[X] Close

10 செயற்கைக்கோள்களுடன் இன்று விண்ணில் பாய்கிறது இஸ்ரோவின் பிஎஸ்எல்வி சி-49 ராக்கெட்!

இந்தியா

ISRO-1st-Launch-Since-Covid-Lockdown-Today-Afternoon
26 மணிநேர கவுண்ட்டவுனை முடித்துக்கொண்டு, 10 செயற்கைகோள்களுடன் பி.எஸ்.எல்.வி. சி-49 ராக்கெட் இன்று மாலை விண்ணில் பாய்கிறது.
 
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தால் (இஸ்ரோ), புவி கண்காணிப்பு பணிக்காக உருவாக்கப்பட்ட இ.ஓ.எஸ். 01 என்ற செயற்கைக்கோளை, பிஎஸ்எல்வி சி-49 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டது.
 
இந்த ராக்கெட் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் மையத்தின் முதல் ஏவுதளத்தில் இருந்து இன்று மாலை 3.02 மணிக்கு விண்ணில் ஏவப்பட உள்ளது.
 
இவற்றுடன் பிஎஸ்எல்வி சி-49 ராக்கெட்டில் வணிக ரீதியிலான 9 பன்னாட்டு செயற்கைக்கோள்களும் விண்ணுக்கு அனுப்பப்பட உள்ளது. இதில் லிதுவேனியா நாட்டைச் சேர்ந்த 1 தொழில்நுட்ப கண்டுப்பிடிப்பு செயற்கைக்கோள், லக்சம்பர்க் நாட்டைச் சேர்ந்த கிளியோஸ் ஸ்பேஸின் 4 கடல்சார் பயன்பாட்டு செயற்கைக்கோள்கள் மற்றும் அமெரிக்காவின் 4 லெமூர் செயற்கைக்கோள்களும் அடங்கும்.
 
இந்த 10 செயற்கைகோள்கள் அடங்கிய ராக்கெட் திட்டமிட்டபடி, 26 மணி நேர கவுண்ட்டவுனை முடித்துக்கொண்டு இன்று மாலை விண்ணில் பாய்கிறது.
 
இதற்காக இஸ்ரோ விஞ்ஞானிகள் நேற்று 4-வது நிலைக்கான எரிபொருளை நிரப்பும் பணியை நிறைவு செய்தனர். தொடர்ந்து விஞ்ஞானிகள் ராக்கெட்டின் செயல்பாடுகளை கண்காணித்து வருகின்றனர்.
 
 

Advertisement

Advertisement
[X] Close