[X] Close

இனிதான் ஆட்டமே இருக்கு.. - பற்றி எரியும் சின்னப்பம்பட்டி தீப்பொறி..!

விளையாட்டு,சிறப்புக் களம்

Yorker-King-Natarajan-grew-to-become-King-of-Hearts

 


Advertisement

தமிழக கிரிக்கெட் ரசிகர்களை மட்டுமல்ல. இந்திய ரசிகர்களை, ஏன்..? உலக கிரிக்கெட் ரசிகர்களையும் தன் பக்கம் ஈர்த்துள்ளார். நம்ம ஊர் பையன் நடராஜன். என்னதான் ஆஸ்திரேலிய பந்துவீச்சாளராக இருந்தாலும் பிரட்லீக்கு இந்தியாவில் மிகப்பெரிய ரசிகர் வட்டம் உண்டு. அதேபோல் ஸ்டெயினுக்கும் ஒரு ரசிகர்கள் கூட்டம் உண்டு. இப்படியாக தற்போது நடராஜனுக்கும் உலக அளவில் ரசிகர்கள் கூட்டம் உருவாகிக் கொண்டே இருக்கிறது.

image


Advertisement

நடராஜன் என்னும் எரிமலை தீப்பொறியாய் உருவானது சேலத்தில் என்பது தமிழர்களுக்கே பெருமை. அந்த தீப்பொறியை கண்டெடுத்த பெருமை ஐபிஎல்க்கே சேரும். ஐபிஎல் இல்லாவிட்டால் நடராஜனை நமக்கு தெரிந்திருக்க வாய்ப்பு உண்டா என்பது சந்தேகம்தான்.

உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேனான டிவில்லியர்சை நிலைகுலைய வைத்த ஒரு பந்தை கடந்த ஆர்சிபி-ஹைதராபாத் போட்டியின்போது வீசி பார்ப்பவரை அசரவைத்தார் நடராஜன். எப்படி போட்டாலும் அடிப்பார் டிவில்லியர்ஸ் என்பதுதான் கிரிக்கெட் கண்ட வரலாறு. அவரையே அலறவிட்டு நடு ஸ்டெம்பை தனியாக பிடிங்கிப்போட்டது நடராஜனின் யார்க்கர். அந்தப்பந்தில் நிச்சயம் யாராக இருந்தாலும் தடுமாறித்தான் போய் இருப்பார்கள். அப்படி ஒரு யார்க்கர் என பேசிக்கொண்டது கிரிக்கெட் உலகம். டிவில்லியர்ஸ், தோனி என நடராஜன் எடுத்த விக்கெட் எல்லாம் டான் தான்.

 


Advertisement

ஐபிஎல் தொடக்கம் முதலே பலரின் கவனத்தையும் ஈர்த்தார் நடராஜன். உலகின் மிகச்சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரான ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் பிரெட் லீ நடராஜனை ஐபிஎல் தொடரின் ஆரம்பத்திலேயே புகழ்ந்தார். சேவாக், யுவராஜ் சிங் என நடராஜனை பலரும் கண்டுகொண்டு புகழ்ந்தார்கள். இந்த பையனிடம் ஏதோ இருக்குப்பா என்று ஜாம்பவான்களையும் பேச வைத்த நடராஜனின் பின்னால் இருப்பது கிரிக்கெட் வெறியும், அதற்கான உழைப்பும்.

ஏழ்மையான குடும்பம். அப்பா நெசவு தொழிலாளி. அம்மா சாலையோரம் சிக்கன் கடை நடத்துபவர். சேலத்தில் இருந்து 36 கிமீ சென்றால் இருக்கிறது சின்னப்பம்பட்டி என்கிற கிராமம். இந்த அக்னிக்குஞ்சு உருவானது அங்குதான். ஏழ்மையில் இருப்பவர்கள் கனவை துரத்திப்பிடிப்பது என்பது அவ்வளவு எளிதானது அல்ல. உங்கள் கனவு பாலத்தை தகர்க்க தினம் தினம் வெடிகுண்டுகள் வந்து விழும். அதனைத் தாண்டி ஓடுபவர்களே வெற்றியை சென்றடைவார்கள். இன்று வெற்றியை நோக்கி நெருங்கி சென்றுகொண்டே இருக்கிறார் நடராஜன். பொழுதுபோக்கு என்பதைத் தாண்டி இந்த ஐபிஎல், வருடத்திற்கு புதிதாக இந்திய அணிக்கு யாரையாவது கொண்டு வந்து சேர்க்க வேண்டும் என்பது பல கிரிக்கெட் ரசிகர்களின் எண்ணம். அப்படி இந்த வருடம் சிலரை இந்திய அணிக்கு அறிமுகம் செய்துள்ளது ஐபிஎல். அதில் மிக முக்கியமானவர் நடராஜன். யார்க்கர் நடராஜன்.

imageimage

இந்திய அணி நீண்ட நாட்களாக தேடிக்கொண்டிருந்த ஒரு வேகம். ஒரு யார்க்கர். நடராஜனின் கையில் தான் இருந்திருக்கிறது என்பது மறுக்கமுடியாத உண்மை. ஐபிஎல் முடிந்துவிட்டது. இனி இந்த வருடம் நடராஜன் ஐபிஎல்லில் விளையாட மாட்டார். ஹைதராபாத் ஜெர்சியில் இருக்க மாட்டார். ஆனால் அவர் இந்திய ஜெர்சியில் இருக்கப்போகிறார். இந்திய அணிக்காக விளையாட போகிறார். யூஏஇயில் நடராஜனுக்கு ஐபிஎல் ஆட்டம் முடிந்துவிட்டது தான். ஆனால் இனி தான் நடராஜனின் கிரிக்கெட் ஆட்டம் தொடங்க இருக்கிறது. வாங்க நடராஜன்.. சிட்னியில் சந்திப்போம் என்பதே கிரிக்கெட் ரசிகர்களின் வாழ்த்துச் செய்தி.. நடராஜன் பந்துகளுக்காக பிடுங்கிச் சாயும் ஸ்டெம்புகள் காத்துக்கொண்டு இருக்கின்றன.

 


Advertisement

Advertisement
[X] Close