Published : 14,Nov 2020 06:17 PM

“விஜயின் வாத்தியார் அவதாரம்” - வெளியானது மாஸ்டர் படத்தின் டீஸர்

Vathiyar-incarnation-of-Vijay-Released-is-the-teaser-of-the-master-movie

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது.

கைதி படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் “மாஸ்டர்”. இப்படத்தில் விஜய் கல்லூரி பேராசிரியராக நடித்துள்ளதாகச் சொல்லப்பட்ட நிலையில், படத்தில் அவருக்கு வில்லனாக நடிகர் விஜய்சேதுபதி நடித்துள்ளார்.

image

மாளவிகா மோகனன் நாயகியாக நடித்துள்ள இப்படத்தில் ஷாந்தனு,“கைதி”பட புகழ் அர்ஜூன் தாஸ் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு முன்னதாகவே முடிந்த நிலையில் படத்தை ஏப்ரல் மாதம் வெளியிட படக்குழு திட்டமிட்டிருந்ததாக சொல்லப்பட்டது. அதற்கு ஏற்றார்போல் படத்தின் இசைவெளியீடும் நடந்தது.

அனிருத் இசையமைப்பில் வெளியான அனைத்துப் பாடல்களும் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், “வாத்தி கம்மிங்” பட்டித் தொட்டியெல்லாம் பரவி பட்டையை கிளப்பியது.

ஆனால் எதிர்பாரதவிதமாக கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டன. அதன் காரணமாக பட வெளியீடு தள்ளிப்போனது. இதனிடையே சூர்யாவின் “சூரரைப் போற்று” ஓடிடி தளத்தில் வெளியான நிலையில், மாஸ்டர் படமும் ஓடிடி தளத்தில் வெளியாகுமா என்ற கேள்வி எழுந்தது.

image

ஆனால் விஜய் ரசிகர்கள் மாஸ்டர் படமானது நிச்சயம் திரையரங்கில் மட்டுமே வெளியிடப்பட வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதனைத்தொடர்ந்து பேட்டியளித்த படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜூம் படம் நிச்சயமாக திரையரங்கில் மட்டுமே வெளியாகும் எனக் கூறினார்.

இந்தத் தகவல் விஜய் ரசிகர்களை குஷிப்படுத்திய நிலையில், அடுத்தக்கட்ட நகர்வாக டீஸர் அப்டேட் வேண்டும் என்பதை ரசிகர்கள் ட்விட்டரில் ட்ரெண்ட் செய்தனர். இதனைத்தொடர்ந்து படக்குழு தீபாவளிபண்டிகையான இன்று மாலை 6 மணிக்கு டீஸர் வெளியாகும் எனக் கூறியது. அதன்படி தற்போது மாஸ்டர் படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். அத்துடன் #MasterTeaser என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது.