[X] Close

'சூரரைப் போற்று' திரை விமர்சனம்: சிலிர்ப்பூட்டும் பொழுதுபோக்கு சினிமா!

சினிமா,சிறப்புக் களம்

Soorarai-pottru-released-on-OTT-how-is-the-movie

கொரோனா பாதிப்பு... தியேட்டர்கள் மூடல் போன்ற பிரச்னைகளால் சரியாக லேண்டிங் சிக்னல் கிடைக்காமல் காத்திருந்த சூரரைப் போற்று திரைப்படம் வெற்றிகரமாக அமேசான் OTT யில் தரையிறங்கி இருக்கிறது.


Advertisement

 

 


Advertisement

image
சூர்யா தயாரித்து நடித்திருக்கும் இப்படத்தை சுதா கொங்கரா இயக்கியிருக்கிறார். சூர்யா, அபர்னா பாலமுரளி, ஊர்வசி, காளி வெங்கட், கருணாஸ் உள்ளிட்டோர் நடித்திருக்கும் இத்திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்குப் பிறகு இன்று வெளியாகியிருக்கிறது.

மதுரை மாவட்டம் சோழவந்தானில் வசிக்கும் எளிய ஆசிரியரின் மகன் நெடுமாறன் ராஜாங்கமாக வருகிறார் சூர்யா. இந்தியாவின் கடைக்கோடி குடிமகனும் விமானத்தில் பறக்க வேண்டும். ஏழை முதல் பணக்காரன் வரை எல்லோரையும் விமானத்தில் பறக்க வைக்க வேண்டும் என்பதே நெடுமாறன் ராஜாங்கத்தின் கனவு. 

image


Advertisement


சூர்யாவின் இந்த கனவிற்கு பக்கபலமாக உடனிருந்து டேக் ஆஃப் கியரை தட்டி உற்சாகப்படுத்துகிறார் மாறனின் மனைவி சுந்தரியாக நடித்திருக்கும் அபர்னா பாலமுரளி. சுந்தரிக்கு தான் ஒரு பேக்கரி முதலாளியாக வேண்டும் என்பதே ஆசை. இவ்விருவரும் ஒருவரின் கனவிற்கு ஒருவர் துணையாக இருந்து எப்படி? வெற்றிவானில் பறந்தார்களா? என்பதே ஷாலினி உஷா தேவியுடன் இணைந்து சுதா கொங்கரா அமைத்திருக்கும் திரைக்கதை.

தன் சொந்த ஊரான சோழவந்தானுக்கு மின்சாரம் கொண்டுவரவும், அவ்வூரில் ரயில்கள் நின்று செல்லவும் அரசாங்கத்திற்கு மனு எழுதிப் போட்டு அகிம்சை வழியில் முயல்பவர் மாறனின் தந்தை ராஜாங்கம். ஊர் நன்மைக்காக மகன் எடுக்கும் சில அதிரடி முடிவுகளால் தந்தைக்கும் மகனுக்கும் இடையே மனக்கசப்புகள் உருவாக வெளியூர் சென்று விமான அகாடமியில் இணைகிறார் சூர்யா. பிறகு ஒரு துயர நிகழ்வு சூர்யாவை குறைந்த விலையில் விமான சேவை வழங்கும் நிறுவனத்தை துவங்கத் தூண்டுகிறது.

 

image


20,000 ரூபாய் வரை விற்றுக் கொண்டிருந்த உள்நாட்டு விமான டிக்கெட்டுகளை 1000 ரூபாய்க்கு ஏன் ஒரு ரூபாய்க்கு கூட விற்க முடியும் என நம்புகிறார் சூர்யா. தனது முதல் விமானத்தை வாங்க வங்கி வங்கியாக ஏறி இறங்கும் சூர்யாவிற்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது. மேலும் ஏற்னெனவே ஏவியேசன் தொழிலில் இருக்கும் பெரு நிறுவனங்கள் சூர்யாவிற்கு முடிந்த வரை இடையூறு செய்கின்றன. என்றாலும் நெடுமாறன் ராஜாங்கம் எப்படி அனைத்து தடைகளையும் உடைத்து எளிய மக்களுக்கான சிறகுகளை நீல வானில் வரைந்தார் என்பதே சிலிர்ப்பூட்டும் திரைக்கதை.


நிகித் பொம்மி ரெட்டியின் ஒளிப்பதிவு கதைக்கு ஏற்றார்போல மிகச் சிறப்பாக அமைந்துள்ளது. ஜிவி பிரகாஷ் இசையமைப்பில் பாடல்கள் ஒவ்வொன்றும் அருமை. ஏகாதசி எழுதி செந்தில் கணேஷ் பாடியிருக்கும் ‘மண்ணுருண்ட மேல இங்க மனுச பய ஆட்டம் பாரு’ பாடல் நெத்தியடி தத்துவம். இப்படத்திற்காக சுதா கொங்கரா தேர்வு செய்திருக்கும் கதாபாத்திரம் ஒவ்வொன்றும் ரொம்பவே பொருத்தம். சூர்யாவின் நடிப்பு இப்படத்தில் ரொம்பவே அருமை. 

image


இதுவரை பார்க்காத சூர்யாவை நாம் திரையில் பார்க்க முடியும். வில்லனாக வரும் பரேஷ் ராவலின் உடல் மொழி நேர்த்தி. கருணாஸ், ஊர்வசி, காளி வெங்கட் என அனைவரையும் சரியாக தேர்வு செய்து பயன்படுத்தி இருக்கிறார். ஆனால் சுதா கொங்கராவால் எவ்வளவு முயன்றும் அசல் மதுரை மண்ணின் வட்டாரத் தன்மையினை, அசல் மொழி வழக்கை திரையில் கொண்டு வர முடியவில்லை. இக்கதைக்கும் வட்டாரத் தன்மைக்கும் தொடர்பு இல்லை என்றாலும் கூட இது ஓர் உறுத்தலாகவே இருக்கிறது.

குடியரசுத் தலைவரை சூர்யா சந்திக்கும் காட்சி சுத்த போலித்தனம். டெக்கான் ஏர்லைன்ஸ் நிறுவனர் ஜி.ஆர். கோபிநாத்தின் வாழ்க்கையினைத் தழுவி ஒரு திரைக்கதை எழுதும்போது அதில் தன் சொந்த கற்பனைகளுக்கான எல்லை என ஒன்றை வகுத்திருக்கலாம் சுதா கொங்கரா. தாம்பரம் விமான படைத்தளத்தில் சூர்யா அசால்ட்டாக விமானத்தை தரையிறக்கும் காட்சியும் கூட இதே போலித் தன்மையினை உணரவைக்கிறது. 

image


இக்கதையின் பின்னணியில் இருக்கும் உண்மை நாயகன் கேப்டன் கோபிநாத் தனது மூன்று நண்பர்களுடன் இணைந்து ஏர் டெக்கான் என்ற நிறுவனத்தை துவங்கினார். அது இந்திய விமானத்துறை வரலாற்றையே மாற்றி எழுதியது. கோபிநாத் ஒரு ரூபாய்க்கு இந்தியர்களை விமானத்தில் பறக்கச் செய்தார். இதன் மூலம் இரண்டே வருடங்களில் 20 மில்லியன் பேர் தனது முதல் விமானப் பயண அனுபவத்தைப் பெற முடிந்தது. பல விமானங்களில் இன்று முதல் வகுப்பு இரண்டாம் வகுப்பு என்ற பொருளாதார பாகுபாடுகள் இல்லை. இத்தகைய பொருளாதார பிரிவினையை விமானத் துறையில் முதன் முதலில் அடித்து உடைத்தவர் கோபிநாத்.

அதுமட்டுமல்ல ஏர் டெக்கான் துவங்கப்பட்ட முதல் மூன்று ஆண்டுகளில் இந்நிறுவனத்திற்குச் சொந்தமாக 45 விமானங்கள் பறந்தன. ஒரே நாளில் ஏர் டெக்கான் விமான சேவையினை 25,000 பேர் பயன்படுத்தினர். 67 விமான நிலையங்களுக்கு ஏர் டெக்கான் விமானங்கள் ஒரு நாளில் பறந்தன. 70 சதவிகித நடுத்தர குடும்பத்து மக்களால் விமானத்தை பயன்படுத்த முடிந்தது என்றால் அதற்கு காரணம் கோபிநாத் மற்றும் கோபிநாத்தின் மனைவி பார்க்கவி நடத்தி வந்த the bun world பேக்கரி.இதன் மூலம் ஏர் டெக்கான் விமானிகளுக்கு உணவு சேவை வழங்கினார். முதல் வருடத்திலேயே 7 கோடி ரூபாய் வரை லாபம் ஈட்டினார்.

 

image


கோபிநாத் தன் கனவு நிறுவனத்தின் மூலம் சுமார் 3 மில்லியன் இந்தியர்களை ஒரு ரூபாய்க்கு பறக்க வைத்தார். இப்படி கேப்டன் கோபிநாத் குறித்து அசத்தலான பல விசயங்களைச் சொல்லிச் செல்லலாம் என்றாலும் இவை அனைத்தும் வெறும் தகவல்களாக End Cardல் மட்டும் Scroll ஆவது ஏமாற்றம். இவற்றை அழுத்தமாக சுதா கொங்கரா சினிமாவாக்கத் தவறிவிட்டார். ஏவியேசன் நாயகன் கோபிநாத்தை இன்னுமே சிறப்பாக பதிவு செய்திருக்கலாம்.

சுதா கொங்கரா கமர்ஸியலாக இப்படம் தோற்றுவிடக் கூடாது என்பதில் அதிக கவனம் செலுத்தியிருக்கிறார் எனத் தெரிகிறது. அதனால் தான் ஒரு வெற்றியாளரின் வாழ்க்கை வரலாற்றுப் படம் ஒரு சாதாரண கமர்ஸியல் ட்ராமாவாக, ஹீரோ வில்லன் மோதலாக முடிந்திருக்கிறது.

கமர்ஸியல் விரும்பிகளுக்கு நிச்சயம் இது ஒரு நல்ல பொழுது போக்கு சினிமாவாக இருக்கும் என்றாலும் சுதா கொங்கராவின் கனவுத் திரைப்படமான சூரரைப் போற்று திரைப்படத்திற்கு அவர் வழங்கி இருக்கும் உழைப்பும், அதனை தாங்கிப் பறந்திருக்கும் சூர்யாவின் நடிப்பும் படத்தை அனைத்து கோணங்களிலும் பேலன்ஸ் செய்கிறது.


Advertisement

Advertisement
[X] Close