Published : 19,Nov 2020 12:51 PM

அமித் ஷாவின் தமிழக வருகை... பாஜகவின் 'ஸ்கெட்ச்' அதிமுக-வுக்கு?

Special-article-about-amit-sha-come-to-tamilnadu

 

மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டம், திருவள்ளூர் தேர்வாய்க்கண்டிகை நீர்தேக்கத்தை அர்ப்பணித்தல், கோவை - அவினாசி உயர்மட்ட சாலைத் திட்டம் உள்ளிட்ட எட்டு திட்டங்களைத் துவக்கி வைக்கவும், அடிக்கல் நாட்டவும் மத்திய உள்துறை அமைச்சரும், பாஜகவின் முன்னணித் தலைவருமான அமித் ஷா நாளை மறுநாள் (நவ.21) தமிழகம் வருகிறார். இதில், அதிகாரபூர்வமாகத் தெரிவிக்கப்படாத இன்னொரு திட்டமும் இருக்கிறது. அது, அரசியல் திட்டம்!

'தேர்தல் வியூகம்', 'அரசியல் சாணக்கியத்தனம்' தொடங்கி, ஒரு மாநிலத்தில் ஆட்சியைக் கவிழ்த்து தாமரையை மலரச் செய்ய எந்த லெவலுக்கும் செல்பவர் என்று அரசியல் பார்வையாளர்களால் கருதப்படுபவர் அமித் ஷா. சமீபத்தில், பீகார் தேர்தலில்கூட நிதிஷ் குமார் தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்று, அவருக்கே பயத்தை உண்டாக்கக் காரணமானவர். ஆம், நிதிஷ் குமார் கட்சியைவிட பாஜக அந்த மாநிலத்தில் அதிக இடங்களை பிடித்துள்ளதன் பின்புலம் பற்றிதான் பேசுகிறோம்.

image

ராம்விலாஸ் பஸ்வானின் மகன் சிராஜ் பஸ்வானை தனிக்கட்சி தொடங்கவைத்து, அதன் மூலம் நிதிஷ் குமாரின் வாக்கு சதவீதத்தை பாஜக திட்டமிட்டே சரித்தது என்ற கருத்தினை தேர்தல் முடிவுகளுக்கு பின் அரசியல் வல்லுநர்கள் பலரும் முன்வைத்தனர். இதற்கு ஆதாரமாக தேர்தல் பிரச்சாரத்தின்போது நிதிஷ் குமாரை கடுமையாக சாடிய சிராஜ் பஸ்வான், பிரதமர் மோடியை புகழ்ந்துதான் பேசினார். நிதிஷின் ஐக்கிய ஜனதா தளம் 43 இடங்களில் மட்டுமே வென்றுள்ள நிலையில், அதனைவிட 31 இடங்கள் அதிக பெற்று 74 தொகுதிகளுடன் பெரிய கட்சியாக பாஜக உருவெடுத்துள்ளதன் பின்னணியிலும் அமித் ஷா அண்ட் கோ-வின் சமீபத்திய தேர்தல் அரசியல் சாதனை.

தற்போது பாஜகவின் கவனம் தமிழகத்தின் பக்கம் திரும்பியுள்ளது. தமிழகத்தில் அதிமுக - பாஜக கூட்டணி, நாடாளுமன்றத் தேர்தலை சந்தித்த நிலையில், வரும் சட்டப்பேரவைத் தேர்தலிலும் இந்தக் கூட்டணி தொடரும் என இருகட்சிகள் தரப்பிலும் கூறப்படுகிறது. அதேசமயம், வேல் யாத்திரை தொடர்பான பிரச்னையில், அரசின் அனுமதி மறுப்பும், அதனை மீறும் பாஜக நிர்வாகிகள் கைதும் தொடர்கதையாக இருந்து வருகிறது. இது, விரிசல் போக்கு என்றும், திட்டமிட்ட நாடகம் என்றும் இருவேறு பார்வைகளை அரசியல் விமர்சகர்கள் முன்வைக்கின்றனர்.

இந்தப் பின்னணியில்தான், 'அமித் ஷா-வின் வருகை எதிர்கட்சிகளுக்கு பயத்தை உண்டாக்கியுள்ளது' தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் முழங்கினார். அதேநேரத்தில், அமித் ஷாவின் வருகையால் அதிகம் பதறும் கட்சி, ஆளும் அதிமுகதான் என்பதும் இங்கே தெளிவாகத் தெரிவதாக எதிர்க்கட்சி தரப்பினர் முணுமுணுக்கின்றனர்.

image

அமித் ஷா வருகை குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறிய ஸ்டேட்மென்ட்டை முதலில் பார்ப்போம்.

"அமித் ஷா போன்று யார் வேண்டுமானாலும் தமிழகம் வரட்டும், போகட்டும். அவரது கட்சியை வளர்ப்பதற்காக அமித் ஷா வருகிறார். அதுதான் அதிமுகவின் பார்வை. தங்களது கட்சியை பலப்படுத்த தமிழகத்துக்கு அகில இந்திய தலைவர்கள் வருவது இயற்கை. இதற்கும், அதிமுகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எல்லோரும் கூட்டணியில்தான் இருக்கிறோம்" என்றார் ஜெயக்குமார்.

image

இரண்டாவதாக, அமித் ஷா வருகை தருவதற்கு முந்தைய நாளில், அதாவது நாளைக்கு அதிமுக கட்சி ஆலோசனை கூட்டத்தைக் கூட்டியிருப்பதும் தற்செயல் நிகழ்வு அல்ல. அமித் ஷா வருகையையும், பாஜகவையும் எப்படி அணுகுவது என்பதற்கான சில முக்கிய முடிவுகளை எடுப்பதற்கான கூட்டமாகவே பார்க்கலாம் என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

குறிப்பாக, அதிமுகவிடம் அதிக இடங்களைப் பெற்று, தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் மூலம் இங்கே அழுத்தமாகத் தடம் பதிப்பதுதான் பாஜகவின் அரசியல் திட்டமாக இருக்கிறது என்றும், அதை எதிர்கொள்வதில் அதிமுக தலைமை திணறி வருகிறது என்றும் அதிமுக வட்டாரங்கள் கூறுகின்றன.

இந்தப் பின்னணியில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அமித் ஷா சந்தித்து 'அரசியல்' பேச்சுவார்த்தை நடத்தவும் வாய்ப்பு உள்ளது என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

image

இன்னொரு பக்கம், பல கோடி மதிப்புள்ள திட்டங்களைத் துவக்கி வைப்பதன் மூலம், தமிழகத்துக்காக மத்திய பாஜக அரசு நிறையவே செய்கிறது என்று தமிழக மக்களிடம் இமேஜைப் பெறுவதற்கான உத்தியாகவும் அமித் ஷாவின் வருகை பார்க்கப்படுகிறது. இதே மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை நேரில் துவக்கி வைக்கும் உத்திகளை பீகாரிலும் அமித் ஷா டீம் செய்து, பீகார் மக்களிடம் நன்மதிப்பை உயர்த்திக்கொண்டதும் கவனிக்கப்பட வேண்டியது என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

தமிழகம் வரும் அமித் ஷாவுக்கு பாஜகவினர் உற்சாக வரவேற்பு அளிக்க திட்டமிட்டுள்ளனர். தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பாக பாஜக நிர்வாகிகளை சந்தித்து அவர் ஆலோசனை நடத்த உள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன. பாஜகவின் 'மிஷன் தமிழ்நாடு 2021'-க்கான அடித்தளமாகவே இந்தப் பயணம் அமையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

image

இதுகுறித்து பத்திரிகையாளர் ப்ரியனிடம் கேட்டபோது, "அமித் ஷாவின் வருகை அதிமுக - பாஜக கூட்டணி பேச்சுவார்த்தை மட்டும் இல்லாமல், சீட்டு ஒதுக்கீடு குறித்த இறுதி பேச்சுவார்த்தையாகவும் இருக்கலாம் என்று பார்க்கிறேன். கட்சியை பலப்படுத்துவது குறித்தும் அமித் ஷா ஆலோசிப்பார். ஒருவேளை சீட்டு எவ்வளவு ஒதுக்கீடு என்பது குறித்து முடிவு செய்துவிட்டால் அதை வெளியே சொல்லமாட்டார்கள். தேர்தல் நெருங்கும்போதுதான் சொல்வார்கள்" என்றார்.

பத்திரிகையாளர் தராசு ஷ்யாமிடம் கேட்டபோது, "பாஜகவிற்கு அரசியல் நெருக்கடி மக்களவைத் தேர்தல் மூலம் இல்லை. எனவே, தமிழகத்தில் அவர்கள் கூட்டணி வியூகத்திற்குள் போய் சிக்கமாட்டார்கள் என்றுதான் நான் நினைக்கிறேன். அமித் ஷாவின் வருகை மூலமாக பேச்சு மூலமாக அதனை நாம் புரிந்து கொள்ளலாம். கட்சியை வலுப்படுத்துவது தொடர்பாக மட்டுமே அவர் வியூகம் வகுப்பாரே தவிர கட்சி யாரோடு கூட்டணி போகவேண்டும் என்பதை சொல்லவேமாட்டார்" என்றார்.

image


கடந்த நாடாளுமன்றத் தேர்தல் கற்றுக்கொடுத்த பாடங்களுள் ஒன்றாக, பாஜகவை கூட்டணியில் வைத்திருப்பது பெரும் பின்னடைவாக அதிமுக பார்க்கிறது. தமிழக மக்களிடம் பாஜகவுக்கு எதிரான மனநிலை நீடிப்பதே இதற்குக் காரணம். இந்த வேளையில், கூட்டணிக்குள் வைத்திருப்பதுடன் அதிக சீட்டுகள் ஒதுக்கினால், அதுவே வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் எதிர்க்கட்சிக்கு சாதகமாக அமைந்துவிடும் என்றும் அதிமுக அஞ்சுகிறது என்ற அரசியல் கண்ணோட்டத்தையும் சிலர் முன்வைக்கின்றனர்.

'ஒன்று மட்டும் நன்றாகத் தெரிகிறது... அமித் ஷாவின் தமிழக வருகை என்பது எல்.முருகன் கூறுவதுபோல் எதிர்க்கட்சிகளுக்கான 'ஸ்கெட்ச்' அல்ல... அதிமுகவுக்கு' என்று அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

சற்று முன்எடிட்டர் சாய்ஸ்