Published : 12,Nov 2020 06:48 PM

இந்தியாவின் 'டாப்' கொடையாளி அசிம் பிரேம்ஜி... பள்ளிகள் முதல் கொரோனா நிவாரணம் வரை!

From-Schools-to-Corona-Relief-India-s-Top-Donor-Azim-Premji

விப்ரோவின் முன்னாள் தலைவர் அசிம் பிரேம்ஜி 2019-20 நிதியாண்டிற்கான இந்திய கொடையாளிகள் பட்டியலில் மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார். அவரது தொண்டுகளின் பட்டியலின் சுருக்கமான வடிவத்தைப் பார்ப்போம்.

 image

எடெல்கிவ் ஹுருன் இந்தியா ( EdelGive Hurun India) என்கிற அமைப்பு வெளியிட்டுள்ள பட்டியலின்படி, அதிக தொண்டு செய்தவர்களில் மற்ற பணக்காரர்களை பின்னுக்கு தள்ளி அசிம் பிரேம்ஜி முதலிடத்தில் உள்ளார். அவர், தினசரி ரூ.22 கோடியும், வருடத்துக்கு ரூ.7,904 கோடியும் தொண்டுக்காக செலவிட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, கொரோனா நிவாரண முயற்சிகளுக்காக அதிக நிதி அளித்த உலகின் மூன்றாவது பெரிய நன்கொடையாளரும் அசிம் பிரேம்ஜியே. எச்.சி.எல் டெக்னாலஜிஸ் ஷிவ் நாடார் மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் தலைவர் முகேஷ் அம்பானி போன்ற இந்திய பணக்காரர்கள் இவருக்கு அடுத்த இடத்தில்தான் இருக்கின்றனர்.

சில நாள்களுக்கு முன், பிரேம்ஜியின் மகனும், இப்போது விப்ரோவின் தலைவராக இருக்கும் ரிஷாத் ஒரு ட்வீட்டில், "எனது தந்தை எப்போதுமே தான் சேமித்த செல்வத்தின் அறங்காவலர் என்றே தன்னை கருதுகிறார். அவர் ஒருபோதும் அதன் உரிமையாளர் கிடையாது என்று கூறுகிறார். நாங்கள் வாழும் மற்றும் பணிபுரியும் சமூகங்களின் ஒரு பகுதியாக இருப்பது விப்ரோவின் முக்கிய பகுதியாகும்" என நெகிழ்ந்து பேசியுள்ளார்.

image

ஆம், ரிஷாத் சொன்னது போல, ஒருபோதும் தான் சேமித்த சொத்தின் அதிபதியாக தன்னை பார்க்காத மனிதர் பிரேம்ஜி. அவர் தனது தொண்டு பணிகளுக்காக அங்கீகரிக்கப்படுவது இது முதல் முறை அல்ல. 2019 ஆம் ஆண்டு, ஃபோர்ப்ஸ் ஆசியா அவரை 'ஆசியாவின் மிகவும் தாராளமான கொடையாளி' என்று அழைத்தது. பில்லியனர்கள் வாரன் பபெட் மற்றும் பில் கேட்ஸ் தலைமையிலான பிரச்சாரத்தில் 2013 ஆம் ஆண்டில் தொண்டுகளுக்கான உறுதிமொழியில் கையெழுத்திட்ட முதல் இந்தியர் அசிம் பிரேம்ஜி. இதன் கீழ் உலகின் செல்வந்தர்கள் தங்கள் செல்வத்தின் பெரும்பகுதியை தொண்டுக்கு நன்கொடையாக வழங்கினர்.

2020 ஆம் ஆண்டின் முற்பகுதியில், கோவிட்-19 நிவாரணப் பணிகளுக்கு உலகின் மூன்றாவது பெரிய நன்கொடை அசிம் பிரேம்ஜி என்று ஃபோர்ப்ஸ் அறிவித்தது. விப்ரோ, விப்ரோ எண்டர்பிரைசஸ் மற்றும் அஸிம் பிரேம்ஜி அறக்கட்டளை இணைந்து நிவாரணப் பணிகளுக்காக ரூ.1,125 கோடியை நன்கொடையாக அளித்தன.

image

அசிம் பிரேம்ஜி தனது தந்தையின் மறைவுக்குப் பிறகு விப்ரோவின் பொறுப்பேற்றபோது அவருக்கு 21 வயது. அந்த வயதிலேயே அறக்கட்டளை மற்றும் தொண்டு பணிகளை தொடங்கிவிட்டார். அப்போது அவரது நிறுவனம் ஹைட்ரஜனேற்றப்பட்ட எண்ணெய் உற்பத்தியில் ஈடுபட்டது. ஆனால், 1980-களின் முற்பகுதியில், கணினி வன்பொருள் மற்றும் மென்பொருளை தயாரிப்பதன் மூலம் பிரேம்ஜி தொழில்நுட்பத் துறைக்கு முன்னிலை வகித்தார். விப்ரோ, நிறுவனம் இந்தியாவில் தகவல் தொழில்நுட்பத்தில் முன்னோடியாக மாறிய 200-0ம் ஆண்டில், ஆரம்பகால கல்வி முறைகளை மையமாகக் கொண்டு கிராமப்புறங்களில் உள்ள அரசு பள்ளிகளுடன் இணைந்து சீர்திருத்த முயற்சிகளை மேற்கொண்டது.

2001-ம் ஆண்டில், அசிம் பிரேம்ஜி அறக்கட்டளை அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்பட்டது. இதன்பின் நாட்டில் கல்வியின் தரத்தை மேம்படுத்த பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவதன் மூலம் அந்த அறக்கட்டளையின் அடித்தளம் தொடங்கியது. நீண்டகால தாக்கத்திற்காக, உள்ளூர் அரசாங்க கட்டமைப்புகளுடன் ஒத்துழைக்கத் தொடங்கியது. அதன்படி, பல மாவட்டங்களில் கிளை தொண்டு நிறுவனங்களை அமைத்தது. தற்போது, இது கர்நாடகா, ராஜஸ்தான், உத்தராகண்ட், சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், தெலுங்கானா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் 40-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கிளை தொண்டு நிறுவனங்களை கொண்டுள்ளது.

image

பாடத்திட்ட சீர்திருத்தம், பள்ளி பாடநூல் மேம்பாடு, ஆசிரியர்களின் திறன் மேம்பாடு மற்றும் கல்விச் செயற்பாட்டாளர்கள் ஆகிய மேம்பாடுகளில் நாடு முழுவதும் உள்ள பல மாநில அரசாங்கங்களுடன் இந்த அறக்கட்டளை இணைந்து கவனம் செலுத்திவருகிறது. நியாயமான, சமமான, மனிதாபிமான மற்றும் நிலையான சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டு பாதிக்கப்படக்கூடிய குழுக்களுடன் இணைந்து அசிம் பிரேம்ஜி தொண்டுகளும் செய்து வருகிறார். பொருளாதார மற்றும் சமூக இழப்பை எதிர்கொள்ளும் ஏழை சமூகங்கள் பயன்பெறும் வகையில் அவரின் தொண்டுகள் வழங்கப்பட்டு வருகின்றது.

அதன்படி, இடைநிலை கற்றல், கல்வியை நிறுத்தி 18 வயதிற்கு முன்பே திருமணம் செய்து கொண்ட பெண்களை மீட்பது, அவர்களுக்கு தேவையான கல்வி, வாழ்க்கைத் திறன்களை மேம்பாடு செய்வது போன்ற பணிகளை தொண்டு நிறுவனங்கள் மூலம் நிதி அளித்து செயல்படுத்தி வருகிறார் பிரேம்ஜி. வீடற்ற நபர்கள், சிறு மற்றும் குறு விவசாயிகள், மாற்றுத்திறனாளிகள், தெரு குழந்தைகள் மற்றும் வீட்டு வன்முறையில் இருந்து தப்பியவர்கள் ஆகியோருக்கான மேம்பாடும் இந்த தொண்டு நிறுவனங்கள் மேற்கொள்கிறது.

image

2013-ல் உத்தராகண்ட் வெள்ளம் பேரழிவிற்கு ஆளானபோது, நிவாரண முயற்சிகளை அணிதிரட்ட உதவிய தொண்டு நிறுவனங்களில் அசிம் பிரேம்ஜி அறக்கட்டளை இருந்தது. 2015-ம் ஆண்டில், பிரேம்ஜி விப்ரோவில் தனது பங்குகளில் கூடுதலாக 18 சதவீதத்தை தொண்டுக்காக வழங்கினார், இதனால் தனது பங்குகளில் 39 சதவீதத்தை (கிட்டத்தட்ட ரூ.53,284 கோடி) தொண்டுக்காக வழங்கிய நபராக பிரேம்ஜி திகழ்கிறார்.

சற்று முன்எடிட்டர் சாய்ஸ்