Published : 17,Nov 2020 09:00 PM
புதிய கெட்டப்பில் தெறிக்கவிடும் சரத்குமார்: பொன்னியின் செல்வன் படத்தின் தோற்றமா?

நடிகர் சரத்குமார் புதிய கெட்டப்பில் இருக்கும் போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது.
நடிகரும் அரசியல்வாதியுமான நடிகர் சரத்குமார் 1986 ஆம் ஆண்டு முதல் சினிமாத்துறையில் நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு என பலப் படங்களில் நடித்திருந்தாலும் சூரியன் படத்தின் மூலம் தமிழின் முன்னணி நடிகரானார். இதுவரை, ஹீரோ, வில்லன், குணச்சித்திர வேடம், திருநங்கை என 130 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு,மலையாளம், கன்னடம் என அனைத்து மொழிகளிலும் இவரது படங்கள் வெளிவந்துள்ளன. இத்தனைப் படங்கள் வெளியாகியும் இதுவரை, சரத்குமார் இதுபோன்ற தெறிக்கவிடும் கெட்டப்பில் இருந்ததில்லை.
ஆனால், இப்போது, அவர் கருப்பு நிற உடையில் நீண்ட தாடியுடன் உடற்பயிற்சி செய்யும் புகைப்படத்தை தீபாவளியன்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். வித்தியாமான ஈர்க்கும் தோற்றத்தில் இருப்பதால், அந்தப் புகைப்படத்தை பலரும் ‘வேற லெவல்… மாஸ் ‘ என்று பகிர்ந்து வருவதோடு, தற்போது சரத்குமார் நடித்துவரும் பொன்னியின் செல்வன் படத்தின் கெட்டப்பா என்றும் ஆவலோடு கேள்வியெழுப்பியுள்ளனர்.
மணிரத்னத்தின் கனவுப்படமான கல்கியின் பொன்னியின் செல்வன் நாவல் பல வருடங்களாக படமாக்க முயற்சி செய்து தற்போதுதான் இயக்கி வருகிறார். மணி ரத்னமும் லைகா நிறுவனமும் பெரும் பொருட்செலவில் இணைந்து தயாரித்து வருகிறார்கள்.
இப்படத்தில், நடிகர் விக்ரம், ஜெயம் ரவி,ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, பிரபு, சரத்குமார், ராய் லட்சுமி உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து வருகின்றனர். இரண்டு பாகமாக தயாராகவுள்ள இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார், என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது, இப்படத்தின் படப்பிடிப்பு நடந்துவரும் நிலையில் சரத்குமாரின் அசத்தல் புகைப்படங்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளன. ஏனென்றால், ஏற்கனவே ஒரு பேட்டியில் சரத்குமார் பொன்னியின் செல்வன் படத்தில் ’எனது தோற்றம், உடைகள், ஒப்பனைகள்’ எல்லாம் குறிப்பிட்ட வகையில் இருக்கவேண்டும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார். பொன்னியின் செல்வன், வரலாற்று படம் என்பதால், சரத்குமார் நீண்ட தாடியுடன் இருக்கும் புகைப்படமும் அதனை உறுதிப்படுத்துவதுபோல் இருக்கிறது.