசிரியர்களிடமிருந்து வேறுபட்டு இருக்க இந்தியா முழுவதும் இருந்த போட்டி தேர்வர்கள் பலரை ஈர்த்திருந்தது. அதன் விளைவாக டெல்லி, மும்பை, புனே, சென்னை, பெங்களூரு என ஆகாய மார்க்கமாக பல நகரங்களுக்கு பறந்து பறந்து மாணவர்களுக்கு பயிற்சி கொடுத்து தேற்றினார். 

image

2009 வாக்கில் டிஜிட்டல் டெக்னாலஜியின் வளர்ச்சியை பார்வையாளனாக நோட்டமிட்ட ரவீந்திரன் அதை தனக்கான களமாக மாற்றிக் கொள்ளும் முயற்சியில் இறங்கினார். அதற்காக போட்டித் தேர்வுகளுக்கான லெக்சர்களை வீடியோவாக பதிவு செய்து, அதை இணையத்தில் தட்டி விட்டுள்ளார். அதை இந்தியாவின் 46-க்கும் மேற்பட்ட நகரங்களில் இருந்த மாணவர்கள் பயன்படுத்தி போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்றுள்ளனர்.

அதன் பிறகுதான் அவரிடம் பயிற்சி பெற்ற மாணவர்களில் ஒருவர் ஆன்லைன் மூலமாக வகுப்பெடுக்கும் ஐடியாவை ரவீந்திரனிடம் சொல்லியுள்ளார். அது ரவீந்திரனுக்கு பிடித்துபோக தன் மாணவர்களை டீமாக ஃபார்ம் செய்து ‘THINK & LEARN’ என்ற ஸ்டார்ட் அப் நிறுவனத்தை உருவாக்கி, அதற்கான வேலைகளை ஆரம்பித்துள்ளார். அதோடு நிறுத்தி விடாமல் போட்டித் தேர்வுகளுக்கு மட்டுமே பயிற்சி கொடுத்து வந்த வேலையை மட்டும் செய்யாமல், பள்ளி, கல்லூரி என அனைத்து மாணவர்களுக்குமான ஸ்டெடி மெட்டீரியல்களை ஆன்லைனில் எந்நேரமும் மாணவர்களின் கைகளுக்கு கிடைக்கும் வகையில் மொபைல் அப்ளிகேஷனை உருவாக்கும் முயற்சியில் இறங்கினார். 

image

‘பள்ளிக்கூடத்தில் படிக்கின்றபோதே மாணவர்களுக்கு அவர்கள் கற்கும் பாடங்கள் குறித்து தெளிவுகள் இருக்க வேண்டும். அப்போதுதான் போட்டி தேர்வுகளில் அவர்களால் சிறப்பாக செயல்பட முடியும்’ என சொல்லி 2015இல் அனைத்து மாணவர்களுக்குமான பைஜூஸ் மொபைல் அப்ளிகேஷனை லாஞ்ச் செய்தார் ரவீந்திரன்.  

அனைத்து விதமான மொபைல் இயங்கு தளங்களிலும் இன்ஸ்டால் செய்யும் வகையில் பைஜூஸ் அப்ளிகேஷன் வடிவமைக்கப்பட்டிருந்தது. இந்த அப்ளிகேஷனை இலவசமாக டவுன்லோடு செய்து கொள்ளலாம். இதிலுள்ள பாடங்களை அக்சஸ் செய்ய மட்டுமே மாணவர்கள் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும் என புரொமோஷன் கொடுக்கப்பட்டது.

இந்த அப்ளிகேஷனில் ஆசிரியர்கள் சொல்லிக் கொடுக்கும் விஷயங்களையும் கடந்து பல விதமான புதிய வசதிகள் இருந்ததால் மாணவர்கள், பெற்றோர்கள் என எல்லோரிடத்திலும் வரவேற்பை பெற இந்தியாவில் பைஜூஸ் ஹிட்டடித்து, அயல் நாடுகளிலிருந்து முதலீட்டையும் பெற்றது. அந்தக் காரணத்தினால் பல்வேறு மாற்றங்களை மேற்கொண்ட பைஜூஸ் நிறுவனம் உலகளவில் ஸ்மார்டாக கல்வி வழங்கும் நிறுவனங்களில் முன்னோடியாக உள்ளது. சுமார் 70 மில்லியனுக்கும் மேற்பட்டவர்கள் பைஜுஸை பயன்படுத்தி வருகின்றனர். அடுத்தடுத்த நாள்களில் இந்த எண்ணிக்கை மேலும் கூடும் என எதிர்பார்க்கிறார் பைஜூஸின் நிறுவனர் ரவீந்திரன்.

image

2011இல் ஸ்டார்ட் அப் நிறுவனமாக ஆரம்பிக்கப்பட்ட பைஜூஸ் நிறுவனம் இப்போது இந்திய கிரிக்கெட் அணியின் ஜெர்சி ஸ்பான்சர் என்ற அந்தஸ்த்தை பெற்றுள்ளது. கல்வியை பலர் வியாபாரமாக்கி வருகின்றனர் என்ற குற்றச்சாட்டு எழும் சூழலில், தங்கள் பிள்ளைகளுக்குத் தரமான கல்வி கிடைக்கும் என்ற பெற்றோர்களின் நம்பிக்கையையே தமது பிசினஸ் வெற்றியாகக் கருதி அடுத்தடுத்த முன்னேற்றப் பாதையைக் கடக்கிறது பைஜூஸ் நிறுவனம்.


Advertisement

Advertisement
[X] Close