Published : 10,Jul 2017 02:02 PM

அதிபர் பெயரில் தவறு: சீனாவிடம் மன்னிப்புக் கேட்டது அமெரிக்கா

America-apologizes-to-China

 

சீன அதிபர் ஜி ஜின்பிங்கை தைவான் அதிபர் என்று அமெரிக்க வெள்ளை மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தவறாகக் குறிப்பிடப்பட்ட சம்பவத்துக்கு அமெரிக்கா மன்னிப்புக் கேட்டது. 

ஜெர்மனியின் ஹேம்பர்க் நகரில் நடந்த ஜி20 மாநாட்டில் சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஆகியோர் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த சந்திப்பு குறித்து அமெரிக்க அதிபர் மாளிகை வெளியிட்ட செய்திக் குறிப்பில் ரிபப்ளிக் ஆஃப் சீனாவின் தலைவர் ஜி ஜின்பிங்குக்கு என்று குறிப்பிடப்பட்டிருந்தது. பொதுவாக தைவான் நாட்டையே ரிபப்ளிக் ஆஃப் சீனா என்று குறிப்பிடுவதுண்டு. அதேநேரம், பீப்புள்ஸ் ரிபப்ளிக் ஆஃப் சீனா (People's Republic of China) என்பதே சீனாவின் அதிகாரப்பூர்வ பெயர் ஆகும். இந்த விவகாரம் தொடர்பாக சீனா தரப்பிலிருந்து கடுமையான எதிர்ப்புக் கிளம்ப, அமெரிக்க அதிபர் மாளிகை தவறுக்காக மன்னிப்புக் கோரியிருக்கிறது. இந்த தகவலை சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ஜென் ஷாங் தெரிவித்தார். தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தவறு நேர்ந்துவிட்டதாக அமெரிக்க தரப்பில் வருத்தம் தெரிவிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார். ஒருங்கிணைந்த சீனாவின் ஒரு பகுதியாகவே தைவான் நாட்டை சீனா கருதி வருகிறது. ஆனால், பெரும்பாலான தைவான் மக்கள் தங்களது நாட்டை சுதந்திர நாடாகவே பார்க்கின்றனர். 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்