தமிழ்வழியில் தொலைதூரக்கல்வி... பல்கலைக்கழகங்களுக்கு நோட்டீஸ் அனுப்பிய உயர்நீதிமன்றம்..!

தமிழ்வழியில் தொலைதூரக்கல்வி... பல்கலைக்கழகங்களுக்கு நோட்டீஸ் அனுப்பிய உயர்நீதிமன்றம்..!
தமிழ்வழியில் தொலைதூரக்கல்வி... பல்கலைக்கழகங்களுக்கு நோட்டீஸ் அனுப்பிய உயர்நீதிமன்றம்..!

தமிழகத்தில் தமிழ்வழியில் தொலைதூரக்கல்வி உள்ள அனைத்து பல்கலைக் கழகங்களுக்கும் நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு. தமிழ் வழியில் பயின்றதற்கான இட ஒதுக்கீட்டை முறைப்படுத்தும் வரை குரூப் 1 தேர்வு நடைமுறைக்கு தடை கோரிய வழக்கில் உத்தரவு பிறப்பித்துள்ளது.


மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்த சக்தி ராவ் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுவை தாக்கல் செய்திருந்தார். அதில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் 2019 ஜனவரி 1-ல் துணை ஆட்சியர், டிஎஸ்பி, உள்ளிட்ட 181 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுத்தது. அதற்கு விண்ணப்பித்து, முதல்நிலைத் தேர்வு, எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றேன். அதைத்தொடர்ந்து வெளியிடப்பட்ட நேர்முகத் தேர்வு பட்டியலில் எனது பெயர் இடம்பெறவில்லை.


தமிழ்வழியில் கல்வி பயின்றதற்கான ஒதுக்கீட்டிலும் நான் தேர்வு செய்யப்படவில்லை. விதிப்படி தமிழ் வழியில் கல்வி பயின்றவருக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு பின்பற்றப்பட்டுள்ளது. அந்த இட ஒதுக்கீட்டை பெறுவதற்கு நான் தகுதியானவராக இருப்பினும் எனக்கு அந்த சலுகை வழங்கப்படவில்லை. இதுகுறித்து விசாரித்தபோது தமிழ்வழியில் கல்வி பயின்றதற்கான இட ஒதுக்கீட்டு சலுகை, தொலைநிலை கல்வியில் பயின்றவருக்கும் வழங்கப்பட்டிருப்பது தெரியவந்தது. தொலைநிலைக் கல்வி பயின்றவர்களுக்கு தமிழ் வழியில் பயின்றதற்கான இட ஒதுக்கீடு வழங்குவது பொருத்தமாக இருக்காது.


இது தொடர்பாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தகவல் கேட்டபோது எவ்வித தகவலையும் வழங்கவில்லை. TNPC-யின் ஒவ்வொரு தேர்வு அறிவிப்பிலும் தமிழ் வழியில் பயின்றவருக்கு கொடுக்கப்படும் 20 சதவிகித இட ஒதுக்கீட்டை பெரும்பாலும் தொலைநிலை கல்வி பயின்றவர்களே பெற்று வருகின்றனர். ஆகவே, தமிழ் வழியில் பயின்றதற்கான இட ஒதுக்கீட்டை முறைப்படுத்தும் வரை குரூப் 1 தேர்வு நடைமுறைக்கு தடை விதிக்க வேண்டும் என கூறியிருந்தார்.

 இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு, தமிழகத்தில், தமிழ்வழியில் தொலைதூரக்கல்வி உள்ள மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம் பாரதிதாசன் பல்கலைக்கழகம் உள்பட அனைத்து பல்கலைக் கழகங்களையும் எதிர் மனுதாரர்களாக சேர்த்தும், தொலைதூர கல்வியில் தமிழ்வழி கல்வி குறித்து பதிலளிக்கவும் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com