
அமெரிக்க அதிபர் தேர்தலில் பதிவான வாக்குகள் முழுவீச்சில் எண்ணப்பட்டு வரும் நிலையில், ட்ரம்ப் - பைடன் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. அதிபர் போட்டியில் வெற்றியாளர் யார் என்பது பற்றிய தெளிவான முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை.
உலகமே எதிர்நோக்கிக் காத்திருந்த அமெரிக்க அதிபர் தேர்தல் செவ்வாயன்று நடந்து முடிந்தது. பதிவான வாக்குகளை எண்ணும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இதுவரை வெளியான முடிவுகளின்படி ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் ஜோ பைடன் 264 தேர்வாளர் வாக்குகளையும், குடியரசுக்கட்சி வேட்பாளரும் தற்போதைய அதிபருமான டொனால்டு ட்ரம்ப் 214 தேர்வாளர் வாக்குகளையும் பெற்றுள்ளனர். இந்த வகையில் 270 வாக்குகளைப் பெறுபவரே அதிபராக முடியும். இரு வேட்பாளருக்கும் இடையே கடும் போட்டி நிலவுவதால், வெற்றியாளர் யார் என்பது இதுவரை தெளிவாகவில்லை.
புளோரிடா, டெக்சாஸ், டென்னஸி, விர்ஜீனியா உள்ளிட்ட மாகாணங்கள் ட்ரம்ப் வசம் வந்துள்ளன. அவரை எதிர்த்து போட்டியிட்ட ஜே பைடன் வாஷிங்டன், கலிபோர்னியா, நியூயார்க், நியூஜெர்சி, மிச்சிகன் உள்ளிட்ட மாநிலங்களை கைப்பற்றியுள்ளார்.
இதனிடையே, மிச்சிகன் மாகாணத்தில் வாக்கு எண்ணிக்கையில் குளறுபடிகள் இருப்பதாகக் கூறி அதிபர் டொனால்டு ட்ரம்ப் சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதே நேரத்தில், முன்னிலையில் இருக்கும் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன், முடிவுகள் முழுமையாக வெளியிடப்படும் வரை பொறுமை காக்குமாறு தமது ஆதரவாளர்களைக் கேட்டுக் கொண்டார்.