Published : 10,Nov 2020 08:14 PM
“நாங்கள் வெற்றி பெறுவோம்” - ட்ரம்ப் அதிரடி ட்வீட்

சமீபத்தில் நடந்த அமெரிக்க அதிபருக்கான தேர்தலில் தோல்வி அடைந்த அதிபர் ட்ரம்ப் “நாங்கள் வெற்றி பெறுவோம்” என்று அறிவித்துள்ளது, அவரது கட்சியினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
உலகிலேயே ஆதிக்கம் நிறைந்த ஒரு பதவி என்றால், அது அமெரிக்க அதிபர் பதவிதான். உலக நாடுகளை ஆட்டிப் படைக்கும் பதவியும் அதுவே. தங்கள் நாடுகளுக்கு அமெரிக்க அதிபரின் காலடி படாதா என்று ஏங்கிக்கிடக்கும் நாடுகளும் உண்டு. அப்படி வந்தால், அதையே பெருமையாக கொண்டாடும் நாடுகளும் இருக்கின்றன. அப்படியொரு, உலகின் முக்கியமான பதவியான அமெரிக்க அதிபருக்கான தேர்தல் கடந்த நவம்பர் 3 ஆம் தேதி நடந்தது. அதில், கடந்த நான்கு வருடமாக இருந்த குடியரசுக் கட்சியைச் சேர்ந்த அதிபர் ட்ரம்பும், ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஜோ பைடனும் அதிபர் வேட்பாளர் பதவிக்கு போட்டியிட்டனர்.
அதில், 290 பிரதிநிதிகளின் வாக்குகளைப் பெற்று அதிபர் போட்டியில் வெற்றி பெற்ற ஜோ பைடன், அமெரிக்காவின் வயதான அதிபர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். ட்ரம்ப் 214 பிரதிநிதிகளின் வாக்குகளை மட்டுமே பெற்று தோல்வியுற்றார். ’ஜோ பைடன் தன்னை மோசடி செய்து வெற்றி பெற்றுவிட்டார். நீதிமன்றம் செல்வேன்’ என்று தற்போதுவரை குற்றம் சாட்டிவரும் ட்ரம்ப், தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில், ’நாங்கள் வெற்றி பெறுவோம்’ என்று கூறியிருப்பது அவரது ஆதரவாளர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
ஆனால், நீதிமன்ற முறையீட்டில் வெற்றி பெறுவாரா? அல்லது நான்கு ஆண்டுகள் கழித்து வரும் அமெரிக்க தேர்தலில் வெற்றி பெறுவாரா என்பது குறித்து தெளிவாக குறிப்பிடாததால் குழப்பமும் ஏற்பட்டுள்ளது.