Published : 06,Nov 2020 04:17 PM

கொல்லப்பட்ட 7 தமிழர்கள்... மாவோயிஸ்ட் போர்வையில் தமிழர்களைக் குறிவைக்கிறாரா பினராயி?!

Velmurugan-was-killed-in-fake-encounter-in-kerala

கோழிக்கோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பேரழிவுக்கு ஆளான நிலையில் கண்ணம்மா உட்கார்ந்திருக்கிறாள். அங்கு வந்த போலீஸார் கண்ணம்மாவை சவக்கிடங்கு நோக்கி அழைத்துச் செல்கின்றனர். சிறிது நேரத்தில் அழுகை சத்தம் காதை பிளக்கிறது. தனது மகன் வேலுமுருகனின் உடலை அடையாளம் கண்டுகொண்டு வெளியே வந்தார் கண்ணம்மா.

இந்தக் காட்சிகள் எல்லாம் மாவோயிஸ்டு என சந்தேகிக்கப்படும் தமிழகத்தின் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த வேல்முருகன், கேரள காவல்துறையின் தண்டர்போல்ட் படையால் என்கவுன்டரால் கொல்லப்பட்டபிறகு நடந்தவை. தண்டர்போல்ட் படையால் மாவோயிஸ்டுகளுக்கு எதிராக நடத்தப்படும் முதல் என்கவுன்டர் இது அல்ல. தண்டர்போல்ட் படையால் மாவோயிஸ்ட் என சந்தேகிக்கப்பட்டு கொல்லப்பட்ட 8-வது நபர் இந்த வேல்முருகன்.

image

என்கவுன்டர் ஒரு முறை மட்டுமே நடந்திருந்தால், ஒருவர் அதை ஓர் அரிய நிகழ்வாகவும், இரண்டாவது முறையாக நடக்கும்போது தற்செயலாகவும் பார்க்கலாம். ஆனால், அதுவே மூன்றாவது முறையாக நடக்கும்போது, அது ஒரு பழக்கமாக மாறும். ஆம்.. இப்போது சீரியல் என்கவுன்டர்கள் மாவோயிஸ்ட்களுக்கு எதிராக நடத்தப்பட்டு வருகின்றன.

கேரள எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதாலா சமீபத்தில் பேசும்போது, "என்கவுன்டர் கொலைகள் ஒரு கம்யூனிஸ்ட் முதல்வரின் கீழ் நடைபெறுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது" என்றார். அவரின் கூற்று சரிதான். பினராயி விஜயன் அரசாங்கத்தின் கீழ் முதல் என்கவுன்டர் கொலை 2016 நவம்பரில் நடந்தது. குருப்புசுவாமி தேவராஜ் மற்றும் மாவோயிஸ்டுகள் என சந்தேகிக்கப்படும் அஜிதா ஆகிய இருவர் மலாப்புரம் மாவட்டத்தில் நிலம்பூர் காடுகளில் கொல்லப்பட்டனர். அதன்பிறகு 6 என்கவுன்டர்கள்.

image

அதேநேரம் கடந்த முறை காங்கிரஸ் ஆட்சி நடந்தபோது 2015-ல் ஆந்திரா, கர்நாடகா மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களால் மேற்கொள்ளப்பட்ட கூட்டு நடவடிக்கையில் மாவோயிஸ்ட் தலைவரான ரூபேஷ், அவரது மனைவி மற்றும் மூன்று பேரை ஆந்திரப் போலீசார் கைது செய்தனர். காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி அரசு அப்போது மாநிலத்தில் ஆட்சியில் இருந்தது, சென்னிதாலா உள்துறை அமைச்சராக இருந்தார். அப்போது கைது செய்யப்பட்ட ரூபேஷ் இன்னும் சிறையில் உள்ளார். அவருக்கு எதிரான வழக்குகளை சட்டப்பூர்வமாக எதிர்த்து வருகிறார்.

"காங்கிரஸ் ஆட்சியில் மாவோயிஸ்டுகளுக்கு எதிராக மனித உரிமை மீறல்கள் நடைபெறவில்லை. ஆனால், கம்யூனிஸ்ட் ஆட்சியில் அவர்களுக்கு எதிராக மனித உரிமைகள் அப்பட்டமாக மீறப்படுகின்றன. நடந்த என்கவுன்டர்கள் அனைத்தும் என்கவுன்டரே அல்ல. ஜோடிக்கப்பட்ட கொலைகள். அதனால்தான் என்கவுன்டர்கள் குறித்து விசாரணையே இல்லாமல் இருக்கிறது'' - இப்படி கேரள அரசுக்கு எதிராக குற்றச்சாட்டுகளை சுமத்துவது ஏதோ மூன்றாம் தர நபர் அல்ல... ஆளும் சிபிஎம் கட்சியின் நட்பு கட்சியான இந்திய கம்யூனிஸ்ட். வெறும் குற்றச்சாட்டோடு நின்றுவிடாமல், என்கவுன்டர்கள் தொடர்பாக விசாரணை நடத்தி, அதை பினராயி முன் சமர்ப்பிக்கவும் செய்துள்ளது. ஆனால், எதுவும் மாறவில்லை.

image

கேரள அரசு மாவோயிஸ்டுகளுக்கு எதிராக சீரியல் என்கவுன்டர்களை தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. இந்த என்கவுன்டர்களால் பாதிக்கப்படுவது என்னவோ தமிழர்கள்தான். ஆம், கேரள முதல்வராக பினராயி விஜயன் பதவியேற்றது முதல், தற்போது வரை தண்டர்போல்ட் படையினரால் கொல்லப்பட்ட 8 மாவோயிஸ்ட்டுகளில் 7 பேர் தமிழர்கள். அஜிதா, குப்புராஜ், கார்த்தி, மணிவாசகம், ரமா, சீனிவாசன் என இறந்த தமிழர்கள் வரிசையில் இதோ இப்போது வேல்முருகனும். தமிழக கட்சிகளும் இதுகுறித்து வாய்திறக்க மறுக்க, எந்தவித தொந்தரவும் இல்லாமல் பினராயி அரசு சீரியல் என்கவுன்டர்களை கனகச்சிதமாக நடத்தி வருகிறது. இதுநாள் வரையிலும் இவர்களுக்கு குரல்கொடுத்து வந்த கேரள சிபிஐ கடைசியாக இறந்த வேல்முருகன் விவகாரத்தில் ஒருவார்த்தை கூட பேசவில்லை என்பதுதான் கூடுதல் சோகம்.

இந்த என்கவுன்டர் குறித்து மனித உரிமை ஆர்வலர்கள் கேள்வி மேல் கேள்விகளை தொடுக்க பினராயி விஜயனோ, "நேர்மையாக தங்கள் வேலையைச் செய்யும் காவல்துறையினரை புண்படுத்தும் எந்த நடவடிக்கைகளையும் அரசாங்கம் எடுக்காது. தங்களைத் தாக்க வந்த மாவோயிஸ்ட்களைதான் தண்டர்போல்ட் படையினர் சுட்டுக்கொன்றனர்" என்று கூலாக பதில் சொல்கிறார். இந்த முறையும் இதையேதான் சொல்லியிருக்கிறார்.

 

இரட்டை நிலைப்பாடு!

ஆளும் கட்சிகளாக உள்ள சிபிஐ மற்றும் சிபிஎம் இரண்டின் கடந்த தேர்தல் அறிக்கைகளிலும், "மாவோயிஸ்டுகள் அல்லது குடிமக்கள் அரசாங்கத்தை எதிர்க்கும் விஷயத்தில், அவர்கள் அடக்கப்பட மாட்டார்கள். அவர்கள் சட்ட நடவடிக்கைகள் மட்டுமே எடுக்க வேண்டும்" என்று கூறப்பட்டிருந்தது. ஆனால் தற்போது அதனை காற்றில் விட்டுவிட்டு எதிர் வழியில் அடக்குமுறைகளை கையாண்டு வருகிறது.

மக்களின் குடியுரிமை மற்றும் அரசியல் உணர்வைப் பற்றி பெருமிதம் கொள்ளும் கேரளா போன்ற ஒரு மாநிலத்தில், அதுவும் கம்யூனிஸ்ட் ஆட்சி நடக்கும் ஒரு மாநிலத்தில் என்கவுன்டர் மீண்டும் மீண்டும் நடைபெறுவது ஒரு தீவிர முரண்பாடு. மனித உரிமைகளை அப்பட்டமாக மறுக்கும் இந்த என்கவுன்டர் கொலைகள், ஒரு இடதுசாரிக் கட்சி தலைமையிலான அரசாங்கத்தின் நேர்மையற்ற தன்மையை அம்பலப்படுத்துவதாகத் தெரிகிறது என்று அரசியல் பார்வையாளர்கள் கொதிக்கிறார்கள்.

- மலையரசு

சற்று முன்எடிட்டர் சாய்ஸ்